பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம், ஆன்லைன் சூதாட்ட செயலி ஒன்றை விளம்பரப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லாகூரில் உள்ள தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனத்தில் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
முகமது ஃபைஸ் என்பவர் வாசிம் அக்ரம் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். "பாஜி" என்ற வெளிநாட்டு சூதாட்ட செயலியின் விளம்பர தூதராக வாசிம் அக்ரம் செயல்படுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த சூதாட்ட செயலியின் விளம்பரப் புகைப்படங்களிலும் காணொலிகளிலும் வாசிம் அக்ரம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.