நீண்ட நாட்களாக பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்கிறீர்களா?

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (16:02 IST)
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
 
பல மாதங்களாக தொடர்ந்து, இதை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு ஏற்படும் அபாயங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி மருத்துவர்கள் சிந்திக்க வேண்டும் என்று எடின்பரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தலைவலிக்கும், காய்ச்சலுக்கும் எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் பாதுகாப்பானவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
 
இந்த கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த நீண்ட காலத்திற்கு அதிகமான நபர்களை வைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மற்ற நிபுணர்கள் கூறுகின்றனர். பாராசிட்டமால் மாத்திரைகள் உலகம் முழுவதும் உடல் வலிகளுக்கான குறுகிய கால தீர்வாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. நீண்டகாலத்துக்கு பயன்படுத்தவும் நாள்பட்ட வலிக்காகவும் இது பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து குறைவான ஆதாரமே உள்ளது.
 
2018ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தில் உள்ள ஐந்து லட்சம் மக்களுக்கு - அதாவது அங்குள்ளவர்களில் ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு - வலி நிவாரணி பரிந்துரைக்கப்பட்டது. அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இந்த ஆய்வின்படி, அவர்கள் அதிக ஆபத்தான நிலையில் இருக்கலாம்.
 
இந்த ஆய்வு 110 தன்னார்வலர்களைக் கண்காணித்தது. அவர்களில் மூன்றில் இரண்டு பேர், உயர் ரத்த அழுத்ததிற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டனர். இந்த சோதனையில், அவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை ஒரு கிராம் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். நாள்பட்ட வலி உள்ள நோயாளிகளுக்கு ஒரு பொதுவான டோஸ் மாத்திரை வழங்கப்பட்டது.
 
பின்னர், மாத்திரை மாதிரிகள் (dummy pills) அல்லது மருந்துப் போலிகளை (placebo) அடுத்த இரண்டு வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பாராசிட்டமால் மாத்திரைகளால் ரத்த அழுத்தம் அதிகரித்தது என்று இந்த சோதனை காட்டியது. "மருந்துப்போலிகளை விட, பாராசிட்டமால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக முக்கியமான ஆபத்தான காரணிகளில் ஒன்றாக இது உள்ளது", என்று எடின்பரோ மருந்தியல் நிபுணர் பேராசிரியர் ஜேம்ஸ் டியர் தெரிவிக்கிறார்.
 
நாள்பட்ட வலி உள்ள நோயாளிகளுக்கு முடிந்தவரை குறைந்த அளவு பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்ள பரிந்துரைக்கவும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் இதய நோய் அபாயத்தில் உள்ளவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் ஆராய்ச்சியாளர்கள் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
 
மூட்டுவீக்கம் (Arthritis) என்பது பிரிட்டனில் நாள்பட்ட வலிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். வலிக்கு சிகிச்சையளிப்பதற்கு பாதுகாப்பான மருந்துகளும், நல்ல மனநலம் இருப்பதற்கான ஆதரவு மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க ஊக்கம் அளிக்கும் பிற உதவிகளும் தேவை என்று 'வெர்சஸ் ஆர்த்ரிடிஸ்' என்ற ஒரு தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
 
"வலி நிவாரண மருந்துகளால் ஏற்படும் அபாயங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்களின் தேர்வுகளை ஆராய ஒரு சுகாதார நிபுணரிடம் பேச வேண்டும்.", என்று வெர்சஸ் ஆர்த்ரிடிஸில் வாதவியல் ஆலோசனை நிபுணராக உள்ள டாக்டர் பெஞ்சமின் எல்லிஸ் கூறுகிறார்.
 
முன்னணி ஆய்வாளர் டாக்டர் அயான் மெக்கின்டயர் இவ்வாறு கூறுகிறார்: "தலைவலி அல்லது காய்ச்சலுக்கான பாராசிட்டமால் மாத்திரையின் குறுகிய கால உபயோகத்தைப் பற்றிய விஷயம் அல்ல இது. இதற்கான மாத்திரைகள் நிச்சயமாக நன்மை தரும்."
 
லண்டன் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜார்ஜ்ஸில் உள்ள மருந்தியல் மற்றும் சிகிச்சை விரிவுரையாளர் டாக்டர் திபேந்தர் கில், சர்குலேஷன் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், "வெள்ளைநிற ஸ்காட்லாந்து மக்களில் ரத்த அழுத்தத்தில் சிறிய அளவிலான, ஆனால், கவனிக்கத்தக்க அதிகரிப்பு" கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறார். ஆனால் இதில் "பலவும் அறியப்படாதவையாக உள்ளன", என்றும் அவர் தெரிவிக்கிறார்.
 
"முதலில், பாராசிட்டமால் மாத்திரை நீண்ட காலமாக பயன்படுத்துவதால், ரத்த அழுத்தத்தில் காணப்படும் அதிகரிப்பு அப்படியே நிலைத்திருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.
 
"இரண்டாவதாக, பாராசிட்டமால் மாத்திரை பயன்படுத்தி, அதன் காரணமான ரத்த அழுத்தத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டு, இதய நோய் அபாயத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் உறுதியாக தெரியவில்லை ", என்று அவர் கூறுகிறார்.
 
முன்னதாக, நீண்ட காலமாக பாராசிட்டமால் மாத்திரை பயன்பாட்டிற்கும், அதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயத்திற்கும் இடையேயான தொடர்பை ஒரு பெரிய அமெரிக்க ஆய்வு கண்டறிந்தது. ஆனால், இதில் ஒன்றுதான் மற்றொன்றை ஏற்படுத்தியது என்பதை நிரூபிக்க முடியவில்லை. மற்ற சிறிய ஆய்வுகளும் இந்த தொடர்பை உறுதிப்படுத்த முடியவில்லை.
 
பாராசிட்டமால் மாத்திரை எவ்வாறு ரத்த அழுத்தத்தை உயர்த்தும் என்பதை தங்களால் விளக்க முடியவில்லை. ஆனால், தங்களின் கண்டுபிடிப்புகள் நீண்ட கால பாராசிட்டமால் மருந்துகளை பரிந்துரைக்கும் போக்கை மறுபரிசீலனை செய்ய வழிவகுக்கும் என்று எடின்பரோ குழு கூறியுள்ளது.
 
முன்னதாக, இப்யூபுரூஃபன் (ibuprofen) போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி உண்டாவதை தடுக்கும் (non-steroidal anti-inflammatory) வலிநிவாரணிகளை விட இவை பாதுகாப்பானதாகக் கருதப்பட்டன. அவை சிலருக்கு ரத்த அழுத்தத்தை உயர்த்தின என்று நினைத்தனர்.
 
இந்த ஆய்வுக்கு நிதியளித்த பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன், "பாராசிட்டமால் மாத்திரை போன்ற ஒப்பீட்டளவில் பாதிப்பில்லாத" மருந்துகள் தேவையா என்பதை மருத்துவர்களும் நோயாளிகளும் தொடர்ந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
 
"சாதாரணமான, ஆரோக்கியமான ரத்த அழுத்தம் உள்ளவர்களிடம், நீண்ட கால இடைவெளியில், "பாராசிட்டமால் மாத்திரை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்களையும், அதன் நன்மைகளையும் உறுதிப்படுத்துவது அவசியம் என்று ஸ்ட்ரோக் அசோசியேஷனைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் பிரான்சிஸ் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்