சென்னை டெஸ்ட்: சாதனைகளுக்கு காத்திருக்கும் விராட் கோலி, அலஸ்டைர் குக்

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (19:13 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட வாய்ப்புள்ளது.


 

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் நாளை 5ஆவது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் சில முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி இதுவரை 640 ரன்கள் குவித்துள்ளார். மேற்கொண்டு 135 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

சுனில் கவாஸ்கர் 1971ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் 774 ரன்கள் குவித்ததே இந்திய வீரர் ஒருவர் ஒரு தொடரில் குவித்த அதிகப்பட்ச ரன்கள் ஆகும்.

அதேபோல் இங்கிலாந்து வீரர் அலஸ்டைர் குக் இன்னும் 2 ரன்கள் எடுத்தால் 11ஆயிரம் குவித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தைப் பிடிப்பார். இதுவரை, அலஸ்டைர் குக் அவர்கள் 10998 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினால் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். முன்னதாக பி.எஸ்.சந்திரசேகர் 1972ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 35 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

 
அடுத்த கட்டுரையில்