அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் உரை!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (00:11 IST)
அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் உரை: ‘செப்டம்பர் 11’ போன்ற தாக்குதலை யுக்ரேனிய மக்கள் தினமும் அனுபவித்து வருவதாக உருக்கம்
 
'செப்டம்பர் 11' போன்ற தாக்குதலை யுக்ரேனிய மக்கள் தினமும் அனுபவித்து வருகின்றனர் என, அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
 
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் இன்று, புதன்கிழமை காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். யுக்ரேன் அதிபரை நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோஸி அறிமுகம் செய்தார்.
 
அப்போது ஸெலென்ஸ்கியின் "தைரியமான தலைமை மீது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்" என தெரிவித்தார்.
 
இதையடுத்து பேசிய ஸெலென்ஸ்கி அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.
 
ஸெலென்ஸ்கி தன்னுடைய உரையில், ரஷ்ய படைகளுடன் போரிட்டுவரும் யுக்ரேன், 9/11 (செப்டம்பர் 11 தாக்குதல்) போன்ற தாக்குதலை தினந்தோறும் எதிர்கொண்டு வருவதாக, தெரிவித்தார்.
 
யுக்ரேன் வான் பரப்பை 'நோ ஃப்ளை சோன்'ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிப்பது குறித்து, அமெரிக்கா மற்றும் நேட்டோவை அவர் மீண்டும் வலியுறுத்தினார். அப்போது, "என் நாட்டு வானத்தை பாதுகாக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
 
யுக்ரேனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர்கள் (612 மில்லியன் பவுன்ட்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் தெரிவிக்க உள்ளார்.
 
 
கடந்த காலங்களில், 1941ல் பேர்ள் ஹார்பர் தாக்குதல் மற்றும் செப்டம்பர் 11, 2001 தாக்குதலை நினைவில்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், அதேபோன்ற தாக்குதல்களை யுக்ரேனிய மக்கள் தினமும் அனுபவித்து வருவதாக தெரிவித்தார்.
 
"யுக்ரேன்ய வரலாற்றை புரிந்துகொள்ளும் வகையிலான பக்கங்கள், உங்களின் (அமெரிக்காவின்) சிறப்பான வரலாற்றில் உள்ளன. எங்களை இப்போது புரிந்துகொள்ளுங்கள்" என அவர் தெரிவித்தார்.
 
மனித உரிமைகள் தலைவர் மார்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற "நான் ஒரு கனவு காண்கிறேன்" (I have a dream) என்கிற உரையைக் குறிப்பிட்ட அவர், "உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த வரிகள் தெரியும். எனக்கும் ஒரு கனவு இருக்கிறது. எங்கள் நாட்டு வானத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அது" என தெரிவித்தார்.
 
யுக்ரேன் நகரங்களில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மக்கள் காயமடைந்தது குறித்த காணொலி ஒன்றையும் யுக்ரேன் அதிபர் தனது உரைக்கு நடுவில் காண்பித்தார்.
 
 
யுக்ரேன் வான்பரப்பை 'நோ ஃப்ளை சோன்'ஆக அறிவிக்க வேண்டும் என, நேட்டோவை ஸெலென்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதனை நேட்டோ மறுத்துவிட்டது.
 
யுக்ரேனை 'நோ ஃப்ளை சோன்'ஆக அறிவித்தால், அந்த வான் எல்லைக்குள் பறக்க முற்படும் எவ்வித ரஷ்ய விமானங்களும் அவசியமிருந்தால் சுட்டு வீழ்த்தப்படலாம்.
 
'நோ ஃப்ளை சோனுக்கு' மாற்றாக, யுக்ரேன் வான்பரப்பை பாதுகாக்கும் அமைப்புகள் மற்றும் விமானங்களை வழங்க வேண்டும் என அவர் கோரினார்.
 
முன்னதாக, போலந்து எம்ஐஜி-29 ஃபைட்டர் ஜெட் விமானங்களை வழங்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இந்த முடிவு நேட்டோ உறுப்பினர் நாடுகளை போருக்கு இழுத்துவிடும் என்ற அச்சம் காரணமாக, அதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுத்துவிட்டார்.
 
ஜோ பைடனை நோக்கி நேரடியாக ஆங்கிலத்தில் பேசிய ஸெலென்ஸ்கி, "இந்த உலகின் தலைவராக நீங்கள் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த உலகின் தலைவராக இருப்பது என்பது, அமைதியின் தலைவராக இருப்பது" என ஸெலென்ஸ்கி கூறினார்.
 
அமெரிக்காவின் 800 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பாதுகாப்பு உதவியில், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் யுக்ரேனுக்கு சிறப்பான விதத்தில் பயன்பட்ட ஜாவ்லின் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் உள்ளிட்ட கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகளை அதிகளவில் வழங்குதல் ஆகியவை அடங்கும் என, அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
 
 
யுக்ரேனில் இன்று என்ன நடந்தது?
 
இதனிடையே, இன்று யுக்ரேனில் ரஷ்யப் படைகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றது.
 
தலைநகர் கீயவில் 12 அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ஷெல் தாக்குதல் நடைபெற்றது.
யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் பல்லடுக்கு மாடி கட்டடம் ஒன்றில் நடைபெற்ற ஷெல் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக, அவசர சேவை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ஸாப்போரீஷியாவில் ரயில் நிலையம் மற்றும் பூங்கா ஒன்றிலும் ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
யுக்ரேனின் மேரியோபோலில் ரஷ்யப் படைகள் கைப்பற்றிய மருத்துவமனையில் சுமார் 400 பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் சிக்கியுள்ளனர். மேரியோபோலில் நிலவும் சூழல் குறித்து விவரித்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம், அதனை 'கொடுங்கனவு" என தெரிவித்துள்ளது.
 
இதனிடையே, ரஷ்ய படையெடுப்புக்கான எதிர்வினை குறித்து ஆலோசிக்க நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
 
நேட்டோ உறுப்பினர் நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காகவும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸுக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்