ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் தங்கள் கொடியை ஏற்றிய தாலிபன்கள்

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (00:07 IST)
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே இருக்கும் எல்லைச் சாவடி ஒன்றை கைப்பற்றிய தாலிபன்கள் அங்கு தங்கள் கொடியை ஏற்றி உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
 
கந்தஹார் அருகே இருக்கும் ஸ்பின் போல்டாக் எனும் எல்லைச் சாவடி அருகே வெள்ளை நிறக் கொடிகயை ஏந்திக்கொண்டு தாலிபன்உறுப்பினர் ஒருவர் ஆட்டுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
 
இந்த எல்லைச் சாவடியை தாலிபன்கள் கைப்பற்றி உள்ளனர் என்பதை ஆஃப்கன் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
 
எல்லையின் மறுபுறம் இருக்கும் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் ஸ்பின் போல்டாக் எல்லைச் சாவடியை கைப்பற்றியுள்ள தாலிபன் தீவிரவாதிகள் உரையாடிக் கொண்டிருக்கும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
 
ஆஃப்கன் படையினரிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் தாலிபன்கள் இந்த எல்லைச் சாவடியைக் கைப்பற்றியுள்ளனர் என்று பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
சமீப வாரங்களில் தாலிபன்கள் ஆஃப்கனின் பல பகுதிகளையும் வசப்படுத்தி வருகின்றனர். இரான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லைகளையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
 
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன.
 
இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அதற்கு முன்பு இஸ்லாமியவாத அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.
 
இந்த அமைப்பு எல்லைச் சாவடிகளை மட்டுமல்லாமல் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளிலும் கைப்பற்றியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
கந்தஹார் நகரில் உள்ள சந்தை
 
ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டாக் எனும் நகரம் கந்தஹார் மாகாணத்தில் உள்ளது. பாகிஸ்தான் பகுதியில் உள்ள சாமான் எனும் நகரத்தை ஸ்பின் போல்டாக் நகரத்துடன் தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள எல்லைக் சாவடி இணைக்கிறது.
 
'தாலிபன்களுக்கு வருமானம் வரும்'
இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே இருக்கும் இல்லை சாவடிகளில் இந்த எல்லைச் சாவடி இரண்டாவது அதிகமாக பயன்படுத்தப்படும் எல்லைச் சாவடி ஆகும் .
 
இந்த எல்லைச் சாவடி பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்கள் உடன் ஆப்கானிஸ்தானை இணைக்கிறது. நாள்தோறும் சுமார் 900 சரக்கு வாகனங்கள் இதன் வழியாக கடந்து செல்கின்றன.
 
தாலிபன்கள் இதைத் தொடர்ந்து தங்கள் வசம் வைத்து இருப்பார்களானால் இது அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று பிபிசி செய்தியாளர் லைஸ் டவுசெட் கூறுகிறார்.
 
ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் வரும் வாகனங்கள் கொடுக்கும் கலால் வரி மூலம் தாலிபன்கள் பெருமளவு பொருள் ஈட்ட முடியும் என்று அவர் கூறுகிறார் .
 
இதுமட்டுமல்லாமல் பல்லாண்டுகளாக தாங்கள் பாகிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் இடங்களுக்கும் இந்த எல்லைச் சாவடி மூலம் தாலிபன்கள் சென்று வர முடியும் என்று அவர் தெரிவிக்கிறார்
 
அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.
 
இந்நிலையில் ஜூலை 11 அன்று கந்தஹாருக்கு அருகிலேயே அவர்கள் வந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் பலரை வெளியேற்றியது இந்தியா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்