தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

Senthil Velan

திங்கள், 1 ஜூலை 2024 (12:20 IST)
ஒரு குற்றமும் செய்யாத தமிழக மீனவர்கள் மீது பொய்யான கொலை வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 பேரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள இலங்கைக் கடற்படையினர், அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். ஒரு குற்றமும் செய்யாத தமிழக மீனவர்கள் மீது பொய்யான கொலை வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
 
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், கடலூர் மாவட்ட மீனவர் ஒருவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் என மொத்தம் 10 பேர் கடந்த ஜூன் 23ஆம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்களின் சுற்றுக்காவல் படகை தமிழக மீனவர்களின் படகு மீது மோதியுள்ளனர்.
 
அதில் சுற்றுக்காவல் படகில் இருந்த ரத்னாயகா என்ற வீரர் கடலில் விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தமிழக மீனவர்கள் 10 பேரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த நாளே கடலில் விழுந்து மீட்கப்பட்ட கடற்படை வீரர் ரத்னாயகா உயிரிழந்து விட்டதால் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவரை அழைத்த இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள், நடுக்கடலில் நடந்த சண்டையில் தான் இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா கொல்லப்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
அதேபோல், இந்தியாவுக்கான இலங்கை தூதர் சேனுகா செனவிரத்னே தில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இலங்கை கடற்படை வீரர் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசின் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கு கடுமையாக தண்டனையை பெற்றுத்தருவதன் தொடக்கமாகவே இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செயல்பாடுகள் தெரிகின்றன.
 
இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகாவின் உயிரிழப்புக்கு தமிழக மீனவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. அவர்கள் அப்பாவிகள். வங்கக்கடலில் பிழைப்புக்காக மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கைது செய்யும் நோக்குடனும், தாக்கும் நோக்குடனும் அவர்களின் படகுகள் மீது இலங்கைக் கடற்படை வீரர்கள், தங்களின் ரோந்து படகுகளை அதிவேகமாக ஓட்டி வந்து மோதினார்கள்.
 
அதனால் ஏற்பட்ட நிலைகுலைவில் தான் இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா முதுகுத் தண்டில் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனின்றி உயிரிழந்தார். இது முழுக்க முழுக்க விபத்து. அதுவும் இலங்கைக் கடற்படையினரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து. அதற்கு எந்தத் தவறும் செய்யாத அப்பாவி தமிழக மீனவர்களை பொறுப்பாக்குவதும், தண்டிக்கத் துடிப்பதும் நியாயமல்ல.
 
இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா கொலை வழக்கில் தமிழக மீனவர்களை தொடர்புப்படுத்தி இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரியும் என்ன பதில் கூறினார்கள்? என்பது தெரியவில்லை. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க இலங்கை தொடர்ந்து சதி செய்து வருகிறது.
 
அதற்காக தமிழக மீனவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர், இலங்கை வீரர்களை கொலை செய்கின்றனர் என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அவற்றை மத்திய அரசு ஏற்கக் கூடாது. இன்னும் கேட்டால் இதுவரை 800-க்கும் கூடுதலான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு காரணமான இலங்கை வீரர்களை தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி தான் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
 
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை விடுதலை செய்து தாயகத்துக்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக வங்கக் கடலில் எல்லைகளைக் கடந்து தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்கள் முறை வைத்து மீன்பிடிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்