என்னை பலிகடாவாக்கி விட்டனர்- மேத்யூஸ் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (20:05 IST)
ஆசியக் கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறிய இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸின் பதவி பறிக்கப்பட்டதால் கடும் அதிருப்தியுள்ளார்.


இலங்கை கிரிக்கெட் அணி தற்போது தன் சோதனைக் காலத்தில் உள்ளது. ஐந்து முறை ஆசியக்கோப்பைத் தொடர் சாம்பியனான இலங்கை அணி இம்முறை லீக் சுற்றோடு வெளியேறியது. அதைவிட பேரதிர்ச்சியாக அந்த அணி லீக் சுற்றில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எனக் கத்துக்குட்டி அணிகளோடு தோல்வியுற்று நடையைக் கட்டியது.

தற்போது தோல்விக்குக் காரணமாக அந்த அணியின் தேர்வுக்குழுவினர் அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மேத்யூஸை நீக்கி உள்ளனர். இதனால் மனமுடைந்துள்ள மேத்யூஸ் தான் பலிகடாவாக்கப் பட்டுள்ளதாக அணி நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனை சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ‘இந்த தோல்வி குறித்து இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் தற்போது பதவி விலகிவிட்டு ஓட விரும்பவில்லை. ஏனெனில் உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த பதவிப் பறிப்பு மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் நான் எல்லா முடிவுகளையும் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழுவினரோடு கலந்தாலோசித்தே எடுத்து வந்துள்ளேன். இம்முடிவால் தற்போது நான் பழிவாங்கப்பட்டது போல் உணர்கிறேன். மேலும் அணி நிர்வாகம் விரும்பினால் நான் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். அணிக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அணியின் செயல்பாடுகள் சரியாக இல்லாத பட்சத்திலும் ஒரு பேட்ஸ்மேனாக மேத்யூஸின் பங்களிப்பு சிறப்பாகவே உள்ளது. கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 888 ரன்களைக் குவித்துள்ள அவரின் சராசரி 59.20. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி ஒருநாள் தொடரில் கூட 235 ரன்கள் குவித்திருந்தார்.

சங்கக்கரா, ஜெயவர்த்தனே மற்றும் தில்ஷான் போன்ற மூத்த வீரர்களின் ஓய்வுக்குப் பின்னர் அந்த அணி மிகவும் தடுமாறி வருகிறது. திறமையான இளம் வீரர்களைக் கொண்டு தனது அணியை திடப்படுத்திக் கொள்ள முடியாமல் ஜிம்பாப்வே போன்ற அணிகளோடு கூட தொடரை இழந்து வருகிறது. உலகக்கோப்பை நெருங்கி வரும் நேரத்தில் மேத்யூஸின் பதவிப் பறிப்பு அணியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்