டயானா நேர்க்காணலில் பிபிசி செய்த வஞ்சனையால் என் பெற்றோரிடையே உறவு கெட்டது: வில்லியம்

Webdunia
சனி, 22 மே 2021 (12:07 IST)
பிபிசி-யுடனான நேர்காணலில், தமது தாய் டயானா ஏமாற்றப்பட்டதால்தான் அவரது மனநிலை மேலும் பாதித்து அவருக்கும் தனது தந்தைக்கும் இடையே பிணக்கு அதிகரித்தது என கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் குற்றம் சாட்டியுள்ளார்.
 
பிபிசி-யின் தரம் தாழ்ந்த செயல் விசாரணையில் உறுதியானதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டது கூட தனது தாய்க்குத் தெரியாது என்பது தனக்கு மிகவும் வேதனையளிப்பதாக கோமகன் வில்லியம் கூறியுள்ளார்.
 
தனது தாய் ஒரு முரட்டு செய்தியாளரால் மட்டுமல்லாமல், பிபிசி உயரதிகாரிகளாலும் ஏமாற்றப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
 
தனது தாயின் மரணத்திற்கு இந்த நச்சுத்தன்மை வாய்ந்த ஊடகக் கலாச்சாரமே காரணம் என சஸ்ஸெக்ஸ் பிரபு தெரிவித்துள்ளார்.
 
இளவரசர் ஹாரி, தனது தனி அறிக்கையில், "சுரண்டல் கலாச்சாரத்தின் விளைவுகள் மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகள் தனது தாயின் உயிரைப் பறித்துவிட்டன" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதுபோன்ற நடைமுறைகள் "இன்றும் பரவலாக உள்ளன" என்று கவலை தெரிவித்த அவர், இது "ஒரு குறிப்பிட்ட நிறுவனம், நெட்வொர்க் மட்டுமல்லாது அதையும் தாண்டியது என்று கூறுகிறார்.
 
"இதன் காரணமாகவே எங்கள் தாய் தனது உயிரை இழந்தார், இருப்பினும் இதுவரை எதுவும் மாறவில்லை. அவரது மரபைப் பாதுகாப்பதன் மூலம், நாம் அனைவரையும் பாதுகாக்கிறோம், மேலும் அவர் வாழ்ந்த வாழ்வின் கண்ணியத்தையும் நிலை நிறுத்துகிறோம்" என்று அவர் கூறினார்.
 
இளவரசர் வில்லியம், இளவரசர் ஹாரி, வேல்ஸ் இளவரசர், டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் ஆகியோரிடம் பிபிசி மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளது.
 
நேர்காணலை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து முதலில் கேள்வி எழுப்பிய கிராஃபிக் டிசைனர் மாட் வைஸ்லர், பின்னர் பிபிசியால் பணி கொடுக்க மறுக்கப்பட்டார். அவர், ரேடியோ 4-ன் நிகழ்ச்சியில், வியாழக்கிழமை பிரிட்டன் நேரப்படி 22:00 மணிக்குத் தனக்கு அனுப்பப்பட்ட மன்னிப்புக் கடிதம் காலம் கடந்தது என்றும் போதுமானதல்ல என்றும் தெரிவித்தார்.
 
அந்த நேரத்தில் உள் விசாரணையை வழிநடத்திய லார்ட் ஹால் மற்றும் தன்னிடம் நேரடியாக மன்னிப்பு கோராத பிபிசி இயக்குநர் ஜெனரல் லார்ட் பிர்ட் ஆகியோரை அவர் விமர்சித்தார்.
 
அலசல்: அரச குடும்பச் செய்தியாளர் ஜானி டைமண்ட்
வில்லியம் வெளிப்படுத்திய உணர்வின் வலிமை மிகைப்படுத்தப்பட்டது அல்ல.
 
மார்ட்டின் பஷீரைப் பற்றி மட்டுமல்ல, இந்த விஷயத்தை விசாரிப்பதில் முற்றிலும் தோல்வியுற்றதாகவும், அதன் விருப்பத்திற்கு மாறான கூறுகளை மூடி மறைத்ததாகவும் பிபிசி மீதே அவர் குற்றம் சாட்டுகிறார்.
 
பல காலம் முன்னர் நடந்த இந்த விஷயம் குறித்து எந்தச் சுட்டுதலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிபிசி தனது பெற்றோரை விவாகரத்துக்குத் தூண்டியதாகவும் தனது தாயின் மரணத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளுக்குக் காரணமாக இருந்ததாகவும் அவர் பிபிசி மீது குற்றம் சாட்டுகிறார்.
 
ஹாரியும் கூட ஒரு அறிக்கையை வெளியிட்டார். அது, கோபமாகவோ யாரையும் குறிப்பிடுவதாகவோ இல்லை என்றாலும், முன்பு போலவே "சுரண்டல் மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகளை" சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
 
கடந்த காலங்களில், ஹாரி ஊடகங்கள் மீது மிகவும் கோபமாக இருந்தார். வில்லியம் சமாதானமாகப் போனதாகத் தெரிந்தது. ஆனால் அரியணைக்குத் தயாராக இரண்டாம் இடத்தில் இருக்கும் அவர், பிபிசி மீது ஒரு தாக்குதலைத் தொடங்கியுள்ளது, அவரது காயத்தின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது.
 
line
ஓய்வுபெற்ற நீதிபதி லார்ட் டைசன் நடத்திய சுயாதீன விசாரணையில் நேர்காணல் செய்த மார்ட்டின் பஷீர் ஒரு "வஞ்சகமான" வழியில் செயல்பட்டதையும் அவரது நேர்காணலைப் பெறுவதற்குப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதையும் கண்டறிந்தார்.
 
என்ன நடந்தது என்பது குறித்த ஆரம்ப புகார்கள் குறித்த, அப்போதைய செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் தலைவர் லார்ட் ஹால் தலைமையிலான பிபிசியின் 1996 விசாரணை பயனற்றது என்றும் அவர் கூறினார்.
 
இளவரசர் வில்லியம், "இந்த நேர்காணல் எனது பெற்றோரின் உறவை மோசமாக்குவதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது" என்றும், "இது எண்ணற்ற மற்றவர்களையும் காயப்படுத்தியுள்ளது" என்றும் கூறினார்.
 
"ஆனால் எனக்கு மிகவும் வருத்தமளிப்பது என்னவென்றால், 1995 ஆம் ஆண்டில் முதலில் எழுப்பப்பட்ட புகார்கள் மற்றும் கேள்விகள் குறித்து பிபிசி முறையாக விசாரித்திருந்தால், தான் ஏமாற்றப்பட்டதை என் தாய் அறிந்திருப்பார்," என்று அவர் கூறினார்.
 
"அவர் நிருபரின் முரட்டுத்தனத்தால் மட்டுமல்லாமல், கடினமான கேள்விகளை கேட்காத பிபிசியின் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டார்" என்பது அவரது கருத்து.
 
தன்னை இளவரசிக்கு அறிமுகப்படுத்த அவரது சகோதரரான ஏர்ல் ஸ்பென்சரிடம், இளவரசியைக் கண்காணிப்பில் வைத்திருப்பதற்காக தனி நபர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக சித்தரிக்கும் போலி வங்கி அறிக்கைகளை பஷீர் காட்டி ஏமாற்றியதை லார்ட் டைசன் தனது விசாரணையில் கண்டறிந்தார்.
 
நேர்காணலுக்கு அனுமதி பெறப்பட்ட வழியே என் தாயின் பதிலுக்கும் தூண்டுதலாக இருந்தது என்றும் கூறுகிறார் இளவரசர் வில்லியம்.
 
அந்தப் பனோரமா நேர்காணல் நியாயமானது அல்ல என்றும் அது மீண்டும் ஒருபோதும் ஒளிபரப்பப்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.
 
"இது கால் நூற்றாண்டுக்கும் மேலாக, பிபிசி மற்றும் பிறரால் வணிகமயமாக்கப்பட்ட ஒரு போலி கதையை உருவாக்கிவிட்டது" என்று அவர் கூறினார்.
 
ஆவணங்களைப் போலியாகப் பயன்படுத்தியது "ஒரு முட்டாள்தனமான விஷயம்" என்று பஷீர் ஒப்புக்கொண்டார். அதற்கு அவர் வருத்தமும் தெரிவித்தார். ஆனால் நேர்காணலுக்கான டயானாவின் முடிவில் அந்த ஆவணங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அவர் கூறினார்.
 
முதன்முறையாக, ஒளிபரப்பு குறித்துத் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் பஷீர் தன்னிடம் போலி ஆவணங்களைக் காட்டவில்லை என்றும் டயானா எழுதிய ஒரு குறிப்பு வெளியானது. இது பஷீருக்குச் சாதகமான ஆதாரமாக பிபிசியால் பயன்படுத்தப்பட்டது.
 
டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சரிடம் ஆவணங்கள் காண்பிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இளவரசியை அணுக இது மறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் பிபிசி கருத்தில் கொள்ள வேண்டும் என்று லார்ட் டைசன் கூறினார்.
 
நீதித்துறைச் செயலாளர் ராபர்ட் பக்லேண்ட், பிபிசியின் மூத்த அதிகாரிகளின் "ஆதாரமற்ற மற்றும் தவறான" நடவடிக்கைகள் குறித்த விசாரணையின் "மிக மோசமான கண்டுபிடிப்புகள்" உணர்த்துவது என்னவென்றால் அந்நிறுவனத்தின் நிர்வாகம் சீர்திருத்தப்பட வேண்டுமா என்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்பது தான் என்று கூறினார்.
 
நேர்காணல் அனுமதி எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்த குற்றச்சாட்டுகளை ஏர்ல் ஸ்பென்சர் பகிரங்கமாகக் கூறியதை அடுத்து, கடந்த ஆண்டு பிபிசியால் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டது.
 
அதன் முடிவுகள் அல்லது பரிந்துரைகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. அதில் லார்ட் டைசன் கூறும் விஷயங்கள் பின்வருமாறு:
 
•ஏர்ல் ஸ்பென்சரின் நம்பிக்கையைப் பெற, போலி வங்கி ஆவணங்களை உருவாக்கியதன் மூலம், பிபிசி விதிமுறைகளை பஷீர் மீறியிருக்கிறார்.
 
•டயானாவின் சகோதரர் மூலம் டயானாவை அணுகியதன் மூலம், நேர்காணலுக்கும் டயானாவின் அனுமதியை பெற்றார் பஷீர்.
 
•இந்த நேர்காணலில் ஊடகங்களுக்கு இருந்த ஆர்வம் காரணமாக பிபிசியும் பஷீரின் செயல்முறைகள் பற்றி அறிந்தும் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டது. இது அந்த நிறுவனத்தின் நம்பகத் தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்த சந்தேகத்தை எழுப்பிவிட்டது என்று லார்ட் டைசன் கூறியுள்ளார். பிபிசி இவற்றுக்குப் பெயர் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிபிசி பனோரமாவின் ஒரு புதிய ஆவணப்படத்துக்கு ஏர்ல் அளித்த பேட்டியில், "நான் ஆகஸ்ட் 31, 1995 அன்று மார்ட்டின் பஷீரை சந்தித்தேன் - சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டயானா மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் நான் இணைத்துப் பார்க்கிறேன்." என்று கூறினார்.
 
1995 செப்டம்பரில் பஷீரை டயானாவுக்கு அறிமுகப்படுத்தியதில் இருந்து "எல்லோரும் நம்பத்தகாதவர்களாக ஆக்கப்படப் போகிறார்கள் என்றும் டயானா உண்மையில் முக்கிய நபர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார் என்றும் நான் நினைத்தேன்." என்று அவர் கூறினார்.
 
டயானாவின் முன்னாள் தனிச் செயலாளர், பேட்ரிக் ஜெஃப்சன், இந்த நேர்காணல் "பக்கிங்ஹாம் அரண்மனையுடனான அவருடைய மீதமுள்ள தொடர்புகளையும் அழித்துவிட்டது" என்றும், "தனது நலன் விரும்பாதவர்களின் வலையில் அவர் விழ இது காரணமாகிவிட்டது" என்றும் கூறினார்.
 
1996 ஆம் ஆண்டில் முதன்முதலில் தான் அபாய மணி ஒலித்த போதே இந்த விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், சிறியவர்களும், உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவோரும் அறியப்படத் தேவையில்லை என்ற கலாச்சாரம் இருந்ததாகவும் வெஸ்லர் கூறினார்.
 
"25 ஆண்டுகளாக மக்கள் என்னை ஒரு மோசடிப் பேர்வழி என்றும் எட்டப்பன் என்றும் அழைப்பதை நிறுத்த நான் காத்திருக்கிறேன். அதற்கு இது போதாது" என்று அவர் கூறினார்.
 
தன்னிடம் நேரில் மன்னிப்பு கேட்க பிபிசி-யின் மூத்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கும் போது "யாரும் தன்னிடம் மன்னிபு கேட்க முன் வரவில்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்கள் செய்வது அருவருக்கத்தக்கது" என அவர் கூறினார்:
 
முன்னாள் பிபிசி தயாரிப்பாளர் மார்க் கில்லிக், போலி ஆவணங்களைப் பற்றிக் கேள்வி எழுப்பிய பின்னர் பனோரமாவிலிருந்து தான் நீக்கப்பட்டதாகக் கூறினார். "நாங்கள் விசுவாசமுள்ளவர்களை மட்டுமே இந்த நிகழ்ச்சியில் விரும்புகிறோம்" என்ற காரணம் கூறப்பட்டதாகத் தெரிவிக்கிறார்.
 
அவர் பிபிசி பிரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், இந்த அறிக்கை ஒரு நல்ல தொடக்கம் என்று தெரிவித்தார். மேலும், "பிபிசி ஒரு அச்ச கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது, இது அடுத்தடுத்த ஊழல்களுக்கு வழிவகுக்கிறது. ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்ற அச்சமின்றி அதிகாரத்தில் இருப்போருடன் உண்மையை பேச முடியும் என்பதைத் தற்போதைய தலைமை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.
 
பனோரமா சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு டயானா, பஷீருக்கு அளித்த அந்தப் பேட்டி பிபிசி-க்கு மிகப் பெரிய பிரத்யேக செய்தி. அதில், டயானா, "இந்தத் திருமணத்தில் தொடர்புடையவர்கள் மூன்று பேர்" என்று தன் கணவருக்கு, கமீலா பார்க்கர் பௌல்ஸுடன் இருந்த தொடர்பைக் குறிப்பிட்டிருந்தார்.
 
அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் பொது வெளியில் அரச குடும்ப விஷயங்களைப் பேசியது அது தான் முதல் முறை. அந்த நேர்காணலில் இளவரசர் சார்ல்ஸுடனான தனது மகிழ்ச்சியில்லாத உறவு குறித்தும் தனது பெருவேட்கை குறித்தும் அவர் கூறுவதை நேயர்கள் கண்டார்கள்.
 
58 வயதான பஷீர், இங்கிலாந்தின் பிரபலமான ஊடகவியலாளர். 2003-ல் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுடனான நேர்காணலால் மிகப் பிரபலம் அடைந்தவர்.
 
தனது உடல் நலக் குறைவு காரணத்தைக் காட்டி, கடந்த வாரம் அவர் பிபிசி-யிலிருந்து விலகினார். 2016-ல் இருந்து அந்நிறுவனத்தின் மதச் செய்தியாளராகவும் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.
 
தனது முதல் கட்ட விசாரணையில் பஷீர், பனோரமா, பிபிசி நியூஸ் ஆகியோரைக் குற்றமற்றவர்களாக அறிவித்ததும் சந்தேகத்தின் பயனை பஷீருக்கு அளித்ததும் தாம் செய்த தவறு என்று லார்ட் ஹால் ஒரு அறிக்கையில் ஒப்புக்கொண்டார்.
 
தன்னுடைய 35 வருட பிபிசி-யுடனான பயணத்தில், எப்போதுமே நேர்மையாகவும் நியாயமாகவும் பொது நலனை மட்டுமே கருத்தில் கொண்டும் செயல்பட்டு வந்ததாக அவர் கூறுகிறார்.
 
பிபிசியின் தற்போதைய டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, "வேல்ஸ் இளவரசி டயானா பிபிசியுடனான ஒரு நேர்காணலில் ஆர்வமாக இருந்தார் என்று அறிக்கை கூறினாலும், நேர்காணல் அனுமதியைப் பெறப் பயன்படுத்தப்பட்ட செயல்முறை நேயர்களின் எதிர்பார்ப்புக்கு மிகவும் தரம் தாழ்ந்தது. அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். லார்ட் டைசன் தவறுகளைத் தெளிவாக அடையாளம் கண்டுள்ளார்.
 
பிபிசி, நடந்தது என்ன என்றறிய அதிக முயற்சி செய்திருக்க வேண்டும், தான் அறிந்ததை வெளிப்படையாகத் தெரிவித்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
 
இளவரசர் சார்லஸுக்கு டேவி அனுப்பிய கடிதத்தில், இளவரசர், அவரது ஊழியர்கள் மற்றும் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் குறித்து பஷீரின் "மோசமான மற்றும் பொய்யான கூற்றுகளுக்கு" டைரக்டர் ஜெனரல் மன்னிப்பு கேட்டார்.
 
"இளவரசியின் அச்சத்தைத் தூண்டி, தன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த விரும்பி, தான் தீங்கு விளைவித்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாமல் பஷீர் கூறிய கருத்துகள் தவறானவை" என்பதை பிபிசி ஏற்றுக்கொள்கிறது என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
லார்ட் டைசனின் அறிக்கை வெளியான சற்று நேரத்திலேயே, ஒரு வாரமாக ஒத்திப்போடப்பட்டு வந்த நேர்காணல் குறித்த பனோரமா விசாரணை வியாழக்கிழமை மாலை பிபிசி ஒன்னில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்