இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது, அது அவர்களின் ஏழ்மை நிலையை உயர்த்தாது என்ற பொதுவான கருத்து 2020 ஐபிஎல் ஏலத்தின்போது தவிடு பொடியானது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யாஸவி ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
மிகவும் சாதாரணமான பின்னணியில் இருந்துவந்த யாஸவி ஜெய்ஸ்வால், ஐபிஎல் மூலம் கோடீஸ்வரன் ஆனது ஓர் அசாத்திய சாதனை மட்டுமல்ல நம்பமுடியாத ஒன்றும்கூட.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இவரின் தந்தை ஒரு கடை வைத்திருந்தார். 11 வயதில் மும்பை வந்த யாஸவி ஜெய்ஸ்வாலுக்கு கிரிக்கெட் விளையாடுவது ஒரு பெருங்கனவாக, தீராத ஆசையாக இருந்தது.
கிரிக்கெட் விளையாடுவதற்கு பணம் வேண்டுமே? தனது கிரிக்கெட் பயிற்சிக்காகவும், தனது லட்சியத்திற்காகவும் யாஸவி ஜெய்ஸ்வால் செய்தது யாரையும் நெகிழவைக்கும்.
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள்.
தனக்கு மிகவும் பிடித்த மும்பை ஆசாத் மைதானம் அருகே இவர் பானிபூரி விற்று தனக்கு வேண்டிய பணத்தை ஈட்டினார்.
மீண்டும் உத்தரபிரதேசம் போவதற்கு முன்பு கிரிக்கெட்டில் சாதித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் போராடிய ஜெய்ஸ்வால், 2015-ஆம் ஆண்டு 13 விக்கெட்டுகள் மற்றும் 319 ரன்கள் எடுத்து பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடந்த அரையிறுதிப் போட்டியில் மிக அற்புதமாக விளையாடி சதம் அடித்து இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற காரணமாக இருந்தார்.
பாகிஸ்தானின் பந்துவீச்சை மைதானம் எங்கும் விரட்டிய ஜெய்ஸ்வால், 113 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.