இம்மானுவேல் மக்ரோங், மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மை இழந்தது.
இந்நிலையில், அறுதிப் பெரும்பான்மையை வழங்குமாறு தனது வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், அவருடைய மையவாத கூட்டணி, தேர்தலில் டஜன் கணக்கான இடங்களை இழந்தது. பிரெஞ்சு அரசியல் களம் தற்போது தீவிர வலது சாரிகள், இடது சாரிகள் என்ற இரண்டு தீவிர நிலைகளுக்கு இடையில் பிளவுபட்டுள்ளது.
மக்ரோங் சமீபத்தில் நியமித்த பிரதமர் எலிசபெத் போர்ன், இது முன்னெப்போதும் இல்லாத நிலைமை என்று கூறுகிறார்.
அதிபரின் எலிசி அரண்மனையில் ஒரு நீண்ட கூட்டத்திற்குப் பிறகு அவர் தனது மேட்டிக்னான் இல்லத்திற்குத் திரும்பியபோது, நவீன பிரான்ஸ் இதுபோன்றதொரு தேசிய சட்டமன்றத்தைப் பார்த்தில்லை என்று கூறினார்.
"இந்த நிலைமை நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஓர் ஆபத்தைக் காட்டுகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, நடைமுறை பெரும்பான்மையை உருவாக்க நாளை முதல் நாங்கள் வேலை செய்வோம்," என்றார்.
நாடாளுமன்றத்தில் உள்ள மற்ற இரண்டு பெரிய கூட்டணிகளும் மையவாத கூட்டணியோடு ஒத்துழைப்பதில் ஆர்வம் காட்டாதபோது இது தொடரும் எனத் தெரிகிறது. பொருளாதார அமைச்சர் ப்ரூனோ லி மாய்ரே, பிரான்ஸில் ஆட்சி அமைக்க முடியாது என்றில்லை, ஆனால், அதற்கு நிறைய முயற்சி தேவை என்று கூறினார்.
பெரும்பான்மையைஉருவாக்கவலதுசாரிகட்சிகள்உதவுமா?
மைய நீரோட்ட இடதுசாரி கட்சிகள், கம்யூனிஸ்டுகள், பசுமைவாதக் கட்சியான கிரீன்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நியூப்ஸ் கூட்டணி என்ற ஒன்றை உருவாக்குவதில் தீவிர இடதுசாரி தலைவர் ஜான் லுக் மெலென்கான் வெற்றியடைந்தார்.
அதிபரின் கட்சி மொத்தமாக தோல்வியடைந்துவிட்டதாகவும் அனைத்து வாய்ப்புகளும் இப்போது தங்கள் கைகளில் இருப்பதாகவும் அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், மரைன் லு பென் மற்றும் அவருடைய தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியும் 8 இடங்களை 89 ஆக மாற்றிய மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறார்.
மக்கள் தங்கள் முடிவைக் காட்டிவிட்டார்கள். இம்மானுவேல் மக்ரோங்கின் சாகசப் பயணம் முடிந்து சிறுபான்மை அரசாகச் சுருங்கியது அவரது கட்சி அரசு," என்று அவர் கூறினார்.
வலதுசாரி குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையை உருவாக்க உதவுவார்கள் என்று பிரதமர் எதிர்பார்த்தால், அவர்களுடைய செயல்பாடு அந்த நம்பிக்கையை வழங்கும் விதத்தில் இல்லை.
மக்ரோங்கின் அதிகாரம் மீதான ஆசையைக் கேலி செய்யும் பழைய புனை பெயரைக் குறிப்பிட்டு, "மக்ரோங்குக்கு இந்த ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற சமரசம் மற்றும் பேச்சுவார்த்தைகள் நிரம்பியதாக இருக்கும்," என்று ஏ.எஃப்.பி-யிடம் பேசிய அரசமைப்புச் சட்ட பேராசிரியர் டொமினிக் ரூஸ்ஸோ கூறியுள்ளார்.
மக்ரோன் கட்சியில், தங்கள் இடங்களை இழந்த அமைச்சர்களில், வெறும் 56 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சுகாதார அமைச்சர் பிரிஜிட் போர்குய்னன்னும் ஒருவர். பசுமை மாற்றத்திற்கான அமைச்சர் அமெர்லி டி மோண்ட்சாலினும் தோற்கடிக்கப்பட்டார். ஆனால், மற்றொரு முக்கிய நபரான ஐரொப்பிய அமைச்சர் க்ளெமெண்ட் பியூன், முதல் சுற்றில் பின் தங்கினாலும், பிறகு வெற்றி பெற்றுவிட்டார்.
மக்ரோங்கின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரும் நாடாளுமன்றத்தின் தலைவருமான ரிச்சர்ட் ஃபெராண்ட், அவருடைய எதிராளியும் நியூப்ஸ் கூட்டணியைச் சேர்ந்தவருமான மெலனி தாமினிடம் தோல்வியடைந்தார்.
அவருடைய ஆதரவாளர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உரையில், இடதுசாரிகள் மரைன் லூவுடன் நேருக்கு நேர் போட்டியிடும் இடங்களில் தெளிவான வழிகாட்டுதலை வழங்க மறுப்பதன் மூலம், ஆளும் கட்சி தீவிர வலதுசாரிகளுக்கு உதவுவதாகக் குற்றம் சாட்டிய ஜான் லுக் மெலென்கான், இது "மக்ரோனின்" தார்மீக தோல்வியைக் குறிக்கும் முடிவு என்று கூறினார்.
தனது பிரதமராகும் லட்சியத்தை அடைய வாய்ப்பில்லை என்று மறைமுகமாக ஒப்புக்கொண்ட தீவிர இடதுசாரி தலைவர், இப்போது தனது பங்கை மாற்றிக்கொண்டிருப்பதாகக் கூறினார். ஆனால், அவர் போட்டியிடாததால், நாடாளுமன்றத்தில் அவர் இடம்பெற மாட்டார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இம்மானுவேல் மக்ரோன் ஒரு நம்பிக்கை அலையைப் பயன்படுத்தி, குடிமைச் சமூகத்திலிருந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்தார். இந்த முறை நியூப்ஸ் மற்றும் தேசிய பேரணியில் இருந்து புதிய முகங்கள் வந்துள்ளன.
கொலம்பியாவில் அதிபராகும் முன்னாள் கொரில்லா போராளி
பொகோட்டாவின் முன்னாள் மேயரும் முன்னாள் கொரில்லா போராளியுமான குஸ்தாவோ பெட்ரோ கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபராகிறார்.
தற்போதைய செனட்டரான பெட்ரோ, ஞாயிற்றுக் கிழமை நடந்த தேர்தலில் வலதுசாரி அதிபர் ரொடால்ஃப் ஹெர்னாண்டஸை தோற்கடித்தார்.
சுமார் 700,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தனது போட்டியாளரைத் தோற்கடித்து 50.5% வாக்குகளைப் பெற்றதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பல தசாப்தங்களாக மிதவாதிகள், பழைமைவாதிகளால் வழிநடத்தப்பட்டு வந்த நாட்டுக்கு இந்தத் தேர்தலின் விளைவாக ஏற்படவுள்ள ஒரு பெரிய மாற்றத்தை இந்த வெற்றி குறிக்கிறது.
நாடு நிர்வகிக்கப்படும் விதத்தில் மக்களிடையே நிலவிய பரவலான அதிருப்திக்கு நடுவே இந்த வாக்கெடுப்பு நடந்தது. கடந்த ஆண்டு நடந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
62 வயதான பெட்ரோ இதை, "கடவுளுக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி," என்று அழைத்தார்.
"இன்று தாயகத்தின் இதயத்தை நிரப்பியிருக்கும் மகிழ்ச்சியில் பல துன்பங்கள் தணியட்டும்," என்று பெட்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒற்றை பெற்றோரால் வளர்க்கப்பட்டவரும், சமூக-சூழலியல் ஆர்வலருமான பிரான்சியா மார்க்வெஸ், கொலம்பியாவின் முதல் ஆப்பிரிக்க-கொலம்பிய (கருப்பின கொலம்பியர்) பெண் துணை அதிபராகிறார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், டிக்டோக் மற்றும் பிற சமூக ஊடகங்களைப் பெரிதும் நம்பியிருக்கும் பாரம்பரியமற்ற பிரசாரத்தை நடத்திய ஹெர்னாண்டஸ், பெட்ரோவிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
அதில் அவர், "இந்தத் தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார். குஸ்தாவோ பெட்ரோவுக்கு நாட்டை எப்படி நடத்த வேண்டுமென்பது தெரியும். ஊழலுக்கு எதிரான அவருடைய சொற்பொழிவுக்கு அவர் உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
பெட்ரோ, 1980-களில் இப்போது கலைக்கப்பட்ட எம்-19 இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார். அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த பல கொரில்லா அமைப்புகளில் இவருடைய இடதுசாரிக் குழுவும் ஒன்று.
அவர் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தமைக்காக சிறையிலிருந்தார். அரசியல் எதிர்ப்பில் இணைவதற்கு முன்பு அவர் செனட்டராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
இலவச பல்கலைக்கழக கல்வி, ஓய்வூதிய சீர்திருத்தங்கள், உற்பத்தி செய்யாத நிலத்துக்கு அதிக வரி ஆகியவற்றின் மூலம் சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவதாக அவர் பிரசாரத்தின்போது உறுதியளித்தார்.
கம்யூனிஸ்ட் கொரில்லா குழுவான ஃபார்க் உடனான 50 ஆண்டுக்கால நீண்ட மோதலை முடிவுக்குக் கொண்டு வந்த 2016-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதாகவும் இன்னும் செயலிலுள்ள இ.எல்.என் கிளர்ச்சியாளர்களோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.