மலேசியாவில் யாசின் அரசுக்கு பெரும்பான்மை இல்லை - அரசியலில் பரபரப்பு

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (14:29 IST)
மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் தலைமையிலான 'பெரிக்கத்தான் நேசனல்' அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளதாக அறிவிப்பு. 

 
மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் தலைமையிலான 'பெரிக்கத்தான் நேசனல்' அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளதாக முக்கிய கூட்டணிக் கட்சியும் மலாய்க்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (யுஎம்என்ஓ) கூறியுள்ளது. நேற்று இரவு இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, இன்று காலை பிரதமர் மொஹிதின் யாசின், மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதினை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
 
ஆனால், சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது அலுவல்பூர்வமாக தெரியவரவில்லை. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தமது அரசாங்கம் நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்யும் என பிரதமர் மொஹிதின் யாசின் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். அரண்மனை வட்டாரங்களில் இருந்து இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
 
நாட்டில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மொஹிதின், "எனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதற்கான ஆதரவுக் கடிதங்களை வழங்கும் எம்.பி.க்களின் கடிதம் தொடர்பாக மாமன்னரிடம் தெரிவித்துள்ளேன்," என்று கூறினார்.
 
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு யுஎம்என்ஓ கட்சித் தலைவர் சாஹித் ஹமிதி காணொளி வாயிலாக நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, மொஹிதினின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறும் கடிதத்தை போதுமான எம்.பி.க்களிடம் இருந்து சேகரித்துள்ளதாகவும் அவை மாமன்னரிடம் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
அந்த அடிப்படையில் ஆளும் பெரும்பான்மையை மொஹிதின் அரசு இழந்து விட்டது என்றும் சாஹித் ஹமிதி கூறியிருந்தார். மலேசியாவில் ஆளும் அரசின் தோல்விகளுக்கு மொஹிதின் யாசின் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சாஹித் ஹமிதி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்