SL Vs Aus ODI: 30 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி கண்ட இலங்கை அணி

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (22:59 IST)
இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
 
1992ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.
 
1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட தொடரை, இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை அணி அப்போது, வெற்றியை தன்வசப்படுத்தியது.
 
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடர், தற்போது இலங்கையில் நடைபெற்று வருகின்றது.
 
இதன்படி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
 
 
இதில் முதல் போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன், ஏனைய மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி தொடர் வெற்றியை பதிவு செய்து, தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை தன்வசப்படுத்தியது.
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி
கொழும்பு - ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நான்காவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பகலிரவு போட்டியாக நேற்று (21) நடைபெற்றது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ரன்களை பெற்றது.
 
இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 110 ரன்களையும், தனஞ்சய டி சில்வா 60 ரன்களையும் எடுத்திருந்தனர்.
 
பதிலுக்கு 259 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 254 ரன்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.
 
பிரகாசிக்காத ஆஸ்திரேலிய வீரர்கள்
 
ஆஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வார்னர் 99 ரன்களை பெற்றார்.
 
ஆஸ்திரேலிய அணியின் ஏனைய வீரர்கள் நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் சரியான முறையில் பிரகாசிக்கவில்லை.
 
இதன்படி, இலங்கை அணி ஐந்து போட்டிகளை கொண்ட தொடரில், மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றியை தன்வசப்படுத்தியது.
 
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 24ம் தேதி கொழும்பு - ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
30 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் தொடரை கைப்பற்றியமைக்கு இலங்கை அணிக்கு அந்நாட்டின் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இலங்கை அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்