இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சி ஆளாருமான கௌதம் கம்பீர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் மின்னஞ்சல் வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கௌதம் கம்பீர், தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு கோரி டெல்லி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளதாகவும், இதனை அடுத்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் இந்த மின்னஞ்சல் வந்திருப்பதாகவும், இரண்டு முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் “நாங்கள் உன்னை கொல்ல போகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே, டெல்லி மக்களவைத் தொகுதியின் பாஜக எம்பியாக பதவி வகித்த போதும், கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பெஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த நிலையில், அதனை கண்டித்து கௌதம் கம்பீர் சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில், தற்போது அவருக்கு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.