இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த விக்கெட்கீப்பர் & பேட்ஸ்மேனாக (டெஸ்ட் போட்டிகளில்) ரிஷப் பண்ட் உருவாகி வருகிறார். இந்திய அணியின் பேட்டிங் பின்வரிசையில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் தூக்கி நிறுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த தொடரில் மான்செஸ்டரில் நடந்த போட்டியில் ரிஷப் பண்ட் கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தைக் காலில் வாங்கினார். இதன் காரணமாக அவருக்கு காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த காயத்தினுடனேயே அவர் அந்த இன்னிங்ஸில் மீண்டும் களமிறங்கி ஆடினார். ஆனால் அதன் பிறகு தொடரை விட்டு வெளியேறினார்.
இதன் காரணமாக தற்போது நடக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாட முடியாமல் போனது. தற்போது குணமாகி வரும் ரிஷப் பண்ட், அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடரில் மீண்டும் அணிக்குத் திரும்ப பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக ரஞ்சி போட்டிகளில் டெல்லி அணிக்காக அவர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.