"இந்து கோயில்களை தமிழக அரசு மூடிவிடலாமே" - சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (21:09 IST)
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'தமிழகத்தில் இருந்து சோழர் ஆட்சி கால செம்பு பட்டயங்கள், சிவன், விஷ்ணு, சோழர்கள் போன்ற பாரம்பரியமிக்க பழமையான சிலைகள் அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. இவற்றை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட சிறப்பு கூட்டு மீட்புக்குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார், என்கிறது தினத்தந்தி செய்தி.
 
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய கலாசார துறை, தொல்லியல் துறை, வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகி இருந்த சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், 'சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை' என்று குற்றம்சாட்டினார். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுதொடர்பான அரசாணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்றார்.
 
பின்னர் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் இருந்த 1,300 ஆண்டுகள் பழமையான மயில் சிலை காணாமல்போனது தொடர்பான வழக்கில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
 
பின்னர், கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது, சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், தமிழக அரசு இந்து கோயில்களை மூடிவிடலாமே? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் என்று விவரிக்கிறது அந்தச் செய்தி.

தினமணி - அதிமுக இடைதேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு

மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
 
சூலூர் தொகுதிக்கு கோவை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் வி.பி.கந்தசாமி, அரவக்குறிச்சி தொகுதிக்கு கரூர் மாவட்ட இளைஞர் பாசறை-இளம்பெண் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அவனியாபுரம் பகுதிச் செயலாளர் எஸ்.முனியாண்டி, ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பி.மோகன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை நோயால் தமிழகத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி உள்ளிட்ட காரணிகளால், பூஜ்யம் எனும் அளவைத் தொட்டிருப்பதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
 
1990இல் 74 பேர் என்ற நிலையில் இருந்த தட்டமையால் பாதிக்கப்பட்டு இறந்தவரக்ளின் எண்ணிக்கை 2010இல் வெறும் மூன்று என்னும் அளவுக்கு குறைந்தது.
 
உலகம் முழுவதும் தட்டம்மை பரவல் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், தமிழகத்தில் இது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
முக்கிய வழக்குகளை விசாரிக்க உள்ளதால் தம் மீதான புகாரின் பின்னணியில் பெரிய சதி இருப்பதாக ரஞ்சன் கோகாய் கூறியுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - பாலியல் புகாரை விசாரிக்க மூன்று நீதிபதிகள் குழு

இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் சுமத்தியுள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜீ ஆகியோர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகாரை விசாரிக்க அனைத்து நீதிபதிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
 
இது துறை ரீதியான விசாரணையாகவே இருக்கும்; நீதிமன்ற விசாரணையாக இருக்காது.
  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்