பாஜகவின் புதிய செய்தி தொடர்பாளராக தம்பிதுரை - தங்கம் தென்னரசு பதிலடி

Webdunia
புதன், 10 மே 2017 (17:59 IST)
நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என மக்களவை துணை சபாநாயகர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
 
இந்நிலையில், தமிழக பள்ளிகல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாகா அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


 

 
“நீட்” தேர்வை கொண்டு வந்தது பா.ஜ.க கிடையாது.  தி.மு.க. கூட்டணியிலிருந்த மன்மோகன் சிங் ஆட்சியின் காலத்தில் தான் நீட் தேர்வு வரவேண்டுமென்று கூறப்பட்டது” என்று மக்களவை துணை சபநாயகர் மு. தம்பித்துரை அவர்கள் கூறி, “தமிழகத்தில் அறிவிக்கப்படாத பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக” மாறியிருப்பது வியப்பளிக்கிறது. மக்களவை துணை தலைவருக்கு உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரி பிரச்சினைகளில் அவர் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளராக தாராளமாக செயல்படட்டும். ஆனால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைத்து இருக்கும் “நீட்” தேர்வுக்கு வக்காலத்து வாங்கிப் பேட்டியளித்து லட்சக்கணக்கான கிராமப் புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று திரு தம்பித்துரை அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
 
அது மட்டுமின்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த நேரத்திலேயே 18.7.2013 அன்று இந்த “நீட் தேர்வு” கொண்டு வரும் மருத்துவக் கவுன்சில் அறிவிக்கைகள் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது என்பதும் பாவம் திரு தம்பித்துரை அவர்களுக்குத் தெரியவில்லை. அப்படி ரத்து செய்யப்பட்ட “நீட்” தேர்வைத்தான் இப்போது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்பது கூட இவரது நினைவுக்கு வரவில்லை என்றால், முன்னாள் முதலமைச்சர் மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஒரு முறை சொன்னது போல் தி.மு.க.வை மட்டும் விமர்சிக்கும் “செலக்டிவ் அம்னெசியாவில்” திரு தம்பித்துரை அவர்கள் சிக்கி தவிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. 
 
மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் அவருக்கு கடந்த சில மாதங்களாகவே கடுமையான பணிகள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். “சசிகலாவை எப்படி முதலமைச்சர் ஆக்குவது” “தினகரனை எப்படி துணை பொதுச் செயலாளர் ஆக்குவது” “ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அணிகளை எப்படி இணைப்பது” “நடக்கும் குழப்பங்களில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசிடம் எப்படி நல்ல பெயர் வாங்குவது” போன்றவற்றில் தன் நேரத்தை எல்லாம் செலவழித்துக் கொண்டிருக்கும் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை அவர்களுக்கு “நீட் தேர்வு” பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள நேரமில்லை. 


 

 
உச்சநீதிமன்றத்தால் ரத்து  செய்யப்பட்ட “நீட்” தேர்வை மீண்டும் கொண்டு வந்தது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு என்பதை மறைப்பதற்காக தி.மு.க. மீது வீண்பழி போட்டு “பா.ஜ.க.வையும் காப்பாற்றுகிறார்” “அதிமுக ஆட்சியையும் காப்பாற்றுகிறார்” என்றுதான் தோன்றுகிறது. பா.ஜ.க.வின் புதிய செய்தி தொடர்பாளராக மாறியிருக்கும் திரு தம்பித்துரை “நீட் தேர்வு” குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு பேட்டி கொடுப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
நீட் தேர்வை அவசர அவசரமாக புகுத்திய மத்திய பா.ஜ.க. அரசையும், நீட் தேர்வு என்ற பெயரில் மாணவ மாணவிகளை துன்புறுத்தியவர்களை கண்டிக்காத அதிமுக அரசையும் எதிர்த்துப் பேசுவதற்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரைக்கு துணிச்சலும் இல்லை. திராணியும் இல்லை. அதனால் நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க.வை வம்புக்கு இழுத்து  அரைவேக்காட்டுத் தனமாக ஒரு பேட்டி கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். 
 
“தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று இரு மசோதாக்களை திராவிட முன்னேற்றக் கழகமும் ஆதரித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத திரு தம்பித்துரை தி.மு.க. மீது குற்றம் சுமத்த துளிகூட தகுதியில்லாதவர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சி.ஆனந்த குமார்
அடுத்த கட்டுரையில்