இந்த புவியின் மானுட வரலாறு ஒரு புதிய விடியலை எதிர்நோக்கி இருக்கிறது.
மனிதர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்றவாறு இந்த புவியை தகவமைத்து இருக்கிறார்கள். அது நெருப்பின் கண்டுபிடிப்பாகட்டும் அல்லது விவசாயம் ஆகட்டும். ஆனால், ஹோமோ சேபியன்ஸின் தாக்கம் இப்போது ஒரு முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்று மாசாகட்டும் அல்லது பெருங்கடலில் குவிந்துள்ள குப்பைகள் ஆகட்டும் எங்கும் எதிலும் மனித இனத்தின் தடயங்கள் பதிந்திருக்கிறது. ஆனால், இப்போது இந்த திசையில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இந்த பூமியிலிருந்த 99 சதவீத உயிரினங்கள் பேரழிவுகளில் அழிந்துவிட்டன. இந்த பூமியில் பெரும் விலங்காகக் கருதப்பட்ட டைனோசர் இப்போது இல்லை.
எல்லா பேரழிவுகளிலிருந்தும் இதுவரை தப்பிவந்த மனிதக்குலத்தின் எதிர்காலம் அவ்வளவு ஒளிமயமானதாக இல்லை. ஆம், காலப்போக்கில் மனித இனமும் இல்லாமல் போகலாம்.
மனிதகுலத்தின் அழிவு தவிர்க்க முடியாதது
மனிதகுலம் அழியும் என்பதில் வல்லுநர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எப்போது என்பதுதான் கேள்வி. ஆனால், பலர் அந்த அழிவு மிக அருகில் இருப்பதாகவே கருதுகிறார்கள்.
அடுத்த நூற்றாண்டுக்கு முன்பே இந்த அழிவு நிகழலாம் என கூறுகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வைராலஜிஸ்ட் ஃப்ரான்க் ஃபென்னர். மக்கள் தொகை பெருக்கம், சூழலியல் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கும் என்பது அவர் வாதம்.
புவி அழியாது. மனித இனம் அழியும் மனித இனம் இல்லாமலே இந்த புவி ஜீவிக்கும்.
நம் இருப்பின் சாட்சியாக நாம் இந்த புவியில் விட்டுச் சென்ற தடயங்கள் அனைத்தும், நாம் கணிக்கும் காலத்திற்கு முன்பே இல்லாமல் போகும். நம் நகரங்கள் அழியும், பாலங்கள் சரியும்.
இறுதியில் இயற்கையானது நாம் உருவாக்கிய அனைத்தையும் இல்லாமல் செய்துவிடும் என மனிதர்கள் அற்ற உலகம் என்ற புத்தகத்தில் அலன் வைஸ்மேன் குறிப்பிடுகிறார். 2007ஆம் ஆண்டு வெளியான இந்த புத்தகம், மனிதர்களற்ற இந்த புவி எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறது.
நெகிழி துகள்கள், கதிரியக்கம் மற்றும் பிராய்லர் கோழியின் எலும்புகள் இவைதான் மனித இனம் விட்டு செல்லப் போகும் புதைபடிவ தடயங்கள். கோழியின் எலும்பு இந்த பட்டியலில் எப்படி வந்தது என பார்க்கிறீர்களா? ஆண்டுக்கு குறைந்தது 60 பில்லியன் கோழிகளை இந்த புவியில் கொல்லப்படுகின்றன. அப்போது நிச்சயம் அதன் தடயங்கள் இருக்கத்தானே செய்யும்.
நாம் இந்த புவியில் சில இடங்களுக்குச் செல்லாமல் இருக்கிறோம் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறோம். அங்கெல்லாம் என்ன இருக்கிறது என பார்ப்போம்.
இயற்கை திரும்ப எடுத்துக் கொள்ளும்
செர்னோபில் அணு உலை விபத்து உங்களுக்கு நினைவிருக்கும். உக்ரைனில் 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அந்த அணு உலையைச் சுற்றி உள்ள 30 கி.மீ பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்கிறது.
மனிதர்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ள அந்த பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குச் செடி கொடிகளும், விலங்குகளும் பெருகி வருகின்றன.
இயற்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மன்ற நிதி உதவியில், 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, அந்த அணு உலை இருந்த பகுதியில் இப்போது ஏராளமான வனவிலங்குகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியது. அதாவது அணு கதிர் வீச்சைவிட உள்ளூர் தாவரம் மற்றும் விலங்கினத்துக்கு மனித இனமே மிகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது என விவரித்தது.
இயற்கை ஒரு நிலப்பரப்பை மீட்பதற்கு முக்கிய காரணியாக அந்த பகுதியின் தட்பவெப்பமும் இருக்கிறது.
உதாரணத்துக்கு மத்திய கிழக்கில் உள்ள பாலைவனங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய இடிபாடுகளின் எச்சங்களைக் காண முடிகிறது. ஆனால், வெப்ப மண்டல காடுகள் உள்ள பகுதியில் நூற்றாண்டுக்கு முந்தைய இடிபாடுகளின் எச்சங்களைக் கூட காண முடியாது.
ஐரோப்பியர்கள் 1542ஆம் ஆண்டு பிரேசில் மழைக் காடுகளைப் பார்த்த போது, அங்கு ஓடிய நதிக்கரையில் நகரங்களை அமைத்தனர். ஆனால், ஒரு நோயால் அந்த மக்கள் தொகை முற்றும் முழுவதுமாக அழிந்த போது, அந்த நகரங்களை மீண்டு காடுகள் எடுத்துக் கொண்டன. அதாவது அந்த நகரங்கள் காடாக மாறியது.
யார் துயரடைவார்?
மனித இனம் அழியும் போது, மனித இனத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த விலங்கினமும், செடி கொடிகளும்தான் அதிக துயர் அடையும்.
உரத்தையும், பூச்சி கொல்லிகளையும் அதிகம் சார்ந்து இருந்த பயிர் வகைகளின் இடத்தை அந்த பயிர் வகைகளின் காட்டுச் செடி வகைகள் பிடிக்கும்.
கேரட் வகை அதன் முந்தைய வடிவத்துக்கு மாறும், அது போல சோளமும்தான் என்கிறார் அலன் வைஸ்மேன்.
உதாரணத்துக்குத் தமிழ்நாட்டுப் பின்னணியில் சொல்ல வேண்டுமானால்,இப்போது நம் தேவைக்காக மாற்றியமைக்கப்பட்ட பல் நெல் வகைகள், அதன் முந்தைய வடிவத்துக்கு மாறும்.
பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்ட உடன், பூச்சிகள் பல்கி பெருகும்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்த மனிதன் அனைத்து வகைகளிலும் முயலும் போதே, அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அவை பெரியளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுவிட்டால் என் நேரும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பூச்சிகள் பெருக பெருக அதனை உண்டு வாழும் பிற உயிரினங்களும் பெருகும். அதாவது பறவைகள், கொறித்துண்ணிகள்ம் ஊர்வன என அனைத்தும் பல்கிப் பெருகும். உணவு சங்கிலியில் உள்ள அனைத்து கண்ணிகளும் பெருகும்.
ஆனால், எவை உச்சம் தொட்டாலும், அவை கீழே இறங்கியே ஆக வேண்டும். இப்படி பல்கிப் பெருகிய உயிரினங்கள் அதிக காலம் இருக்காது.அந்த உணவு சங்கிலியில் மனித இனம் இல்லாத காரணத்தினால், அது ஏற்படுத்தும் தாக்கமும் அழுத்தமானதாக இருக்கும்.
ஆம். மனித இனத்தின் அழிவு குறைந்தது 100 ஆண்டுகளுக்கு, ஒரு புதிய இயல்பு உருவாகும் வரை, உணவு சங்கிலியில் தாக்கம் செலுத்தும்.
மனித இனம் அழிந்த பின்னரும் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட சில விலங்குகள் உயிர்பிழைத்து வாழ அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் வைஸ்மேன். ஆடு, மாடுகள் மெல்ல இல்லாமல் போகலாம். ஆனால், பூனை தப்பிப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.
நாயைவிடப் பூனை அனைத்து சூழலுக்கும் ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்கிறது என்கிறார்.
மனித இனம் அழிந்த பிறகு புத்திசாலித்தனம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது?
பதில் கூறுவதற்குக் கடினமான கேள்விதான். புத்திசாலித்தனம் தொடர்பாக மூன்று கோட்பாடுகள் உள்ளன. சூழலியல் சார்ந்த தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளப் புத்திசாலித்தனம் தேவைப்பட்டது, அதன் காரணமாகப் புத்திசாலித்தனம் பரிணமித்தது என்பது ஒரு கோட்பாடு.
மனிதன் குழுக்களாக வாழப் புத்திசாலித்தனம் உதவியது என்பது அடுத்த கோட்பாடு. இறுதியாக, ஆரோக்கியமான ஜீன்தானா என்பதை அளவிடும் கருவியாகப் புத்திசாலித்தனத்தைக் கருதலாம்.
மனித அழிவுக்கு பிறகும் இந்த மூன்று விஷயங்களும் மீண்டும் நிகழலாம்.
மனித இனத்திற்கு அடுத்தபடியாக, மூளை அளவு அதிகம் கொண்டது பாபூன் குரங்கு வகை.
“காடுகளில் வாழும் இனம் அது. ஆனால், காடுகளைக் கடந்தும் அவை வாழப் பழகி இருக்கிறது. நாம் செய்ததை பாபூன் செய்யக்கூடும். ஆனால், அவை நம்மை போல செயல்படாது என்றே தோன்றுகிறது. அது வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிறது,” என குறிப்பிடுகிறார் வைஸ்மேன்.
மனித இனம் அழிந்த பிறது தனது செளகர்யமான எல்லையை விட்டு பாபூன் அல்லது பிற உயிரினங்கள் வெளியே வரக்கூடும்.
இந்த புவியின் எதிர்காலம்
நாளையே அழிந்தால் கூட, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இந்த புவி எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு திரும்ப பல்லாயிரம் ஆண்டுகள் ஆகலாம்.
முன்னமே கரியமில வெளியேற்ற விஷயத்தில் ஆபத்து கட்டத்தைக் கடந்துவிட்டோம்.
அதுமட்டுமல்லாமல், அணு உலை சார்ந்து நமக்கு வேறொரு பிரச்சனை இருக்கிறது.
கதிர்வீச்சு வெளியேற்றத்திலிருந்து இந்த சூழல் மீளும் என்பதை செர்னோபில் உணர்த்துகிறது. ஆனால், இந்த உலகம் முழுவதிலும் உள்ள 450க்கும் அதிகமான அணு உலைகள் மனிதன் அழிந்த பிறகு இயக்க ஆள் இல்லாமல் வெடித்தால் என்ன ஆகும்? அவை எவ்வளவு கதிர்வீச்சை வெளியேற்றும். அவை பூமியில் என்ன மாதிரியான தாக்கத்தைச் செலுத்தும்?
இவை மட்டுமல்ல, எண்ணெய் கசிவு, ரசாயன கசிவு, வெடி விபத்து என மனிதர்கள் விட்டுச் செல்லப் போகும் பல பிரச்சனைகள் இருக்கின்றன.
இதில் பல சூழலியல் கேடுகள் பல நூற்றாண்டுகளுக்குக் கொழுந்துவிட்டு எரியலாம்.
பென்சில்வேனியா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து பல பத்தாண்டுகளுக்குப் பற்றி எரிந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.
மனித இனத்தின் தடயம்
மனித இனம் விட்டு செல்ல போகும் தடயம் அழியப் பல மில்லியன் ஆண்டுகள் கூட ஆகலாம். நாம் விட்டு செல்லும் நெகிழிக் கழிவுகளை உண்ணும் அளவுக்கு மைக்ரோப்ஸ்கள் பரிணமிக்கப் பல காலம் ஆகும்.
நாம் அழிந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கான்கிரீட் கழிவுகளின் எச்சங்கள் இருக்கும். ஆனால், நிச்சயம் ஒரு கட்டத்தில் அவை முழுமையாக அழியும்.
நாம் நம் சில செயல்பாடுகளை மின்காந்த அலைகளாக மாற்றி இந்த வளிமண்டலத்தில் கடந்த நூறு ஆண்டுகளாக அனுப்பி வருகிறோம்.
அவை பல ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும். அந்த மின்காந்த அலைகளின் தாக்கம் தான் இறுதியாக அழியும்.