இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை:குழப்பம் காரணமாக மாற்றம்

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (16:13 IST)
இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில், இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிறம் கொண்ட சீருடையை அணிந்து பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது வரையில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது.

இந்நிலையில் வருகிற ஜுன் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கிற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நீல நிற சீருடையை அணிந்து பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நீல நிறத்திற்கு பதிலாக ஆரஞ்சு நிற சீருடையை அணிந்து பங்கேற்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து அணியின் சீருடை நீல நிறமாக இருக்கும் பட்சத்தில், இரு அணிகள் பங்கேற்கும் போது பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்திய அணியின் சீருடை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் நீல நிற சீருடை, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பதிந்து போன ஒன்று. ஒரு போட்டிதான் என்றாலும் நீல நிறத்தை மாற்றுவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு, மனநிறைவு இல்லாத ஒரு விஷயமாக அமையலாம்.

ஆனாலும் இந்த சீருடை மாற்றத்தை, சில கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்கத்தக்க முயற்சி என்று பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்