பாகிஸ்தான் இராணுவத்தால் பக்திஹா மாகாணத்தில் நடத்தப்பட்டதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடம்பெறும் முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நவம்பர் 5 முதல் 29 வரை லாகூரில் நடைபெறவிருந்த இத்தொடரிலிருந்து விலகிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தத் தாக்குதலை "பாகிஸ்தான் ஆட்சியின் கோழைத்தனமான செயல்" என்று கண்டித்துள்ளது. உயிரிழந்த கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், பொதுமக்களை குறிவைத்த இந்த தாக்குதலை "காட்டுமிராண்டித்தனமானது" என்று வர்ணித்து, ஆப்கன் கிரிக்கெட் வாரிய முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.