படுத்துக் கொண்டே விசாரணைக்கு ஆஜரான முன்னாள் காவல்துறை அதிகாரியை எச்சரித்த நீதிமன்றம்

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (10:42 IST)
படுத்துக்கொண்டே ஆஜரான முன்னாள் டிஜிபி: எச்சரித்த நீதிமன்றம்
 
படுக்கையில் படுத்தபடி விசாரணைக்கு ஆஜரான முன்னாள் டிஜிபிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறது தினமணியின் செய்தி.
 
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காவல்துறை தலைவர் சுமேஷ் சிங் சைனி, இணையம் வழியாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்கு படுக்கையில் படுத்தபடி ஆஜரானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம் சைனி தனது போக்கில் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது என விவரிக்கிறது தினமணி செய்தி.
 
தனக்கு உடல் நிலை சரி இல்லை; காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சைனி தெரிவித்திருந்தாலும் அவர் அதற்கான மருத்துவ சான்றிதழை அவர் சமர்ப்பிக்கவில்லை.
 
கடந்த 1994ஆம் ஆண்டு லூதியானாவில் வினோத் குமார், அசோக் குமார் மற்றும் அவர்களது ஓட்டுநர் முக்தியார் சிங் ஆகிய 3 பேரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சுமேஷ் சைனி மற்றும் மூன்று போலீசார் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற காவல்துறை அலுவலர்களான சுக் மொஹிந்தர் சிங் சந்து, பரம்ஜித் சிங் மற்றும் பல்பீர் சந்த் திவாரி ஆகியோருடன் சுமேஷ் சைனி சதித்திட்டம் தீட்டியதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
 
"முதல் குற்றவாளியான சுமேஷ் சைனி, இணையம் மூலம் நடைபெற்ற விசாரணையில் இணைந்தார். எனினும் அவர் படுக்கையில் படுத்தபடியே விசாரணையில் பங்கேற்றது கருத்தில் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து கேட்டதற்கு அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். இருப்பினும் இது தொடர்பான மருத்துவச் சான்றிதழ் எதுவும் வழங்கப்படவில்லை அல்லது பதிவு செய்யப்படவில்லை. இனி, முதல் குற்றவாளி, இணைய விசாரணை மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது எதிர்காலத்தில் தனது நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கிறேன்," என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் என்கிறது அச்செய்தி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்