பி.வி. சிந்து: பிபிசி-யின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது பெற்றார்

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (11:40 IST)
இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, 'பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2019' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று, அந்தப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் பி.வி. சிந்து (புசர்ல வெங்கட சிந்து).

இந்த விருதை வென்றது குறித்து கருத்துத் தெரிவித்த சிந்து, "இந்த விருதை வென்றது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பிபிசியின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதுக்கான விழாக் குழுவினரை நான் பாராட்டுகிறேன். இத்தகைய சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்ட பிபிசி இந்தியாவுக்கும், எனது ரசிகர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்", என்று தெரிவித்தார்.

பி.வி சிந்து, இதுவரை ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் சிந்துதான்.

பிபிசியின் சிறந்த இந்திய வீராங்கனைக்கான விருதை பி.வி.சிந்து வென்றுள்ளார். அவருக்கான விருதை பிபிசியின் டேரக்டர் ஜெனரல் டோனி ஹால் மற்றும் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கரண் ரிஜிஜூ ஆகியோர் வழங்கினர்.  பி.வி.சிந்துவின் சார்பாக இந்த விருதை, சிந்துவை பரிந்துரைக்கும் நிறுவனத்தை சேர்ந்த யஷ்வந்த் பெற்றார்
"எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதுடன் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த எனது ஆதரவாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்'' என்றார் சிந்து.

"பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை போன்ற விருது, மேலும் ஊக்கமளிப்பதாகவும், தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கான உந்துசக்தியாகவும் அமையும். இளம் விளையாட்டு வீராங்கனைகளுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில், பெண் என்ற வகையில், நாம் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதுதான். வெற்றிக்கான படிக்கட்டு கடும் உழைப்புத்தான். இந்தியாவுக்காக மேலும் பல பதக்கங்களை இந்திய விளையாட்டு வீராங்கனைகள் விரைவில் வென்றெடுப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்", என்று சிந்து மேலும் குறிப்பிட்டார்.

பி.டபுள்யு.எஃப் உலக தர வரிசைப் பட்டியலில், முதல் 20 வீராங்கனைகளுக்கான இடத்தை, 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனது 17-ஆவது வயதிலேயே பிடித்துவிட்டார் பி.வி. சிந்து.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக முதல் பத்து சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறார் சிந்து. டோக்கியோ ஒலிம்பிக்கிலும் அவர் சாதனை படைப்பார் என்று இந்திய ரசிகர்கள் அவர் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

பிபிசி விருது வழங்கும் விழா புதுடெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. அதில், பிரபல விளையாட்டு பிரமுகர்கள், விளையாட்டு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றார்கள்.

இந்திய விளையாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புக்காகவும், விளையாட்டில் இளம் தலைமுறையினருக்கு ஊக்க சக்தியாக விளங்கி வருவதற்காகவும், மூத்த தடகள வீராங்கனை பி.டி. உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
 
பல தடைகளைக் கடந்து, பி.டி. உஷா தனது விளையாட்டுப் பயணத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச பதக்கங்களையும் விருதுகளையும் வென்றிருக்கிறார். இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற கெளரவத்தையும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அவருக்கு வழங்கியிருக்கிறது. 1984-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் நூலிழையில் வெண்கலப் பதக்க வாய்ப்பைத் தவறவிட்டார்.

பிபிசியின் முதலாவது சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்காக ஐந்து வீராங்கனைகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டார்கள்.

தடகள வீராங்கனை தூத்தி சந்த், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், மாற்றுத் திறனாளி பேட்மின்டன் வீராங்கனை மானசி ஜோஷி மற்றும் பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் அந்த ஐந்து வீராங்கனைகள்.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய பிரபல நடுவர்கள் குழு அந்த ஐந்து வீராங்கனைகளையும் பரிந்துரை செய்தது.

அவர்களில், `பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2019' விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 24-ஆம் தேதி ஜி.எம்.டி. நேரப்படி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டோனி ஹால், பிபிசி உலக சேவைகளின் இயக்குனர் ஜேமி ஆங்கஸ், பிபிசி இந்திய சேவைகளின் ஆசிரியர் ரூபா ஜா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்