பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷ நிகழ்ச்சி

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (23:14 IST)
கரூர் அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷ நிகழ்ச்சி – நந்தி எம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
 
கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. கொங்கு ஸ்தலங்களில் மிகவும் பிரதான மிக்க இந்த திருத்தலமானது, பண்டைய காலம் முதல் தொன்மை மிக்கதாகும், இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் முன்பு வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் பல்வேறு அபிஷேகங்களும் அதனை தொடர்ந்து பலவித வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி எம்பெருமானுக்கு கும்ப ஆரத்தி, கோபுர ஆரத்தி, கற்பூர ஆரத்திகளை தொடர்ந்து மஹா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடவுள் அருள் பெற்றனர். மேலும், பொதுமக்கள் தங்களது தோஷங்கள் விலக, பிரதோஷம் அன்று நந்தி எம்பெருமானின் நடுவே ஈஸ்வரனை தரிசித்தால் புண்ணியமும் அருளும் சிறப்பாக கிடைக்கும் என்பதினால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதற்கான முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்