'அன்புள்ள நரேந்திர மோதிஜி' - இந்திய அரசின் கௌரவத்தை மறுக்கும் 8 வயது சிறுமி

சனி, 7 மார்ச் 2020 (16:48 IST)
நான் எழுப்பும் குரலை கேட்காவிட்டால், இந்தியப் பிரதமரின் #SheInspiresUs மகளிர் தின பிரசாரத்தில் தன்னை கௌரவிக்க வேண்டாம் என்று எட்டு வயதாகும் மணிப்பூர் சிறுமி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக மார்ச் 2ஆம் தேதி அறிவித்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அடுத்த நாளே அது தொடர்பாக வேறொரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

"நமக்கு உந்துதலாக இருக்கும் பெண்களுக்கு வரும் பெண்கள் தினத்தன்று என் சமூக ஊடக பக்கங்களைத் தரவுள்ளேன். இது பல லட்சம் பேருக்கு தூண்டுகோளாக இருக்கும்," என்று பதிவிட்டிருந்த மோதி, அத்தகைய பெண்களின் கதைகளை #SheInspiresUs எனும் ஹேஷ்டேகை பயன்படுத்தி பகிருமாறு கூறியிருந்தார்.

அவ்வாறு அவர் அவர் கூறியதையடுத்து இந்திய அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் மணிப்பூரை சேர்ந்த லிஸிப்ரியா கங்குஜமை அந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி டேக் செய்திருந்தது.

அந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லிஸிப்ரியா, "அன்புள்ள நரேந்திர மோதிஜி.. என் குரலைக் கேட்கவில்லையென்றால், என்னைக் கொண்டாட வேண்டாம்," என்று கூறியுள்ளார்.

"என்னை உந்துதல் தரும் பெண்ணாக தேர்வு செய்தமைக்கு நன்றி. இந்த கௌரவம் வேண்டாம் என்று பல முறை சிந்தித்த பிறகு முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

"இந்திய அரசு நான் எழுப்பும் குரலை கேட்கவில்லை. ஆனால் என்னை உந்துதல் தரும் பெண்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளது. இது நியாயமா," என்று இன்னொரு ட்விட்டர் பதிவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யார் இந்த லிசிப்ரியா?

சுற்றுச்சூழல் செயல்பட்டாளரான லிசிப்ரியா கங்குஜம் 'த சைல்ட் மூமண்ட்' (The Child Movement) எனும் அமைப்பையும் நடத்தி வருகிறார் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018இல் மங்கோலியாவில் ஐ.நா நடத்திய பேரிடர் மேலாண்மை தொடர்பான மாநாட்டுக்கு பிறகு சுற்றுச்சூழல் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார் லிசிப்ரியா.

2019ஆம் ஆண்டுக்கான டாக்டர் அப்துல் கலாம் குழந்தைகள் விருதைப் பெற்றவர் இவர். இன்ஸ்டிட்யூட் ஃபார் எக்கனாமிக்ஸ் அண்ட் பீஸ் (Institute for Economics & Peace) நிறுவனம் வழங்கும் குழந்தைகளுக்கான உலக அமைதி விருதையும் இவர் 2019இல் பெற்றார்.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை நிறைவேற்றக்கோரி இந்திய நாடாளுமன்றத்தின் முன் இவர் பதாகைகளை ஏந்தி போராடியுள்ளனர்.

அதனால் 'இந்தியாவின் கிரேட்டா துன்பர்க்' என்று ஊடகங்களால் பரவலாக அழைக்கப்படும் லிசிப்ரியா, அவ்வாறு அழைக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

"எனக்கென சொந்தமான அடையாளம் உள்ளது. கிரேட்டா தனது போராட்டங்களை தொடங்கும் முன்னரே ஜூலை 2018இல் என் இயக்கத்தை நான் தொடங்கிவிட்டேன்," என்று அவர் தெரிவிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்