பிரேசில் நாடாளுமன்றத்தில் வன்முறை: கவலை தெரிவித்த பிரதமர் மோதி; என்ன நடக்கிறது?

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (22:54 IST)
பிரேசில் நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபடும் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் லூலா சூளுரைத்துள்ளார்.

பிரேசில் நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் கவலை கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட உலகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பிரேசிலில் என்ன நடக்கிறது?
 
பிரேசில் நாட்டின் புதிய அதிபராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இடதுசாரி கட்சியை சேர்ந்த லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி ஆதரவாளரான ஜேர் போல்சனாரோவுக்கு எதிராக 50.9% வாக்குகள் பெற்று அவர் பிரேசில் நாட்டின் அதிபராக பதவியேற்றார். அதிபர் தேர்தலில் லூலா வெற்றி பெற்றது முதல், அவருக்கு எதிராக முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அதிபர் மாளிகை, உச்சநீதிமன்றம் மற்றும் நாடாளுமன்ற கட்டடங்களின் முன்பாக வலதுசாரி போராட்டகாரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
போராட்டம் தீவிரமடைந்ததை ஒட்டி, கடந்த ஞாயிறன்று தலைநகர் பிரேசிலியா முழுவதும் பிரேசில் தேசிய கால்பந்து அணியின் மஞ்சள் நிற டி ஷர்ட்டை அணிந்துள்ள போராட்டகாரர்கள், தடைகளை மீறி பிரேசிலின் உச்சநீதிமன்றம், அதிபர் மாளிகையினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
 
 
கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக பிரேசிலியாவின் கவர்னர், ஐபனிஸ் ரோச்சைவை 90 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து பிரேசிலின் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் டி மொரயீஸ் உத்தரவிட்டுள்ளார். போராட்டகாரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து உச்சநீதிமன்றம், அதிபர் மாளிகை உள்ளிட்ட இடங்கள் ஞாயிறு மாலையன்று மீட்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. தலைநகர் பிரேசிலியாவில் உள்ள முக்கிய அரசுக் கட்டடங்களையும், எல்லைகளையும் 24 மணி நேரத்திற்கு மூட அதிபர் உத்தரவிட்டுள்ளார். அதிபர் லூலா, உச்சநீதிமன்றத்தை நேரில் பார்வையிட்டு கலவரத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கலவரம் தொடர்பாக இதுவரை 200 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களிடம் சட்டத்துறை அமைச்சர் ஃபிளாவ்யோ டினோ தெரிவித்துள்ளார். பிரேசில் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி, பேரணியில் கலந்து கொள்ள பிரேசில் நாட்டின் இடதுசாரி அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
 
கலவரத்தை தடுக்க தவறியதா காவல்துறை?
 
அதிபர் மாளிகையில் வன்முறை
 
கலவரம் தொடர்பாக பேசிய அதிபர் லூலா, "பிரேசிலின் வரலாற்றில் இது போல நடந்தது கிடையாது," என்று தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறையை "நாசக்கரார்கள் மற்றும் பாசிஸ்டுகளின் செயல்" என அதிபர் குறிப்பிட்டார்.

மேலும் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டகாரர்களை தடுக்க தவறிய பாதுகாப்பு படையினரை, "திறமையற்ற, நம்பிக்கை இழக்க செய்யும் நபர்கள்" என்று அதிபர் கடுமையாக சாடினார். "போராட்டகாரர்களுக்கு தலைநகருக்கு செல்ல காவல்துறையினர் வழி காட்டும் புகைப்படங்களை நான் பார்த்தேன். இந்த வன்முறைக்கு நிதி பங்களிப்பு செய்த நபர்கள் யார் என்று கண்டறியப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்," என்று அதிபர் லூலா கூறியுள்ளார். பிரேலிசியா நகரத்திற்குள் போராட்டகாரர்கள் நுழைய பயன்படுத்திய 40 பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளதாக, பிரேசில் நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ஃபிளாவ்யோ டினோ தெரிவித்தார். பிரேசில் நிறுவனமான ஓ குளோபோ வெளியிட்ட வீடியோவில், நாடாளுமன்ற கட்டடத்தின் பின்னணியில் கலவரத்தில் ஈடுப்பட்டவர்களுடன் காவல்துறையினர் சிரித்து பேசி, புகைப்படங்கள் எடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
 
முன்னாள் அதிபர் மறுப்பு
 
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து வரும் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜேர் போல்சனாரோ, பிரேசிலில் நடைபெற்றுள்ள வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வன்முறைக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற அதிபர் லூலாவின் பதவியேற்புக்கு பிறகு, போல்சனாரோ பிரேசிலில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.
 
பிரேசிலில் நடக்கும் போராட்டத்தின் காரணம்
 
நாடாளுமன்றத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தையும் காவல்துறையினர் மூடி வைத்துள்ளனர். பிரேசிலியா நகரத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தணிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையன்று, 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாடாளுமன்ற சாலையை நோக்கி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பியதை பிபிசி நேரில் பார்த்தது. அந்த வழியாக நடந்து வந்த நபர்களின் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. "மோசடியாக நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். நான் வரலாறு படைக்க இங்கு வந்துள்ளேன். எனது மகள்களுக்காக நான் இங்கு வந்துள்ளேன்," என்று ஏ.எஃப்.பி செய்தி முகைமையிடம் பேசிய 27 வயது பொறியாளரான லிமா தெரிவித்தார். பிரேலியாவில் வசிக்கும் பலரும் ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பிரேசில் நாட்டின் வரலாற்றில் சோகமான நாளாக பதிவாகும் என தெரித்தனர். பிபிசியிடம் பேசிய 21 வயதான டேனியல் லசெர்டா, "நானும் போல்சனாரோவுக்கு தான் வாக்களித்தேன். இந்த வன்முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. புதிய அதிபரை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம், ஆனால் அதை வன்முறையின் மூலம் வெளிப்படுத்தக்கூடாது," என்று தெரிவித்தார். அமெரிக்க தலைநகரில் 2021ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட கலவரத்துடன் பிரேசிலில் நடைபெற்ற வன்முறையை ஓப்பிட்டு விமர்சினங்களை முன்வைத்தனர்.
 
பிரதமர் மோதி கண்டனம்
 
பிரேசிலில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர். பிரேசில் வன்முறை தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோதி, "பிரேசில் அரசுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் கவலை அளிப்பதாகவும், ஜனநாயக மாண்புகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்."
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "பிரேசிலில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறையை கண்டிப்பதாகவும், புதிய அதிபர் லூலாவுக்கு உறுதுணையாக அமெரிக்க துணை நிற்கும்," என பதிவிட்டுள்ளார். ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், பிரேசில் மக்களின் முடிவுக்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சில லத்தீன் அமெரிக்க நாடுகளும் அதிபர் லூலாவுக்கு ஆதரவான கருத்துகளை முன்மொழிந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்