ஸ்கைப் வழியாக பாலியல் உறவை தேடும் நபர், தனது நிஜ வாழ்க்கையை விட ஸ்கைப் வாழ்க்கையை வாழத் துடிக்கிறார். அது அவரது உண்மை வாழ்க்கையை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதுதான் மே 12ம் தேதி வெளியாகவுள்ள 'லென்ஸ்' என்ற திரைப்படத்தின் சாராம்சம்.
இயக்குநர் மற்றும் கதையின் நாயகனாக நடித்துள்ள ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், இணையத்தில் பாலியல் காட்சிகள், இணையத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் பாலியல் தொடர்புகள், தொழில்நுட்ப வெளியில் தொலைந்து போகும் தனிநபர் உரிமையை பேசுபொருளாக்கியுள்ளார்.
எல்லோரிடமும் உள்ள ஸ்மார்ட்போன், கணினி தொழில்நுட்பம் போன்றவை வாழ்க்கையை எளிமையாக்குகிறது என்றாலும், அது எவ்வளவு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது என்ற மறுபக்கத்தை தனது படம் காட்டுகிறது என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
இணையத்தில் பாலியல் உறவுகள், பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்கள், பாதுகாப்பின்மை பற்றிப் பேசும் இந்த படத்தை பதின்ம வயதினர் மற்றும் அவர்களது பெற்றோர் நிச்சயம் பார்க்க வேண்டும் என்கிறார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
அந்தரங்கத்தை வியாபாரமாக்கும் அவலம்
தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் லென்ஸ் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பரிசுகளை வென்ற பிறகு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இணையத்தில் பாலியல் காட்சிகளை வெளியிடும் நபர்களை கேள்வி கேட்காமல், காட்சியில் தோன்றும் நபர்களின் நடத்தையை கேள்வி கேட்கும் போக்கை மாற்றவேண்டும் என்கிறார் தமிழில் படத்தை வெளியிடும் இயக்குநர் வெற்றிமாறன்.
''தனி நபர்களின் படங்கள், அந்தரங்க காட்சிகளை படம் எடுப்பது, அதை வைத்து ஏமாற்றுவது போன்ற செயல்கள் மிக சாதாரணமாகிவிட்டன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் படம் இது,'' என்கிறார் வெற்றிமாறன்.
நிஜ வாழ்க்கையில் லென்ஸ் பட நாயகன்கள்
லென்ஸ் பட நாயகனை போல நிஜ வாழ்க்கையில் இணைய உலகத்தில் பாலியல் வாழ்க்கையை வாழும் நபர்கள் என்ன ஆகிறார்கள்?
பதில் தருகிறார் பெங்களுருவில் உள்ள தேசிய மனநல சுகாதார மற்றும் நரம்பியல் மருத்துவமனையைச் சேர்ந்த மனோஜ் குமார் சர்மா.
இணையப் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை குணப்படுத்தும் சிறப்பு மையத்தில் பணிபுரியும் மருத்துவர் மனோஜ் குமார் சர்மா, ''பெரும்பாலானவர்களுக்கு தங்களது மன உளைச்சலை தீர்க்கும் வழியாக பாலியல் காட்சிகளை பார்க்கும் பழக்கம் தொடங்குகிறது. நாளடைவில் அந்த காட்சிகளை பார்க்க முடியாத போது, அதுவே மனநிலை பாதிப்பாக அமைந்துவிடுகிறது,'' என்கிறார்.
சமீபத்தில் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த ஐந்து நபர்களும் அதிக சம்பளம் ஈட்டும் வேலையில் உள்ளவர்கள், திருமணமானவர்கள், 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றார்.
''சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் முதலில் மன உளைச்சலில் இருந்து விடுபட பாலியல் காட்சிகளை பார்த்தார். பின்னர், வீட்டில் தனியாக இருந்த சமயங்களில் பாலியல் காட்சிகளைப் பார்த்தார். அடுத்து வார இறுதி நாட்களில் அதிகமாக பார்ப்பது, வேலை அதிகம் இல்லாத நேரத்தில் பார்த்து உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருப்பது என பழக்கம் அதிகரித்து அடிமையாகிவிட்டார்,'' என்றார்.
''சிறிது நாட்களில் பணியிடத்தில் கூட சுரேஷுக்கு பாலியல் காட்சிகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. தனது மனைவியிடம் இருந்து வெகுநாட்கள் விலகி இருந்தார். தூங்குவதற்கு முன் பார்ப்பது, சாப்பிடுவதற்கு முன் பார்ப்பது என முற்றிய நிலையில், மூன்று மணி நேரம் தொடர்ந்து பார்ப்பது என்ற நிலைக்கு போனார். ஒரு நாள் அவரது மனைவிக்கு தெரிய வந்தது. அதன் பின்னர்தான் இங்கு அழைத்துவரப்பட்டார்,'' என்றார் ஷர்மா.
''சுரேஷுக்கு நான்கு முதல் ஆறு மாதங்கள் சிகிச்சை கொடுத்தோம். ஆனால் சிகிச்சை மட்டுமே போதாது. அவரது சுயகட்டுப்பாடு மட்டுமே அவரை குணப்படுத்தும் என்று கூறினோம்,'' என்றார் ஷர்மா.
இணைய பாலியல் அடிமை பழக்கத்தில் இருந்து மீளவேண்டுமா?
உங்கள் அன்றாட வாழ்க்கையில் உங்கள் நண்பரோ, உங்கள் குடும்ப உறுப்பினரோ அல்லது நீங்களோ கூட இணையத்தில் பாலியல் காட்சிகளுக்கு அல்லது பாலியல் உறவுகளுக்கு அடிமைப்பட்டிருந்தால் செய்ய வேண்டியது என்ன என்பதை விளக்குகிறார் சென்னையை சேர்ந்த பாலியல் மருத்துவ நிபுணர் காமராஜ்.
'முதலில் வீட்டில் வை-பை(wifi) வசதியை நிறுத்திவையுங்கள். தேவையான சமயங்களில் மட்டுமே இணையத்தை பயன்படுத்துங்கள். சிகிச்சைகள் மட்டுமே தீர்வாகாது. மன உறுதியுடன் உங்களது நிஜ வாழ்க்கைத் துணையை நாடுங்கள். சுயகட்டுப்பாடு மட்டுமே உங்களை இணையத்தில் பாலியல் உறவுகளை நாடும் எண்ணத்தை காப்பாற்றும்,'' என்கிறார்.
தன்னிடம் ஆலோசனை பெற வந்த பாலியலில் ஆர்வமற்ற தம்பதிகள் பலர் இந்த பழக்கம் பற்றி பேச தயங்கியதாக தெரிவித்த காமராஜ், '' இணைய காட்சிகள், பெண்ணை முழுக்க ஒரு பாலுறவுக்கான பொருளாக காட்டுகின்றன. இதனால் தங்களது மனைவியை வன்மையாக நடத்தியவர்களும் உண்டு. இணையத்தில் வெளியாகும் காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை உணரவேண்டும்,'' என்கிறார்.