இந்தியா - சீனா எல்லை மோதல்: மைக்ரோ வேவ் ஆயுதங்கள் ஆயுதங்களை பயன்படுத்தியதா சீனா? அப்படி என்றால் என்ன?

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (23:39 IST)
லடாக்கில், சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) மைக்ரோ வேவ் ஆயுதங்கள் எனப்படும் நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளிவந்த இணைய தள ஊடகச் செய்திகளை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அன்று முற்றிலுமாக மறுத்துள்ளது.
 
இந்திய இராணுவத்தின் கூடுதல் பொது இயக்குநரகம்(ஏ.டி.ஜி.பி.ஐ), தனது ட்விட்டர் தளத்தில், "கிழக்கு லடாக்கில் நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியது குறித்த ஊடக செய்திகள் ஆதாரமற்றவை, அது குறித்த செய்தி போலியானது," என்று ட்வீட் செய்துள்ளது.
 
சீனாவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது என்று பாதுகாப்பு நிபுணரும் இந்தியன் டிஃபன்ஸ் ரிவியூ பத்திரிகையின் இணை ஆசிரியருமான கர்னல் தான்வீர் சிங் கூறுகிறார்.
 
"இதுபோன்ற ஆயுதங்கள் அனைத்தும் ஒரு நேர்க் கோட்டில் தாக்கக்கூடியன. மலைப்பாங்கான பகுதிகளில் பயன்படுத்த எளிதானவை அல்ல. இது அறிவார்ந்த சிந்தனைக்கு ஒவ்வாத ஒரு விஷயம். இது சீனாவின் விஷமப் பிரசாரமேயாகும்," என்று சிங் கூறுகிறார்.
 
ராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்து எழுதுகின்ற மூத்த பத்திரிகையாளர் ராகுல் பேடி, "இது ஒரு போலிச் செய்தி போல் தெரிகிறது. இது ஒரு சீனப் பிரசாரம் போல் தெரிகிறது. அதில் நம்பகத்தன்மை இல்லை," என்று கூறுகிறார்.
 
இந்திய - சீன பதற்றம்
 
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கிழக்கு லடாக்கில் நடந்து வரும் இராணுவப் பதற்றங்களுக்கு மத்தியில் பி.எல்.ஏ இந்த மைக்ரோவேவ் ஆயுதங்களை, இந்திய இராணுவத்தை சில உயரமான பகுதிகளில் இருந்து வெளியேற்றப் பயன்படுத்தியதாகச் சீன ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியர் ஜின் கெய்ன்ராங்கை மேற்கோள் காட்டிச் சில ஊடக அறிக்கைகள், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் மூலோபாய ரீதியாக முக்கியமான இரண்டு மலை முகடுகளை மீட்க, 'மைக்ரோவேவ் ஆயுதங்களை' பயன்படுத்தியதாகவும் இந்த உயரங்களில் இருக்கும் இந்திய வீரர்கள் மீது இலக்கை நோக்கிப் பாயும் ஆற்றல் ஆயுதங்களை (DEW- Directed Energy Weapons) பயன்படுத்தியதாகவும் செய்தி வெளியிட்டன.
 
இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியதை அடுத்து, நிலை குலைந்து போன இந்திய ராணுவம் 15 நிமிடங்களுக்குள் அகற்றப்பட்டது என்று கெய்ன்ராங்க் கூறுவதாகச் செய்தி வெளியானது.
 
இந்திய வீரர்கள் இந்தச் சிகரங்களை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்றும் அதன் பின்னர் பி.எல்.ஏ வீரர்கள் அவற்றை மீண்டும் கைப்பற்றினர் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இரு நாட்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடக் கூடாது என்ற ஒப்பந்தமும் மீறப்படாத வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
 
ஆகஸ்ட் 29 அன்று நடந்த இந்தச் சம்பவம் குறித்த செய்திகளை, இரு நாடுகளும் பல்வேறு காரணங்களுக்காக வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
 
 
மைக்ரோவேவ் ஆயுதங்கள் என்பவை, இலக்கை நோக்கிப் பாயும் ஆற்றல் ஆயுத (DEW) வகையைச் சேர்ந்தவை. இந்த நுண்ணலைகள் மின்காந்த கதிர்வீச்சின் ஒரு வடிவம். அவற்றின் அலைநீளம் ஒரு மிமீ முதல் ஒரு மீட்டர் வரை மாறுபடும். அவற்றின் அதிர்வெண்கள் 300 மெகா ஹெர்ட்ஸ் (100 செ.மீ) முதல் 300 ஜிகாஹெர்ட்ஸ் (0.1 செ.மீ) வரை இருக்கும்.
 
அவை உயர் ஆற்றல் ரேடியோ அதிர்வெண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
 
"வீடுகளில் ஒரு மைக்ரோவேவ் அடுப்பு செயல்படுவது போலவே தான் இந்த ஆயுதங்களும் இயக்கப்படுகின்றன. இதில் மைக்ரோவேவ் அலைகளை அனுப்பும் ஒரு காந்தம் உள்ளது. இந்த அலைகள் ஒரு உணவுப் பொருளை ஊடுருவிச் செல்லும் போது வெப்பத்தை உருவாக்குகின்றன. இந்த ஆயுதங்களும் அதே அடிப்படையில் தான் செயல்படுகின்றன. " என்று சிங் கூறுகிறார்.
 
சீனாவின் கூற்றை நிராகரித்த சிங், "மிகவும் உயரத்தில் இருக்கும் வீரர்களை அகற்ற எவ்வளவு அதிக எடையுள்ள காந்தம் தேவைப்படும் என்று சிந்தித்துப் பாருங்கள்," என்று கூறுகிறார்.
 
போர்களின் வரலாறு மாறியிருந்தால் உலக வரைபடம் எப்படி இருக்கும்?
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வில் சீன நிறுவனத்துக்கு பின்னடைவு
"அது மட்டுமல்ல, நீங்கள் மைக்ரோவேவ் அலைகளைப் பயன்படுத்தி எங்களுக்கு இழப்பை ஏற்படுத்தினால், நாங்கள் என்ன கை கட்டி அமர்ந்திருப்போமா? நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோமா?," என்று சிங் கேள்வி எழுப்புகிறார்.
 
அப்படியே மிகப் பெரிய காந்தத்தை உருவாக்கினாலும், அதை வெகு தொலைவிலிருந்தே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
 
"இது முற்றிலும் சாத்தியமற்றது, இது ஒரு சிறிய மட்டத்தில் நிகழலாம், ஆனால் சீனா கூறும் அளவு உயரங்களில் முற்றிலும் சாத்தியமற்றது," என்று சிங் கூறுகிறார்.
 
மைக்ரோவேவ் ஆயுதங்கள் பயன்பாடு அறிவார்ந்த செயலும் அன்று. செலவு மற்றும் பல அடிப்படைகளில் பார்த்தாலும் இது பயன்படுத்தப்படக் கூடியதே அன்று என்று சிங் ஆணித்தரமாக மறுக்கிறார்.
 
 
இருப்பினும், இதுபோன்ற ஆயுதங்களின் பயன்பாடு சாத்தியம் தான் என்று ராகுல் பேடி கூறுகிறார். " பீரங்கி குண்டுகள், தோட்டாக்கள் பயன்படுத்தப்படாத போரை ’நான்-கான்டாக்ட் வார் ஃபேர்’ என்று கூறுகிறோம். இவற்றில் புற ஊதாக் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது உண்மை தான். என்றாலும், சீனா கூறுவது பொய்யென்றே தோன்றுகிறது." என்கிறார் அவர்.
 
இந்த வகை ஆயுதங்களில் டிஆர்டிஓவும் செயல்படுகிறது என்றும் சீனா இந்த வகை ஆயுதங்களின் உற்பத்தியில் எந்தக் கட்டத்தில் உள்ளது என்பது தெரியவில்லை என்றும் ஆனால், இந்த ஆயுதங்கள் எதிர்கால உண்மை என்றும் பேடி கூறுகிறார்.
 
"ஆனால், லேசர் அடிப்படையிலான ஆயுதங்கள் உள்ளன என்பது உண்மை தான். கலவரங்களைக் கட்டுப்படுத்துவது போன்ற சிறிய பணிகளில் லேசர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், லேசர் ஆயுதங்கள் பெரிய அளவில் நடைமுறையில் இல்லை." என்று சிங் கூறுகிறார்.
 
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், DEW பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. 1930 இல் ராடார் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், இந்த திசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
 
இல்லீன் எம். வாலிங்கின் புத்தகமான High Power Microwaves: Strategic and Operational implications for warfare -ல் இது குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
 
 
வயர்லெஸ் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் இராணுவத் துறையில் முன்னேற்றம் வேகமாக நடந்தது என்று அது கூறுகிறது. மேம்பட்ட முன்னெச்சரிக்கை, கண்டறிதல் மற்றும் ஆயுதப் பயன்பாட்டுக் கட்டுப்பாடு ஆகியவை இதில் அடங்கும்.
 
விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்ந்து அதிர்வெண் நிறமாலை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஆற்றல் நிலைகளை அதிகரிக்க முயற்சித்து வருவதுடன், கூடுதல் பயன்பாடுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
 
'Directed Energy' என்பது ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளாகக் கருதப்பட்டது, ஆனால் இப்போது அது ஒரு யதார்த்தமாகிவிட்டது. இருப்பினும், இலக்கு நோக்கிய ஆற்றல் நிறமாலையின் உயர் சக்தி நுண்ணலை தொழில்நுட்பம் குறித்து குறைந்த அளவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) DEW ஆயுதகளில் செயல்படுகிறது.
 
குவிக்கப்பட்ட ஆற்றலுடன் இலக்கை அழிக்கும் திறன் படைத்தவை இவ்வகை ஆயுதங்கள். லேசர், மைக்ரோவேவ் மற்றும் பார்ட்டிகல் பீம் ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை.
 
இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் ஆயுதங்கள் வீரர்கள், ஏவுகணைகள் மற்றும் ஆப்டிகல் சாதனங்களை இலக்காகக் கொண்டு தாக்க வல்லன.
 
 
வழக்கமான ஆயுதங்களை விட இவ்வகை ஆயுதங்கள் அதிக திறன் படைத்தவை.
 
இந்த ஆயுதங்களை ரகசியமாகப் பயன்படுத்தலாம். காட்சிக்குட்பட்ட நிறமாலையின் மேலேயும் கீழேயும் உள்ள கதிர்வீச்சுகள் கண்ணுக்கு தெரியாதவை, தவிர, இவை ஒலியையும் எழுப்புவதில்லை.
 
ஒளியின் மீது புவியீர்ப்பு சக்தி அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் இது ஓரளவுக்கு மேலேயே செல்லும் திறனைப் பெறுகிறது. இது தவிர, லேசர் கதிர்கள் ஒளியின் வேகத்தில் இயங்குகின்றன, அத்தகைய சூழ்நிலையில் அவை விண்வெளிப் போரில் மிகவும் திறன் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 
லேசர் அல்லது மைக்ரோவேவ் அடிப்படையிலான உயர் சக்தி DEW வகை ஆயுதங்கள், எதிரி ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளைச் செயலிழக்கச் செய்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்