தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன் டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி அதில் தன்னை ஒரு மிகச்சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளராக நிரூபித்துக் காட்டினார். அதன் பின்னர் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் ஒரு சில ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதற்கு அவரின் காயமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர் கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த அணி இதுவரை 9 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் ஒரு போட்டியில் கூட அவருக்கு இன்னும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இது தமிழக ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்மந்தமானக் கேள்வியை எதிர்கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆலோசகர் கெவின் பீட்டர்சன் “நடராஜன் சிறந்த பிளேயர்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களால் 12 வீரர்களைதான் அணியில் எடுக்க முடியும். அணியில் அவரை எந்த இடத்தில் விளையாட வைக்கலாம் என நீங்கள் அறிவுரை சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் இந்த சீசனில் நடராஜனுக்கு வாய்ப்பிருக்காது என்பதை சூசகமாக பீட்டர்சன் கூறியுள்ளார்.