இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்த நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா வெற்றிக்காக தனியாளாகப் போராடினார்.
அவருக்கு உதவியாக கீழ்வரிசை பேட்ஸ்மேன்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரும் போராடினர். ஆனால் இந்த போட்டியை இந்திய அணியால் வெற்றி பெறமுடியவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் மட்டும் இணைந்து 90 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடித்தனர். இந்த போட்டியை இந்திய அணித் தோற்பதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது ரிஷப் பண்ட்டின் விக்கெட்தான்.
வழக்கமாக இதுபோன்ற இன்னிங்ஸ்களில் பண்ட் பொறுப்பை ஏற்று சிறப்பாக விளையாடி இன்னிங்ஸை முடிப்பார். இந்நிலையில் தோல்விக்குப் பின் பேசியுள்ள பண்ட் “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இறுதிவரை போராடினோம். ஆனால் எல்லா நேரமும் முடிவு நாம் எதிர்பார்த்தபடி அமைவதில்லை. டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் நமக்குக் கற்றுக் கொடுப்பதை நிறுத்தாது” எனப் பேசியுள்ளார்.