தென்னையை விட கூடுதல் லாபம் தரும் ஜாதிக்காய்!

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2024 (18:18 IST)
தென்னை, பாக்கு மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்கான ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாகுபடி சாத்தியமே’ எனும் மாபெரும் கருத்தரங்கு, தராபுரத்தில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சமவெளியில் ஜாதிக்காய் சாத்தியமா என்று பொள்ளாச்சியை சேர்ந்த விவசாய சகோதரர்களை சந்தித்து உரையாடினோம். 
 
அந்த விவசாய சகோதரர்களான G.P. பிரதர்ஸ், தென்னையில் வரும் வருமானத்தை விட அதிகளவு வருமானம் ஜாதிக்காய் சாகுபடி மூலம் கிடைக்கும், மேலும் வருடம் கூட கூட வருமானம் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். இவர்களின் பண்ணை பொள்ளாச்சி அருகில் கோபாலபுரத்தில் ஒரு பழ மரங்களின் பண்ணை என்று கூறுமளவிற்கு பல்வேறு பழ மரங்களுடன் நிறைந்திருந்தது. அதன் உரிமையாளர்கள் கார்த்திக் மற்றும் வினோத் சகோதர்கள் எங்களை வரவேற்று பண்ணையைப் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
 
வினோத் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை, “எங்களுக்கு இந்த பண்ணையை உருவாக்கும் ஆர்வத்தை கொடுத்தவர் எங்கள் அப்பாதான், அவரது எண்ணப்படி தான் நாங்கள் இப்பண்ணையை உருவாக்கியுள்ளோம். எங்களது பண்ணயை தென்னை, டிம்பர், ஜாதிக்காய், பல்வேறு பழ மரங்கள், அழகு பூச்செடிகள் என பல்லுயிர் சூழலோடு உருவாக்கியுள்ளோம். தென்னை மட்டும் 18 ஏக்கரில் இருக்கு, அதில் ஜாதிக்காய் ஊடுபயிர் செய்திருக்கோம்.” என்று பண்ணையைப் பற்றி ஒரு அறிமுகம் கொடுத்தார்.
 
தொடர்ந்து ஜாதிக்காய் குறித்து அவர் பேசத் தொடங்கினார், “இப்ப தேங்காய் 10 ரூபாய்க்குதான் எடுக்கறாங்க, அதிலும் பறிப்புக் கூலி, பராமரிப்பு செலவு கழிச்சா 6 – 7 ரூபாய்தான் கிடைக்குது. நாங்க வருமானத்தை உயர்ந்த நினைத்தபோது ஜாதிக்காய்தான் சாகுபடி சரியான தீர்வா தெரிஞ்சுது, நாங்க கேரளா போன்ற பல இடங்களில் பார்த்தபின் இந்த முடிவெடுத்தோம்.”
 
“பொள்ளாச்சியில பிரபலமானது வட்ட இலை (Round leaf) ஜாதிக்காய் ரகம்தான். அதைதான் நாங்கள் அதிகமாக நட்டிருக்கோம், அதோட நாடன் ஜாதிக்காயும் நட்டிருக்கோம். 350 ஜாதிக்காய்  மரங்கள் காய்ப்பில் இருக்கு, எங்கள் தோட்டத்தில் இருப்பவை 7 வருஷ மரம். தென்னையில் ஊடுபயிரா மட்டுமில்லாம மற்ற மரங்களோட சேர்த்தும் நட்டுள்ளோம். மொத்தம் 700 மரங்கள் இருக்கு. ஜாதிக்காய் வளர்வதற்கு ஆரம்பத்தில் நிழல் அவசியம், தென்னை மரத்தோட நடும்போது பாதி நிழல் பாதி வெய்யில் (Dancing shadow) நல்லாவே கிடைக்கும்.” என்றவர், இன்னொறு முக்கிய விஷயத்தை கூறினார். தென்னையோடு ஜாதிக்காய் வைத்தாலும் வாய்க்கால் பாசனம் கூடாதாம், ஜாதிக்காய் அதிக தண்ணீர் தேவையில்லை என்பதால் சொட்டுநீர் போட்டு காய்ச்சலும்-பாய்ச்சலும்மாக தண்ணீர் கொடுத்தால் போதும் என்கிறார்.
 
அவர்கள் பண்ணையில் ஜாதிக்காய் நாற்று உற்பத்தியும் செய்கிறார்கள், அதைப்பற்றி அவர்கள் கூறியது, “நாங்கள் நாடன் ரக ஜாதிக்காய் கன்றில், வட்ட இலை ஜாதிக்காயை ஒட்டு கட்டுகிறோம். நாடன் ரகம் காய் சிறியது, அதிக காய்கள் வரும் என்றாலும் பத்திரி எடை குறைவாக இருக்கும். வட்ட இலை ரகத்தின் காய்கள் பெரியது, நல்ல விலையும் கிடைக்கும் அதனால பொள்ளாச்சி விவசாயிகள் வட்ட இலை ரகத்தைதான் அதிகம் விரும்புகிறார்கள்” என்றார்.
 
நம்மிடம் பேசிக்கொண்டே ஒரு ஜாதிக்காயை பறித்து காண்பித்தார். “ஜாதிக்காய் முத்திடுச்சுன்னா இப்படி வெடிச்சுடும், வெடிச்சவுடன் பறிக்கனும், வெய்யில் காலம்னா 3 நாளுக்குள்ள பறிக்கலாம், ஆனால் மழை காலத்துல உடனே பறிக்கனும், அப்படி பறிக்கலைன்னா ஜாதிக்காயில் பூஞ்சை வந்துரும். ஜாதிக்காய் கெட்டுப்போகும் நல்ல விலையும் கிடைக்காது. பூஞ்சை அதிகமாயிட்டா அதுல அப்லாடாக்சின் என்ற ஒரு நஞ்சு வந்துடும்,  அதை வியாபாரிங்க வாங்க மாட்டாங்க. 
 
பறிச்ச காய்களை உடனே நல்லா காயவைப்பது அவசியம். ஜாதிக்காயை வெயிலில் 1 -2 நாட்கள் நன்றாக உலர்த்த வேண்டும், ஜாதிப்பத்திரியை ஒரு நாள் வெய்யிலில் வைக்க வேண்டும். வெய்யில் இல்லாத காலங்களில் சூரிய உலர்த்தி, மின் உலர்த்தி, மின்விசிறி (Drying fan) போன்றவற்றை பயன்படுத்தி உலர்த்த வேண்டும். நான் மழைக்காலத்தில் மின்விசிறிதான் (Static fan) பயன்படுத்துறேன், இப்படி காயவச்ச ஜாதிக்காயை ஒரு வருடத்திற்கு பாதுகாக்கலாம்.” என்றார்.
 
தொடர்ந்து ஜாதிகாய் சந்தை வாய்ப்பு குறித்து பேசினார், “ஜாதிக்காய் பொறுத்தவரை விலை சற்று மாறுமே தவிர விற்பனை வாய்ப்பு நன்றாகவே உள்ளது. மரம் காய்க்க ஆரம்பிச்சுட்டா வருஷா வருஷம் காய் அதிகமாயிட்டே இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். நல்ல வளர்ந்த மரத்துல வருஷத்துக்கு 1000 காய் வரும், ஆனால் தென்னையில் வருஷத்துக்கு 100 – 120 காய்தான் வரும். காய்ப்பு அதிகம் கிடைத்தாலும் நான் உடனே விற்க மாட்டேன் நல்ல விலை கிடைக்கும் வரை காத்திருந்து விற்பேன். ஜாதிக்காயை காய வச்சுட்டா ஒரு வருஷம் வரை நல்லா இருக்கும், அதனால் பூச்சி வந்திருமோ என்ற பயம் இல்லை.”
 
“தோராயமா ஒரு முழு ஜாதிக்காய்க்கு 4.50 – 5 ரூபாய் நிச்சயம் கிடைக்கும். தென்னைக்குள்ள ஊடுபயிரா செய்யும் போது 65 மரம் இருந்தாலும், 1000 காய்க்கு 3,25,000 கிடைக்கும். எங்ககிட்ட நான்கு முதல் எட்டு வயசான மரம்தான் இருக்கு, இப்ப ஜாதிக்காயில் ஒரு லட்சத்துக்கு மேல வருமானம் வருது, மரங்கள் வளர்ந்த பின்னர் ஜாதிக்காய் எங்களுக்கு முக்கிய வருமானம் தரும் பயிராக இருக்கும். தற்போது வியாபாரிங்க ஜாதி பத்திரியை 2300 ரூபாய்க்கும், ஜாதிக்காயை 350 – 400 ரூபாய்க்கு எடுத்துக்கிறாங்க.” என்று கூறியவர், வெளிநாட்டினர் ஜாதிக்காயில் இருந்து மதுபானம் (Votka) தயாரிக்கிறார்கள் என்ற கூடுதல் தகவலையும் கூறினார்.
 
இது போன்ற மேலும் பல ஜாதிக்காய் மற்றும் மரவாசனைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் அனுபவங்களை தெரிந்து கொள்ள, ஈஷா காவேரி கூக்குரல் நடத்தும் “சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமே” என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ளுங்கள். 
 
இக்கருத்தரங்கு செப்டம்பர் 1-ஆம் தேதி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் உள்ள ஸ்ரீ லெட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்