தமிழ்நாட்டில் 5.6 கோடி முத்ரா கடன்களும், கோவையில் மட்டும் 20 லட்சம் முத்ரா கடன்களும் வழங்கப்பட்டிருப்பதாக கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்தார். சுமார் 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 5.6 கோடி முத்ரா கடன்களும், சுமார் 35 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் கோவையில் 20 லட்சம் முத்ரா கடன் கணக்குகளும் எப்படி சாத்தியம்? என்ற கேள்விகள் எழுந்தன.
அதுகுறித்த பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
முதல் நாளில், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நுாற்றுக்கும் அதிகமான தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், சிறுகுறு தொழில் மற்றும் சிறு வணிகர்கள் அமைப்பினர் என பல தரப்பினருடன் கலந்துரையாடினார். கோவை கொடிசியாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தொழில் முனைவோர் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், முத்ரா யோஜனா கடன் கணக்குகள் மற்றும் வழங்கப்பட்டுள்ள கடன் தொகை குறித்து சில புள்ளி விவரங்களைத் தெரிவித்தார்.
முத்ரா யோஜனா கடன் திட்டத்தில் வழங்கப்படும் தொகையை இப்போது அதிகரித்துள்ளோம். நாடு முழுவதும் 49.5 கோடி வங்கிக்கடன் கணக்குகள் உள்ளன. தமிழகத்தில் மட்டுமே, 5.6 கோடி முத்ரா கடன் கணக்குகள் இருக்கின்றன. கோவையில் இதுவரை 20 லட்சம் பேருக்கு முத்ரா யோஜனா கடனாக ரூ.13,180 கோடி கிடைத்துள்ளது. என்று கூறிய அவர், விஸ்வகர்மா திட்டம் உள்ளிட்ட மற்ற கடன் திட்டங்களில் பயன் பெற்றவர்கள் குறித்த விவரங்களையும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில், செய்தியாளர்களுக்குத் தரப்பட்ட செய்தி அறிக்கையிலும், இதே புள்ளி விவரங்களே இடம் பெற்றிருந்தன.
முத்ரா கடன் பெற்றவர் எண்ணிக்கை பற்றி சந்தேகம்
தமிழகத்தின் மக்கள் தொகை, 8 கோடிக்கும் குறைவாக இருக்கும் நிலையில், அதில் 5.6 கோடிப் பேருக்கு முத்ரா யோஜனா கடன் வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறியது, அங்கிருந்த அனைவரிடமும் பெரும் வியப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. கோவை மாவட்டத்தில், கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 34.58 லட்சம் மக்கள் இருந்தனர். இப்போது மத்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இணையத்தின் தோராய மதிப்பீட்டீன் படி, 2024 ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை 41.43 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் கூறிய கணக்கின்படி பார்க்கும்போது, கோவை மாவட்டத்தில் பாதி பேருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி சமூக ஊடகங்களில் பலரும் பல விதமான கருத்துகளையும், கடுமையான விமர்சனங்களையும் பகிர்ந்து வந்தனர்.
மோதியை விமர்சித்த 2 அமைச்சர்கள் ராஜினாமா - மாலத்தீவு இந்தியா பக்கம் மீண்டும் திரும்புமா?
14 செப்டெம்பர் 2024
நிர்மலா சீதாராமன் உடனான கோவை ஓட்டல் உரிமையாளர் சந்திப்பின் போது நடந்தது என்ன?- வானதி சீனிவாசன் கொடுத்த விளக்கம்
13 செப்டெம்பர் 2024
பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி - கடந்த ஆண்டு 656 அடி உயர மெகா அலைகள் எங்கே எழுந்தன?
14 செப்டெம்பர் 2024
நிர்மலா சீதாராமனிடம் பிபிசி தமிழ் கேள்வி
இந்த நிகழ்ச்சி நடந்த மறுநாள் அதாவது, செப்டெம்பர் 12 ஆம் தேதியன்று, கோவையில் நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் , நீங்கள் கோவையில் நேற்று நடந்த சிறு, குறுந்தொழில் முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முத்ரா யோஜனா கடன் குறித்துக் கொடுத்த புள்ளி விபரங்கள் சரியானவைதானா? கோவையின் மக்கள் தொகையில் பாதி பேருக்கும் அதிகமாக முத்ரா கடன் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் புள்ளி விவரம் மிகவும் மிகையாகத் தெரிகிறதே? என்று பிபிசி தமிழ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், அது வங்கி அதிகாரிகள் கொடுத்த புள்ளி விவரம்தான். அதை நான் இரு முறை பார்த்து விட்டு உங்களுக்கு விரிவாகத் தெரிவிக்கிறேன்! என்று கூறிவிட்டு, தன்னுடைய டேப்லெட்டை எடுத்து, அதிலிருந்து சில விவரங்களை எடுத்து மீண்டும் வாசித்தார்.
நாடு முழுவதும் 49.5 கோடி முத்ரா கணக்குகளில், 29.76 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஏறத்தாழ 30 லட்சம் கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் 5.6 கோடி முத்ரா கடன் கணக்குகளில், 3 லட்சம் கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டு விட்டது. கோவையில் 20 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளுக்கு 13,180 கோடி ரூபாய் கடனாக விடுவிக்கப்பட்டுள்ளது. என்று மீண்டும் அதே புள்ளி விவரங்களை எடுத்துரைத்தார். இந்த புள்ளி விவரம் சரியா என்பது குறித்து விசாரித்து, உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
பிபிசி தமிழுக்கு மத்திய நிதியமைச்சகம் பதில்
நிர்மலா சீதாராமன் தலைநகர் டெல்லிக்குத் திரும்பிய பின், மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் பிபிசி தமிழை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்தனர். அந்த விளக்கத்தில், முத்ரா யோஜனா கடன் பெறும் ஒரு நபர், அதை முழுமையாக திருப்பிச் செலுத்தியபின் மீண்டும் கடன் பெறும்போது, அது புதிய வங்கிக் கணக்காக மாறுகிறது. அதனால்தான், ஒட்டுமொத்தமாக முத்ரா கடனை கணக்கிடும் போது, இந்த அளவுக்கு எண்ணிக்கை உயர்கிறது. இந்த புள்ளி விவரத்தில் தவறு ஏதுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அந்த விளக்கத்துடன், மத்திய அரசின் 9 விதமான கடன் திட்டங்களில், நாடு முழுவதும், தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் திட்டத்தில் 2024 ஆகஸ்ட் 30 வரையிலும் நாடு முழுவதும் 29 லட்சத்து 76 ஆயிரத்து 568 கோடி ரூபாயும், தமிழகத்துக்கு 3 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடி ரூபாயும், கோவை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 180 கோடி ரூபாயும் கடன் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.