மெரினாவுக்கு வெளிநாட்டு கப்பல்களை வரவழைத்த புயல் - 50 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (18:45 IST)
நிவர் புயலை விட பல மடங்கு பாதிப்பை 54 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு புயல் (1966) சென்னையில் ஏற்படுத்தியது. அப்போது சென்னை மெரினா கடற்கரையில் ஒரு வெளிநாட்டு கப்பலை தரை சட்டச் செய்த புயல், அந்த கப்பலின் அடையாளத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மெரினா சுமக்கவும் காரணமாக இருந்தது.

இதுவரை சென்னை நகரம் சந்தித்த புயல்களில் அதிக மழை பொழிவை ஏற்படுத்தியதோடு, 100 மைல் வேகத்தில் வீசிய அந்த புயலால் வெளிநாட்டு கப்பல்கள் மெரினா கடற்கைரையில் தரை தட்டின.

1966ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட புயல், வடக்கு நோக்கு நகர்ந்து சென்னையில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் குறைந்தபட்சம் 6 கப்பல்கள் சேதம் அடைந்தன.

அதில் ஒன்றான லைபீரியா கொடியுடன் வந்த சரக்கு கப்பலான 'ஸ்டமாட்டிஸ்', மெரினா கரையில் தரை தட்டி, மண்ணுக்குள் பகுதியளவு புதைந்தது. 1990ஆம் ஆண்டுவரை அகற்றப்படாமல் மெரினா கடற்கரையிலேயே இருந்தது.

தற்போது அண்ணா சமாதி இருக்கும் இடத்தில், ஸ்டமாடிஸ் கப்பல் காட்சிப்பொருளாக இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்ட பனாமா கப்பலான பிராக்ரெஸ், பாறை மீது மோதி இரண்டு துண்டுகளாக பிளந்தது என்கிறார் எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாதன்.

கப்பலில் இருந்த 26க்கும் மேற்பட்டவர்கள் மூழ்கி இறந்து விட்டனர் என அப்போதைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.

லைபீரிய கொடியுடன் வந்த மரி ஹோரா, ஸ்டமாட்டிஸ் கப்பல்களில் மரி ஹோரா, துறைமுகத்தில் தரையில் மோதி நின்ற நிலையில், அதன் மத்திய பகுதியில் விரிசல் ஏற்பட்டதால் அது மறு பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு மெட்ராஸ் ஸ்டீமர்ஸ் ஏஜென்ட்கள் சங்கம் வந்தது.

ஆனால், மறுபுறம் சில நூறு அடி தூரம் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு மெரினா கரை அருகே தரை தட்டிய ஸ்டெமாட்டிஸ் கப்பலை கடலுக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்த கப்பலை இழுக்க வேறு ஒரு கப்பலை கொண்டு வந்தார்கள். அந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அடுத்த 21 நாட்களுக்கு பின்னர் வீசிய மற்றொரு புயலில் ஸ்மாடிஸ் கரையில் இருந்து மண்ணில் பாதியளவு புதைந்து நின்றது. கப்பலை மீட்டு எடுத்து நாட்டுக்கு கொண்டு செல்வது பயனற்றது என்பதால் கிரேக்க அதிகாரிகள் அதை அங்கேயே விட்டுச்சென்றார்கள் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் நரசைய்யா.

1966ல் கடல் பொறியாளராக இருந்தவர் நரசைய்யா. ''உடைந்த கப்பல் மெரினாவில் 1990 வரை இருந்தது. பல ஆண்டுகளுக்கு மெரினாவுக்கு வரும் மக்கள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்திய கப்பலாக ஸ்டமாட்டிஸ் இருந்தது. அந்த கப்பலில் ஏறிப் பார்க்க மக்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால், ஆபத்தான பகுதியாக அந்த இடம் இருந்ததால், மக்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை,'' என்கிறார் நரசைய்யா.

ஸ்டமாட்டிஸ் கப்பலின் உடைந்த இரும்பு பகுதிகள், பலகைகள் என பல பாகங்கள் சுமார் ரூபாய் மூன்றேகால் லட்சம் வரை ஏலம் போனதாக 1990களில் வெளிவந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதோடு ஸ்டமாட்டிஸ் கப்பலுக்கு அருகே கட்டுமர படகுகளில் சென்று பார்க்க அப்போது ஒரு ரூபாய் கட்டணமாக மீனவர்கள் வசூலித்ததாகவும் செய்திகள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்