அமெரிக்காவின் 'மரண' ஆயுதங்கள், ரஷ்யாவின் ஒரு லட்சம் வீரர்கள் - யுக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (10:16 IST)
யுக்ரைனின் எல்லையில், ரஷ்யா ஒரு லட்சம் வீரர்களைக் குவித்திருக்கும் நிலையில், அமெரிக்கா அங்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறது. பிரிட்டன் தனது வீரர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்திருக்கிறது.
 
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவானவரை யுக்ரைனின் அதிபராக நியமிக்க விளாதிமிர் புதின் திட்டமிட்டிருப்பதாக பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது.
 
முன்னெப்போதும் இல்லாத வகையில், யுக்ரைன் எம்.பி. யெவென் முரயேவ் என்பவரது பெயரைக் குறிப்பிட்டு, அவரை நாட்டின் அதிபராக்க ரஷ்யா முயல்வதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை கூறியிருக்கிறது.
 
ரஷ்யா 100,000 துருப்புக்களை யுக்ரைனுடனான தனது எல்லைக்கு அருகில் குவித்துள்ளது. ஆயினும் யுக்ரைன் மீது படையெடுக்கப் போவதாக வெளியாகும் தகவல்களை மறுத்துள்ளது.
ரஷ்யா யுக்ரைனுக்குள் ஊடுருவினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என பிரிட்டன் அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
 
"இன்று வெளியாகியிருக்கும் தகவல்கள் யுக்ரைனைத் தகர்ப்பதற்கு ரஷ்ய எடுத்துவரும் நடவடிக்கையின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன." என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் கூறினார்:
 
"ரஷ்யா பதற்றத்தைத் தணிக்க வேண்டும். ஆக்கிரமிப்பையும் தவறான தகவல் கொண்ட பரப்புரையையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ராஜீயப் பாதையை தொடர வேண்டும்"
 
"பிரிட்டனும், கூட்டாளிகளும் மீண்டும் மீண்டும் கூறி வருவது போல், யுக்ரைனில் ரஷ்ய ராணுவ ஊடுருவல் என்பது கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பெரிய மூலோபாய தவறாக இருக்கும்."
 
2014 ஆம் ஆண்டு கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்ட போது ​​யுக்ரைனின் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது.
 
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யப் படைகள் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையில், மற்றொரு படையெடுப்பு அல்லது ஊடுருவல் நிகழலாம் என்று மேற்கத்திய, யுக்ரைனிய உளவு அமைப்புகள் கூறுகின்றன.
 
ஆனால் எந்தத் தாக்குதலுக்கும் திட்டமிடவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் "தவறான தகவல்களைப் பரப்புகிறது" என்றும், " ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்தவும்" தனது ட்விட்டர் பக்கத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.
 
ஊடக அதிபரான முராயேவ் 2019 தேர்தலில் அவரது கட்சி 5% வாக்குகளைப் பெறத் தவறியதால், அவருக்கு யுக்ரைன் நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்கவில்லை.
 
பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் "குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது" என்று அவர் அப்சர்வர் செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.
 
"இது தர்க்கத்துக்கு ஒவ்வாதது. நான் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ளேன். அங்குள்ள எனது தந்தையின் நிறுவனத்தில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று முராயேவ் கூறினார்.
 
ரஷ்ய உளவு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகக் வேறு நான்கு யுக்ரைனிய அரசியல்வாதிகளையும் பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
 
2014 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்ட ரஷ்ய ஆதரவு அதிபர் விக்டர் யானுகோவிச்சின் கீழ் பிரதமராக பணியாற்றிய மைகோலா அசாரோவும் அவர்களில் அடங்குவர்.
 
அஸரோவ் பின்னர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார், அங்கு அவர் நாடுகடந்த ஒரு பொம்மை அரசாங்கமாக பரவலாக அறியப்பட்ட ஒன்றை நிறுவினார்.
 
யுக்ரைனிய தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் துணைத் தலைவரான வோலோடிமிர் சிவ்கோவிச் என்பவரின் பெயரையும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது. ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவருக்கு அமெரிக்கா தடைகளை விதித்திருக்கிறது.
 
யானுகோவிச்சின் ஆட்சியில் துணைப் பிரதமர்களாகப் பணியாற்றி செரி அர்புஸோவ், அன்ட்ரி க்ளுயேவ் ஆகியோரின் பெயர்களையும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
 
சனிக்கிழமையன்று யுக்ரைனில் பதற்றத்தைக் குறைக்க ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரும் அவரது அமெரிக்க வெளியுறவு அமைச்சரும் பேச்சுக்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்கவின் "மரண உதவி" சனிக்கிழமை கீவ் வந்தடைந்தது.
 
முன்கள வீரர்களுக்கான வெடிமருந்துகள் உள்ளிட்டவை இந்தத் தொகுப்பில் அடங்கும்.
 
2015 ஆம் ஆண்டிலிருந்து டஜன் கணக்கான பிரிட்டிஷ் துருப்புக்கள் யுக்ரைனில் பயிற்சிக்காக தங்கியுள்ளன. 2014-இல் ரஷ்யா கிரைமியா மீது படையெடுத்ததைத் தொடர்ந்து உக்ரைனின் கடற்படையை மீண்டும் கட்டியெழுப்ப உதவ பிரிட்டனும் உறுதியளித்துள்ளது.
 
இந்த வார தொடக்கத்தில், ஆயுதங்கள் மற்றும் கூடுதல் துருப்புக்களை யுக்ரைனுக்கு அனுப்புவதாகவும் அறிவித்தது.
 
பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் தங்களில் ஒருவருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்படுவது அனைவருக்கும் எதிரான தாக்குதலாகக் கருதுகின்றன.
 
புதினுக்கு என்ன வேண்டும்?
 
ஐரோப்பாவில் கிழக்கை நோக்கி நேட்டோ விரிவடையாது என்று 1990ல் அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறிவிட்டது என்று ரஷ்யாவின் அதிபர் புதின் நீண்ட காலமாகக் கூறி வருகிறார். "அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!" என்று கடந்த மாதம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
 
ஆனால் அப்போதைய சோவியத் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவுக்கு சரியாக என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதில் பல்வேறு மாறுபட்ட விளக்கங்கள் தரப்படுகின்றன.
 
அப்போதிருந்து, சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் இணைந்துள்ளன. அவற்றில் போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகியவை ரஷ்யாவுடன் எல்லைகளைக் கொண்டுள்ளன.
 
இந்த விரிவாக்கம் மற்றும் அதன் எல்லைகளுக்கு அருகே நேட்டோ துருப்புக்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் இருப்பது அதன் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என்று ரஷ்யா வாதிடுகிறது.
 
2014 ஆம் ஆண்டு யுக்ரைனியர்கள் தங்கள் ரஷ்ய சார்பு அதிபரை பதவியில் இருந்து அகற்றியபோது, தெற்கு உக்ரைனில் உள்ள கிரைமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. அப்போதிருந்து, யுக்ரைனின் ராணுவம் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகிலுள்ள கிழக்குப் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் போரில் ஈடுபட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்