ரூ. 1.8 கோடி மதிப்புள்ள திருப்பதி தலை மயிர் கடத்தல்: எங்கே கண்டுபிடிப்பு? பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (07:46 IST)
திருப்பதியில் மொட்டை அடித்த தலைமயிர் மிசோரம் - மியான்மர் எல்லையில் கிடைத்திருப்பது ஆந்திராவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
திருமலை திருப்பதி தேவாஸ்தானத்திலிருந்து அந்த தலைமயிர் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டது என பல ஊகங்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் பக்தர்கள் மத்தியில் இது விவாதமாகி வருகிறது.
 
1.8 கோடி மதிப்பிலான தலைமயிர் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? சில தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் மீது இது தொடர்பாக ஏன் வழக்கு தொடரப்பட்டுள்ளது?
 
இரண்டு மாதங்களுக்கு முன்…
 
இரண்டு மாதங்களுக்கு முன், அசாம் ரைஃபிள்ஸ் என்ற துணை ராணுவப் படையின் 23ஆம் பிரிவை சேர்ந்த செர்ச்சிப் பட்டாலியன், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இந்த தலை மயிரை தடுத்து நிறுத்தினர். இந்த தகவல் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற தேடுதல் பணியில் இந்த விஷயம் அம்பலமானது.
 
மிசோரம் மாநிலத்தில் உள்ள இந்தோ- மியான்மர் எல்லையில் இந்த சட்டவிரோத கடத்த மயிர் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக இந்த பகுதியில் தேடுதல் பணி நடந்தால், போதைப் பொருளோ, தங்கமோ அல்லது வன விலங்குகளோ கண்டுபிடிக்கப்படும். ஆனால் முதன்முறையாக பாதுகாப்பு படையினர், 120 பைகள் நிறைய மனித தலை மயிரைக் கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு பையிலும் 50 கிலோ எடையுள்ள மயிர் இருந்துள்ளது. மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ட்ரக் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட மயிரை ராணுவம் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கைப்பற்றப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர், அந்த மயிர் திருப்பதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது என்று கூறியதாக ஊடகங்களிடம் சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்த செய்தி ஒன்று தி இந்து செய்தித்தாளில் 21.3.2021 அன்று வெளியானது. மிசோரமில் உள்ள அய்ஸவாலை சேர்ந்த மருயாட்டி என்ற பெண் இந்த மயிர் மூட்டைகளை வண்டியில் கொண்டு செல்வதற்காகப் பேசியதாக ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அந்த செய்தியில் நாட்டில் உள்ள பல கோயில்களில் இருந்து அவர்கள் மயிர்க் கற்றைகளைக் கொண்டு செல்வார்கள் என்றும், ஆனால் கைப்பற்றப்பட்ட டிரக் திருப்பதியிலிருந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பிடித்து வைக்கப்பட்ட ஓட்டுநர் முங்க்சியாங் சிங்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
தலைமயிரை ஏன் கடத்த வேண்டும்?
 
எல்லையில் இருந்து 7 கி.மீ. முன்பாகதான் இந்த தலை மயிர் மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட மயிர்க் கற்றைகளின் மதிப்பு ரூ.1.8 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சரக்கு இந்தியாவிலிருந்து மியான்மருக்குள் நுழைந்து அங்கிருந்து தாய்லாந்து கொண்டு செல்லப்பட்டு அங்கு பதப்படுத்தப்பட்டு சீனாவுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அங்கே தலையில் மாட்டிக் கொள்ளும் விக்குகள் செய்யப்பட்டு உலகின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
 
சந்தை ஆய்வுப்படி, விக் வணிகத்தில் சீனாவுக்கு 70 சதவீத பங்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் தலை மயிருக்கு உலகம் முழுவதும் சந்தை உண்டு. இந்தியாவில் மத வழக்கப்படி கடவுளுக்கு தலை மயிர் காணிக்கை வழங்குவது வழக்கம். எனவே இந்தியாவில் இருந்து செல்லும் தலை மயிர் விக் வணிகத்துக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
 
முதல் இடத்தில் திருப்பதி
இந்திய அளவில் திருப்பதி கோயிலில்தான் அதிக அளவிலான தலை மயிர் காணிக்கை வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் பேர் சாமி தரிசனத்துக்கு வருகின்றனர். அதில் மூன்றில் ஒரு பங்கினராவது முடி காணிக்கை கொடுப்பர். 2021 - 22 நிதியாண்டுக்கான, திருமலை திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் போர்ட் பட்ஜெட் மதிப்பீட்டின்படி கோயிலின் மொத்த வருவாயான ரூ.2, 937 கோடி ரூபாயில் முடிக்காணிக்கை கொடுக்கும் இடத்திலிருந்து மட்டும் 131 கோடி ரூபாய் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
தரிசனத்துக்கு வழங்கப்படும் நுழைவுக் கட்டணத்துடன் காணிக்கையாக கொடுக்கப்படும் தலைமுடியிலிருந்தும் தேவஸ்தானத்திற்கு நல்ல வருமானம் வருகிறது.
 
இவ்வாறு காணிக்கை கொடுக்கப்பட்ட தலை மயிர் ஒவ்வொரு மாதமும் ஏலம் விடப்படும். திருப்பதியில் முடி காணிக்கை கொடுக்கும் இடத்திலிருந்து இந்த மயிர்க் கற்றைகள் திருப்பதியில் உள்ள குடோன்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்த ஏலம் மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்ப்பரேஷன் உதவியுடன் நடைபெறும்.
 
அதிக தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு முடி வழங்கப்படும். இந்த முடி நீளம் மற்றும் வண்ணத்தை பொறுத்து ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்படும். நீளமான முடிக்கு அதிக விலை கிடைக்கும்.
 
2019 செப்டம்பர் மாதம் திருமலை தேவஸ்தானத்துக்கு மொட்டையடித்த மயிர்க்கற்றை மூலம் ரூ.74 கோடி வருமானம் வந்தது.
 
தற்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் ஏலம் விடப்படுகிறது. இருப்பினும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்திய ஏலம் குறித்த தகவலையோ அல்லது ஒப்பந்த விவரத்தையோ வெளியிட மறுத்துவிட்டது.
 
அதிகாரிகளை பிபிசி பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அது குறித்த தகவல் தங்களிடம் இல்லை என அவர்கள் தெரிவித்துவிட்டனர்.
 
எங்கு, யாருக்கு விற்கப்படுகிறது?
மயிர்க் கற்றைகளை வாங்குவோர் அவற்றை எங்கு விற்பனை செய்ய வேண்டும் என்று சொல்ல தங்களுக்கு அதிகாரம் இல்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செய்தி தொடர்பாளர் டி.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
"திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பக்தர்கள் காணிக்கை அளிக்கும் முடியை இணையம் மூலம் ஏலம் விடுகிறது. யார் அதிகம் பணம் கொடுப்பதாக சொல்கிறார்களோ அவர்களிடம் ஜிஎஸ்டி பெற்றுக் கொண்டு தலை மயிர் ஒப்படைக்கப்படும். அவ்வாறு வாங்கும் நபர் அவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி வைத்துள்ளாரா அல்லது எங்கு அதை விற்கிறார் என்பதெல்லாம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடர்பில்லாத விஷயங்கள். நாட்டில் உள்ள பல கோயில்களில் இவ்வாறு காணிக்கையாகப் பெறப்பட்ட மயிர்க்கற்றைகள் விற்கப்படுகின்றன. அதேபோல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இணைய வழி ஏலத்தில் இது விற்கப்படுவது வழக்கமான நடைமுறை" என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
என்ன பிரச்னை?
மியான்மர் எல்லையில் கடத்தல் தலைமுடி கைப்பற்றப்பட்ட விவகாரத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் பண்டாரு சத்யராயண மூர்த்தி பிபிசியிடம் தெரிவித்தார்.
 
மேலும், "திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏன் இவ்வளவு கமுக்கமாக இருக்கிறது? ஆயிரக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையோடு தொடர்புடைய ஒரு விஷயத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவிப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. இந்துக்களால் வைக்குண்டம் என்று போற்றப்படும் திருப்பதியை அரசு வர்த்தக அமைப்பாக மாற்றிவிட்டது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தலைமுடி வாங்க ஒப்பந்தம் செய்த நிறுவனம் குறித்து அதிகாரிகளுக்குத் தெரியாதா? அவர்களின் பின்புலம் குறித்தும் தெரியாதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கடத்தல் தலைமயிர் கைப்பற்றப்பட்ட விவகாரம் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
 
திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த இரு ஆண்டுகளாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அதில் சமீபத்திய ஒன்றுதான் இது.
 
"தடை செய்யப்படுவார்கள்"
ஏலம் எடுத்தவர்கள் அதை எங்கு விற்கிறார்கள் என்பது தெரியாது என முதலில் திருமலை தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. அதன்பின் கடத்தலில் ஈடுபட்ட நிறுவனங்களின் பெயர்கள் வெளியே வந்தால் அவர்கள் தடை செய்யப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
தேவஸ்தானத்தின் மூலமாகவே இந்த கடத்தல் நடைபெறுகிறது என சிலர் சமூக ஊடகத்தில் பிரசாரம் செய்து வருவதாக தேவஸ்தானம் புகார் தெரிவித்துள்ளது. திருப்பதி கிழக்கு காவல் துறை இது தொடர்பாக வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளது.
 
திருப்பதி கிழக்கு வட்டக் காவல் ஆய்வாளர் பி. சிவபிரசாத் ரெட்டி, திருமலை தேவஸ்தானத்துக்கு அவமரியாதை ஏற்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் பதிவுகள் இருப்பது குறித்து புகார் பெற்றதால் முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளதாக என பிபிசியிடம் தெரிவித்தார்.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் தலைவரும் திருமலை திருப்பதி தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவருமான ஒருவர் 2006 -08ஆம் ஆண்டுகளில் மொட்டை அடித்தது மூலம் ரூ.250 கோடி வருவாய் வந்த நிலையில் தற்போது ஏன் அது குறைந்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
மேலும், "திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது பொறுப்பைத் துறக்க முடியாது. சமீபத்திய கைப்பற்றப்பட்ட மயிர்க் கற்றைகள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன. மாநில அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்