லெஸ்டரில் மதவெறி போராட்டங்கள் தீவிரம் அடைய தவறான தகவல்கள் காரணமா?

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (22:46 IST)
லெஸ்டரில் சமீபத்தில் தீவிரமான அமைதியின்மை அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியது. டஜன் கணக்கானோரை கைது செய்ய அந்த வன்முறை சம்பவங்கள் காரணமாயின. ஆனால், அதில் எத்தனை போராட்டங்கள், ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட தவறான தகவல்களால் தூண்டப்பட்டன தெரியுமா?
 
லெஸ்டரிலும் அதைச் சுற்றியும் பகிரப்பட்ட தவறான உரிமைகோரல்களைத் தேர்வு செய்ய கடந்த ஒரு வாரமாக நாங்கள் முயற்சித்தோம். அவை அமைதியின்மைக்கு எவ்வாறு வழிவகுத்தன மற்றும் அதன் பிந்தைய சூழல்களுக்கு எவ்வாறு வழிவகுத்தன என்பதை அறிய முற்பட்டோம்.
 
தற்காலிக தலைமைக் காவலர் ராப் நிக்சன் பிபிசி டூவின் நியூஸ்நைட்டிடம் இது குறித்து பேசும்போது, "சமூக ஊடகங்களை அழிவுகரமான முறையில் பயன்படுத்த சிலர் வேண்டுமென்றே முயற்சி செய்தனர்," என்று கூறினார்.
 
மேயர் சர் பீட்டர் சோல்ஸ்பியும் ஆன்லைனில் இடம்பெற்ற தவறான தகவல்களே வன்முறை தீவிரம் அடைய காரணம் என்று குற்றம்சாட்டினார். அப்படி நடந்திருக்காவிட்டால் "உள்ளூரில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது" என்கிறார் அவர்.
 
அமைதியின்மையை ஏற்படுத்தியதாக பிடிபட்டவர்களில் குறைந்தபட்சம் ஒருவர், சமூக ஊடக தகவல்களால் தாம் வயப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.
 
லெஸ்டரில் உள்ள மக்கள், பல தரப்பு சமுதாய தலைவர்கள், அமைதியின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரிடம் நாம் பேசியபோது, அவர்கள் செப்டம்பர் ​​17-18க்கு உள்பட்ட வார இறுதி நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான நிலைமைக்கு முந்தைய பதற்றத்தைத் தூண்டியது குறிப்பிட்ட சில வகை தவறான தகவல்களே என்று குறிப்பிட்டனர்.
 
ஒரு பொய்க் கதை பல முறை வெவ்வேறு வகைகளில் கூறப்பட்டன.
 
"இன்று எனது 15 வயது மகள்... கிட்டத்தட்ட கடத்தப்படவிருந்தாள்," என்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட ஒரு இடுகையை, அக்கறை மிக்கவராக கருதப்படும் ஒரு தந்தை பதிவிட்டிருந்தார்.
 
"3 இந்திய பையன்கள் வெளியே வந்து அவளிடம் அவள் முஸ்லிமா என்று கேட்டனர். அவள் 'ஆம்' என்று சொன்னாள். உடனே ஒரு பையன் அவளைப் பிடிக்க முயன்றான்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
 
சமூக செயல்பாட்டாளரான மஜித் ஃப்ரீமேன், செப்டம்பர் 13ஆம் தேதி அந்த குடும்பத்தின் கதையைப் பகிர்ந்த பிறகு, அந்த இடுகை ஃபேஸ்புக்கில் மட்டுமின்றி ட்விட்டரில் கூட நூற்றுக்கணக்கான முறை லைக் செய்யப்பட்டது.
 
அந்த நபர், "நேற்று [12 செப்டம்பர்] அந்த சம்பவம் நடந்துள்ளது என உறுதிப்படுத்துகிறேன்" என்று கூறி காவல்துறையின் தகவலையும் பகிர்ந்திருந்தார். ஆனால் உண்மையில் அவர் குறிப்பிட்டது போல 'கடத்தல் முயற்சி' எதுவும் நடக்கவில்லை.
 
ஒரு நாள் கழித்து, லெஸ்டர் காவல்துறை விசாரணைக்குப் பிறகு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில் அத்தகைய "சம்பவமே நடக்கவில்லை" என்று கூறப்பட்டிருந்தது.
 
இதைத்தொடர்ந்து மஜித் ஃப்ரீமேன் தனது இடுகையை நீக்கிவிட்டு, 'கடத்தல் முயற்சி நடக்கவில்லை' என்றும், தமது ஆரம்ப இடுகை, குற்றச்சாட்டை முன்வைக்கும் குடும்பத்தினருடனான உரையாடலை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார்.
 
ஆனால் இந்த விஷயத்தில் 'சேதம்' ஏற்கெனவே செய்யப்பட்டு விட்டது. நடக்காத ஒரு கடத்தல் கூற்று, மற்ற தளங்களில் வேகமாக பகிரப்பட்டன. வாட்ஸ்அப்பில் பலமுறை ஃபார்வர்டு செய்யப்பட்ட இந்த தகவல்கள் ஆரம்பத்தில் அதைப் படித்த சிலரால் அவை உண்மை என்று நம்பப்பட்டு மிகவும் வேகமாக தங்களுடைய தொடர்புகளுக்கு பயனர்களால் பகிரப்பட்டன.
 
இன்ஸ்டாகிராமில், சுயவிவர குறிப்புடன் கூடிய படத்தில், லட்சக்கணக்கானோரை பின்தொடர்பவர்களை கொண்ட சிலர் - ஃப்ரீமேனின் அசல் இடுகை ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்தனர். அத்துடன் தோற்றுப்போன கடத்தல் முயற்சிக்கு பின்னால் இருந்த இந்து நபர் என்று ஒருவர் சமூக ஊடக பக்கங்களில் குற்றம்சாட்டப்பட்டார்.
 
ஆனால் தனியார் இணையவழி வலையமைப்பில் இதுபோன்ற தகவல்கள் எத்தனை வேகத்தில் செல்லும் என்பதை அளவிடவே முடியாது. இந்த இடுகை மிக தீவிரமாக பகிரப்பட்டதால், அதை தேடிப்பார்க்க கிரெளட்டேங்கிள் இணைய பக்க வாய்ப்பை நாம் பயன்படுத்தினோம். அதில் கடத்தல் முயற்சி உரிமை கோரல்கள் மேற்கொண்டு பகிரப்படவில்லை என அறிந்தோம். அந்த இடுகை அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஆரம்பத்தில் பகிரப்பட்ட உரிமைக்கோரல்கள் இப்போதும் சில தனிப்பட்ட குழுக்களில் வலம் வருகின்றன.

 
லெஸ்டரில் உள்ள பலர் பதற்றத்தின் வேர்கள் இன்னும் பின்னோக்கிச் செல்வதாகக் கூறுகின்றனர். ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வியத்தகு வெற்றியைப் பெற்றது. அதைத்தொடர்ந்து லெஸ்டரில் நடந்த ஒரு சம்பவம் மீது ஊடகங்கள் கவனம் செலுத்தின.
 
 
பல தவறான தகவல்களைப் போலவே, அடுத்து என்ன நடந்தது என்பது முற்றிலும் புனையப்பட்டது என்பதை விட திரித்துப் பகிரப்பட்ட விஷயமாக இருந்தது.
 
 
அதன் விளைவாக ஏதோ நடந்தது. இரவில் பதிவான அந்த காணொளியில், இந்திய கிரிக்கெட் அணி ஆடையை அணிந்திருந்த ஒரு குழு, லெஸ்டரில் உள்ள மெல்டன் சாலையில் அணிவகுத்துச் சென்றது. அந்த குழு தாக்கப்படும் முன்பாக, அவர்கள் பாகிஸ்தானுக்கு மரண அடி என குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு போலீஸ் சம்பவ பகுதிக்கு வந்தது. ஆனால், சமூக ஊடகங்களில், பலர் கூட்டத்திற்குள் நுழைந்து ஒரு முஸ்லிம் நபரை தாக்கினர் என்று கூறி மற்றொரு காணொளியை பகிர்ந்தனர். அடி வாங்கிய அந்த நபர் ஒரு சீக்கியர் என்று பின்னர் கூறப்பட்டது.
 
 
இந்த அமைதியின்மையின் தடத்தை மேலும் ஆழமாக குறைந்தபட்சம் மே 22ஆம் தேதி நடந்த சம்பவத்துடன் சில லெஸ்டர்வாசிகள் உற்றுநோக்கினர்.
 
 
சமூக ஊடக பதிவுகளில் "இந்து தீவிரவாதிகள்" என்று வர்ணிக்கப்படும் ஒரு குழுவினரால் 19 வயது முஸ்லிம் இளைஞன் பின் தொடர்வதைக் காட்டும் காணொளி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. பிற பதிவுகள் இந்துத்துவாவைக் குறிப்பிட்டன. இந்த சித்தாந்தம் பெரும்பாலும் இந்தியாவில் உள்ள வலதுசாரி இந்து தேசியவாதிகளுடன் தொடர்புடைய ஒரு கருத்தியல் ஆகும்.
 
அந்த காணொளியில் மோசமான காட்சிகள் அதிகம் காட்டப்படவில்லை - அது மங்கலாகவும் கருப்பு-வெள்ளையாகவும் இருந்தது. கைகலப்பு நடக்கும் முன் ஒரு தெருவில் ஆண்கள் குழு ஒன்று ஓடுவது மட்டுமே அதில் தென்பட்டது. இந்த நபர்கள் யார், அவர்களின் குறிப்பிட்ட பின்புலம் என்ன என்பதை புரிந்து கொள்வது கடினம்.
 
 
இந்த விஷயத்தில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வந்த புகார்கள் தொடர்பாக விசாரித்து வருவதாகக் கூறிய காவல்துறை, 28 வயது நபரை விசாரித்ததாக தெரிவித்தது. ஆனால், இந்த விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் காவல்துறையினர் கூறினர்.
 
 
அச்சம்பவத்தின் உண்மைத்தன்மை இன்னும் ஆராயப்பட்டு வரும் நிலையில், சில சமூக ஊடக இடுகைகளில், இது 'மத ரீதியிலான உந்துதல்' என விவரிக்கும் வகையில் தொடர்ந்து வெளிப்படையாகவே கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
 
 
சமூக ஊடகத் திரிபு மற்றும் தவறான தகவல்கள் உண்மையில் எந்த அளவுக்கு அமைதியின்மையைத் தூண்டிவிட்டன என்பதை கண்டறிவது மிகவும் கடினம்.
 
இந்த மூன்று சம்பவங்களும் சமூக ஊடக செயல்பாட்டின் சலசலப்புகளைத் தூண்டிய ஒரே அத்தியாயங்கள் அல்ல. ஆனால் அவை செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட பெரிய வன்முறைக்கு சற்று முன் மேற்கோளிட்டு பகிரப்பட்டவை.
 
 
லெஸ்டரில் நடந்த அந்த நிகழ்வுகள், பதற்றங்கள் மற்றும் சீர்குலைவுகள் தேசிய ஊடகங்களில் திடீரென அதி முக்கியத்துவம் பெற்றன, சமூக ஊடக இடுகைகளில் அவை விரிவாகவும் அதிகமாகவும் பகிரப்பட்டன.

 
பிபிசி மானிட்டரிங் பிரிவு, வர்த்தக ரீதியிலான ட்விட்டர் பகுப்பாய்வுக் கருவியான Brandwatch மூலம் நடத்திய ஆய்வில் - சமீபத்திய பதற்றங்களின் சூழலில் லெஸ்டரை குறிப்பிடும் சுமார் அரை மில்லியன் ட்வீட்களை ஆங்கிலத்தில் இருந்ததாக அடையாளம் கண்டது.
 
2,00,000 ட்வீட்டுகளின் மாதிரிகளில், பாதிக்கும் மேலான இடுகைகள், இந்தியாவில் உருவான கணக்குகளால் செய்யப்பட்டன என்பதை பிபிசி மானிட்டரிங் அறிந்தது. கடந்த வாரத்தில் பல இந்திய கணக்குகள் பயன்படுத்திய சிறந்த ஹேஷ்டேக்குகளில் #Leicester, #HindusUnderAttack #HindusUnderattackinUK ஆகியவை முக்கியமானவை.
 
 
இந்த ஹேஷ்டேக்குகளை தவறான வகையில் அந்த கணக்குகள் கையாண்டதையும் பிபிசி கண்டறிந்தது.
 
 
இந்த ஹேஷ்டேக்குகளில் சிலவற்றை அதிகம் பயன்படுத்துபவர், எடுத்துக்காட்டாக, இந்தியாவில் வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். அவ்வாறு பகிரப்பட்ட இடுகைக்கு உரியவர் தமது கணக்கில் சுயவிவர படத்தை கொண்டிருக்கவில்லை. மேலும், அந்த கணக்குகள் இந்த மாத தொடக்கத்தில் மட்டுமே தொடங்கப்பட்டிருந்தன.
 
இவை "நம்பகமற்ற செயல்பாடு" என்று கூறுவதற்கு இதுவே உன்னதமான அறிகுறிகளாகும், அதாவது தனிநபர்கள் வேண்டுமென்றே பல கணக்குகளைப் பயன்படுத்தி ஒரு கதையைத் தூண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இதன் மூலம் இருப்பதாக அறிய முடிகிறது.

 
இந்த ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பகிரப்பட்ட முதல் 30 URLகளை பிபிசி ஆய்வு செய்தது. அவற்றில் 11, செய்தி இணையதளமான OpIndia.com எழுதிய கட்டுரைகளுக்கான இணைப்புகள் ஆகும். இது "இந்தியாவின் வலதுசாரி பக்கத்தை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தளம்" என்று தன்னை அழைத்துக் கொள்கிறது.
 
 
நம்பகத்தன்மையற்ற கணக்குகளுடன், இந்தக் கட்டுரைகள் இருந்தபோதும், லட்சக்கணக்கானோரை பின்தொடருவோராகக் கொண்ட சில உண்மையான கணக்கு வைத்திருக்கும் பயனர்களாலும் அந்த இடுகைகள் பரவலாகப் பகிரப்பட்டன.
 
 
OpIndia கட்டுரைகளில் ஒன்று, ஹென்றி ஜாக்சன் சொசைட்டியைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் சார்லட் லிட்டில்வுட், முஸ்லிம்களின் வன்முறை அச்சுறுத்தல்களால் பல இந்து குடும்பங்கள் லெஸ்டரை விட்டு வெளியேறியதாக ஜிபி நியூஸிடம் கூறினார்.
 
அந்தக் கட்டுரை கிட்டத்தட்ட 2,500 முறை ரீட்வீட் செய்யப்பட்டது. லெஸ்டர் காவல்துறையோ அப்படி வெளியேறியதாக கூறப்படும் குடும்பங்கள் பற்றிய எந்தவொரு தகவலும் தங்களிடம் இல்லை என்று தெரிவிக்கிறது.
 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், செப்டம்பர் 17-18க்கு முன்பு இதுபோல மிகப்பெரிய அளவில் அமைதியின்மையை தூண்டக்கூடிய இத்தனை அதிகமான ட்வீட்டுகள் பகிரப்படவில்லை.
 
பிரிட்டனில் அமைதியின்மையை தூண்டுவதற்காகவும், லெஸ்டருக்குள் பிரச்னை செய்யவும் இந்து செயல்பாட்டாளர்கள் பேருந்தில் ஏற்றப்படுவதாக பரவலாகப் பரப்பப்பட்டது.

 
அன்றைய தினம் போலீஸார் கைதுக்கு உள்ளானவர்களின் அடையாளத்தை நாம் சரிபார்த்தோம். அன்றைய தினம் அதாவது செட்பம்பர் 23ஆம் தேதி போலீஸார் 47 பேரை கைது செய்தனர். அதில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

 
கைதானவர்களில் 36 பேர் லெஸ்டரில் இருந்து வந்தவர்கள். ஒருவர் மார்க்கெட் ஹார்பரோவில் இருந்தும் எட்டு பேர் பர்மிங்ஹாமில் இருந்தும் இருவர் லண்டனில் இருந்தும் வந்தவர்கள்.
 
 
சில இடுகைகள், குறிப்பிட்ட லண்டன் பேருந்தில் 'இந்து செயல்பாட்டாளர்களை' ஏற்றி அனுப்புவது வழக்கம் என்று கூறின.
 
 
செப்டம்பர் 18 முதல் வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டரில் பரவிய காணொளியில், லண்டனில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு வெளியே ஒரு பேருந்து நிற்பதைக் காட்டியது, அந்த பேருந்து அப்போதுதான் லெஸ்டரில் இருந்து திரும்பி வந்ததாக பின்னணி குரல் ஒலிக்கிறது.

 
மறுநாள் இன்ஸ்டாகிராமில் வெளியான காணொளியில் பேருந்து நிறுவன உரிமையாளர், "அந்த இடுகைகளால் நிறைய பேர் என்னை அழைக்கிறார்கள், என்னை மிரட்டுகிறார்கள், எந்த காரணமும் இல்லாமல் என்னை இழிவாக பேசுகிறார்கள்," என்று தெரிவித்தார்.
 
சர்ச்சை ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்
 
கடந்த இரண்டு மாதங்களில் தமது பேருந்துகள் ஒன்று கூட லெஸ்டருக்கு செல்லவில்லை என்றும், செப்டம்பர் 17-18 வார இறுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் தமது பேருந்துகள் இருந்ததை காட்டும் ஜிபிஎஸ் டிராக்கர் ஆதாரத்தையும் அந்த பேருந்து உரிமையாளர் வழங்கினார்.
 
 
செப்டம்பர் 19 திங்கட்கிழமை பர்மிங்ஹாமில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணங்கள் குறித்தும் தவறான கூற்றுக்கள் பரப்பப்பட்டன.

 
ட்விட்டரில் ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்ட அந்த பதிவுகளில் பல, தீ வைப்பு சம்பவத்துக்கு காரணம் "இஸ்லாமியவாத தீவிரவாதிகள்" என்று குற்றம்சாட்டின.
 
 
வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் தீயணைப்பு சேவை நடந்த தீ விபத்து குறித்து விசாரித்து வழங்கிய அறிக்கை முடிவில், குப்பைகளை வெளிப்புறமாக எரித்ததால் தற்செயலாக சம்பவம் நடந்ததாக கூறியிருந்தது.
 
இந்த பதிவுகள் அனைத்தையும் வைத்து, லெஸ்டர் அமைதியின்மை சம்பவத்துக்குப் பிந்தைய தகவல்களில் பெரும்பாலானவை தவறானவை அல்லது திரிக்கப்பட்டவை என்பதை நிச்சயமாக கூற முடியாது.

 
மிகவும் பரப்பப்பட்ட காணொளிகளில் ஒன்று, முகமூடி அணிந்த இந்து ஆண்கள் குழு ஒன்று, லெஸ்டரின் கிரீன் லேன் சாலை வழியாக அணிவகுத்துச் செல்வதைக் காட்டியது. அது அதிக முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதி. அங்கே "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற இந்து கோஷத்தை இந்த குழு எழுப்பியது.
 
 
மற்றொரு காணொளியில், கோவிலுக்கு வெளியே இந்து காவி கொடியை ஒரு முஸ்லிம் நபர் கீழே இழுப்பதைக் காட்டுவதாகக் கூறி சுவரொட்டிகளுடன் பகிரப்பட்டது

 
செப்டம்பர் 17ஆம் தேதி சனிக்கிழமை இரவு நகரின் பெல்கிரேவ் சாலையில் உள்ள ஒரு கோவிலில் ஒரு கொடி உண்மையில் கீழே இழுக்கப்பட்டது. காவல்துறை அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இருப்பினும், குற்றவாளி யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பதற்றங்களை அதிகப்படுத்திய தவறான கூற்றுகள் மற்றும் எரிச்சலூட்டும் பதிவுகள் இந்த சமூகங்களைச் சேர்ந்த பல உள்ளூர் மக்களால் கண்டிக்கப்பட்டுள்ளன.
 
 
பல தசாப்தங்களாக, இந்தியா மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்காவின் சில பகுதிகளிலிருந்து பிரிட்டனுக்கு வந்த தெற்காசியர்களின் தாயகமாக இந்த நகரம் உள்ளது, மேலும் அவர்கள் அருகருகே வாழ்ந்து சம உரிமைகளுக்காக ஒன்றாகப் போராடினர்.
 
சிலர் இந்த அமைதியின்மை மற்றும் அதற்கான எதிர்வினையை இந்துத்துவா சித்தாந்தத்துடன் இணைக்கிறார்கள். இந்திய அரசியல் தங்களுடைய நகருக்குள் இறக்குமதி செய்யப்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்த அமைதியின்மையின் தொடக்கத்துக்கும் அத்தகைய குழுக்களுக்கும் இடையே நேரடி தொடர்பை பிபிசி இதுவரை கண்டறியவில்லை.

 
இந்த வன்முறை அமைதியின்மைக்கு என்ன காரணம் என்பதை துல்லியமாகக் குறிப்பிடுவது கடினம், ஆனால் ஒன்று தெளிவாக உள்ளது. 'சமூக ஊடகங்கள்' மேலும் பிளவுகளை விதைப்பதற்கான 'ஊக்கியாக' இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
 
 
யாஸ்மினாரா கான், அகமது நூர், குஷ் சமேஜா, ஸ்ருதி மேனன், நெட் டேவிஸ், ஜோஷ்வா சீதம், டேனியல் பலும்போ ஆகியோரின் கூடுதல் தகவல்களுடன் இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்