தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி காலமானார் அவரது மறைவையொட்டி பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் நாளை சென்னையில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடுவார்கள் என தகவல் வந்துள்ளது.
இது தொடர்பாக இரண்டு அணி வீரர்களுக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜெயலலிதா மறைவையொட்டி சென்னையில் நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் போட்டியை தள்ளிவைக்க இருப்பதாக பேசப்பட்டது.
மேலும் ஜெயலலிதா மறைவையொட்டி ஜடேஜா, சேவாக் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களும் தங்கள் இரங்கல்களை கூறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தி தொலைக்காட்சி முன்னதாகவே தவறுதலாக ஜெயலலிதா இறந்துவிட்டார் என்ற செய்தியை சொன்னதற்காக இந்திய வீரர் ஜடேஜா தந்தி டிவியை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.