அந்த தொடரில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார். இந்நிலையில் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த முடிவை ரோஹித் அறிவித்துள்ளார். இதற்கிடையில் விராட் கோலியும் ஓய்வை அறிவித்ததால் இந்திய அணியில் பெரும் வெற்றிடம் உருவாகியுள்ளது.
இதையடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்தக் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்துப் பேசியுள்ள அஸ்வின் “இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி முற்றிலும் புதிய அணியாக இருக்கும். அந்த இளம் அணியில் அனுபவ வீரராக பும்ரா இருக்கிறார். அதனால் அவர் கேப்டனுக்கான தேர்வுப் பட்டியலில் இருப்பார். ஆனால் அவரின் உடற்தகுதியைக் கொண்டு தேர்வாளர்கள் முடிவை எடுப்பார்கள்” எனக் கூறியுள்ளார். பலரும் பும்ராவுக்குக் கேப்டன்சி கொடுக்கப்படும் என்று சொல்லும் நிலையில் அடுத்தக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.