பரனூர் சுங்கச்சாவடி ஒரு மாத காலத்திற்கு பிறகு மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது

சனி, 29 பிப்ரவரி 2020 (16:38 IST)
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வன்முறை சம்பவம், நடந்து முடிந்து ஒருமாத காலத்திற்கு பிறகு, மார்ச் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த ஜனவரி 26ம் தேதி நள்ளிரவு அரசு பேருந்து ஒன்றின் ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் கட்டணம் செலுத்துவது தொடர்பான தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றிய நிலையில், பேருந்தில் இருந்த பயணிகள் கூட்டமாக வந்து, சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.

வன்முறை காரணமாக சுமார் ஐந்து மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை சீர்படுத்தினர்.

வன்முறையில், 12 சுங்கச்சாவடி பூத்துகளும் சேதமடைந்தன. கணினிகள் உடைக்கப்பட்டன. சுங்கச்சாவடி ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர் மற்றும் வசூலான ரூ.18 லட்சம் பணமும் காணாமல் போனது என புகார் தெரிவித்திருந்தனர்.

சரக்கு வாகனங்கள் மற்றும் வெளியூர் பேருந்துகள் அதிகம் பயன்படுத்தும் பரனூர் சுங்கச்சாவடியில், சுமார் ரூ.20 லட்சத்திற்கும் மேல் தினமும் சுங்கக் கட்டணமாக வசூல் செய்யப்படும்.

ஆனால் இந்த வன்முறை சம்பவத்தால், கடந்த ஒரு மாத காலமாக பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தற்போது காவல்துறையினரின் பாதுகாப்போடு மார்ச் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என சுங்கச்சாவடி ஊழியர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

வன்முறை சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர், சுங்கச்சாவடி ஊழியர்கள் என மொத்தம் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஜாமீனில் ஆறு பேரும் விடுவிக்கப்பட்டாலும், தொடர்ந்து வழக்கு நடந்துவருகிறது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுங்கச்சாவடி சேதப்படுத்தப்பட்டபோது களவுபோன பணம் மீட்கப்பட்டதா என செங்கல்பட்டு தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் அலெக்சாண்டரிடம் கேட்டோம். ''புகார் கொடுத்தபோது வசூலான மொத்த பணமும் காணவில்லை என தெரிவித்திருந்தார்கள். ஆனால் ஒரு பெட்டியில் இருந்த ரூ.1,20,000 மட்டுமே களவு போனது என்பதைக் கண்டறிந்தோம். மீதமுள்ள தொகை சுங்கச்சாவடியின் மற்றொரு பணபெட்டியில்தான் இருந்தது. பணத்தை எடுத்த நபரை சிசிடிவி காட்சிகளை வைத்துக் கண்டறிந்தோம். அவர் பேருந்தில் பயணித்த நபர்தான். சங்ககிரியைச் சேர்ந்த அந்த நபரைக் கண்டுபிடித்து, பணத்தை மீட்டு, கைது செய்தோம்,'' என்றார் ஆய்வாளர் அலெக்சாண்டர்.

வடமாநில ஊழியர்கள் பணத்தை எடுத்துச்சென்றதாக வெளியான தகவல் குறித்து கேட்டபோது, ''வட மாநில ஊழியர்கள் சுங்கச்சாவடியில் பணிபுரிகிறார்கள். அவர்கள் பணத்தை எடுக்கவில்லை. ஆனாலும் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், இரு ஊழியர்களை கைது செய்தோம். வன்முறை சம்பவத்தின்போது, சுங்கச் சாவடியைப் பலரும் உடைத்தனர். பொது சொத்தை சேதப்படுத்திய நபர்களை அடையாளம் கண்டு அவர்களையும் கைது செய்வோம்,'' என்றார் ஆய்வாளர்.

பரனூர் சுங்கச் சாவடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது போலவே, அடிப்படை வசதிகளும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என பரனூர் சுங்கச் சாவடியை அதிகம் பயன்படுத்தும் லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கணேஷ் பேசுகையில், ''சுங்கச்சாவடியில் சுகாதாரமான கழிவறை இல்லை. முதலுதவி அறை அல்லது ஓட்டுநர்கள் ஓய்வறை என எதுவும் இல்லை. சாலை மோசமான நிலையில் உள்ளது. இதுபோன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், தொடர்ந்து கட்டணம் வசூலிக்கிறார்கள். பரனூர் சுங்கச்சாவடியின் பொறுப்பாளர் யார், எந்த ஆண்டு இந்த சுங்கச்சாவடி எப்போது கட்டப்பட்டது, எப்போது வசூல் முடிவுக்கு வரும் என வெளிப்படையாக அறிவிப்பு ஒட்டப்படவேண்டும்,'' என்றார்.

சுங்கச் சாவடி நிர்வாகிகளிடம் பேசியபோது, அரசாங்க விதிப்படிதான் பரனூர் சுங்கச்சாவடி நடைபெறுவதாக தெரிவித்தனர். ''பரனூர் சுங்கச் சாவடி செயல்படுவதற்குத் தேவையான உரிமம் வைத்துள்ளோம். அரசாங்கம் விதித்துள்ள பணத்தைத்தான் வசூலிக்கிறோம். ஒரு மாதம் கழித்து சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்போகிறோம் என்பதால் காவல்துறையின் உதவியை நாடியுள்ளோம்,'' என தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்