இலங்கை போராட்டக் களத்துக்கு டீசல் இல்லாமல் மின்சாரம் கிடைப்பது எப்படி?

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (13:32 IST)
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத் திடலில் நடக்கும் அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்கு மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள்.


நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அவ்வப்போது கிடங்குக்கு வரும் மண்ணெண்ணெய்க்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்பு வரை 10 மணி நேரத்துக்கு அதிகமான மின்வெட்டு இருந்தது. இப்போதும் கொழும்பு நகரில் குறைந்தது 2 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது.

ஆனால் கொழும்பு காலி முகத்திடலில் மின்வெட்டு என்பது இல்லை. போராட்டக் களத்தில் சோலார் மின் பட்டைகள் மூலமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒரு ஃபேஸ்புக் குழு மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் இந்தப் பணியைச் செய்து வருகிறார்கள்.

"பகலில் சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. செல்போன்களுக்கு சார்ஜ் செய்யப்படுகிறது. மருத்துவச் சேவை வழங்குவது, உணவு வழங்குவது, நூலகம் போன்றவற்றுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது" என்கிறார் இந்தப் பணியில் ஈடுபட்டு வருபவர்களில் ஒருவரான ஃபாஸ்மி.

காலி முகத்திடல் என்பது அதிபரின் செயலகம், அமைச்சகங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான கட்டடங்கள் அமைந்திருக்கும் பகுதி. இதற்கு அருகிலேயே போராடுவதற்கான இடம் என ஒரு திடலை அரசு ஒதுக்கித் தந்திருக்கிறது. அந்தப் பகுதியில் இப்போது "கோட்டா கோ கம" என்ற பெயரில் ஒரு கிராமம் போன்ற அமைப்பை போராட்டக்காரர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இதில் 20-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வாசங்களை எழுதுவது போன்ற பணிகளைச் செய்வதற்கான பகுதிகளும் இங்கு உண்டு. இந்தப் பகுதியில் செயல்படும் அனைத்துக்கும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

"இரவு நேரத்தில் மின்சாரம் வழங்குவதற்காக மின் கலன்களில் மின்சாாரம் சேமித்து வைக்கப்படுகிறது. இதற்காக இரண்டு மின்கலன்கள் இருக்கின்றன. ஒன்று லித்தியம் ஃபெரஸ் பாஸ்பேட் மின்கலன். இதில் 5 கிலோ வாட் மின்சாரத்தை சேமிக்க முடியும். மற்றொன்று லித்தியம் அயன் மின்கலன். இது 3 கிலோ வாட் மின்சாரத்தை சேமிக்கும்" என்கிறார் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் உஷான் சகுந்த.

போராட்டத்தில் செல்போன்கள் முக்கியப் பங்கு வகிப்பதால், அதை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு இந்த மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரே நேரத்தில் சுமார் 50 செல்போன்களை சார்ஜ் போடும் வசதியை இவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒரு நாளில் ஆயிரத்துக்கும் அதிகமான கைபேசிகளுக்கு மின்சாரம் அளிப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.

"எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இங்கு செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக கைவிரல் ரேகை மூலம் செல்போனை திறப்பதை உறுதி செய்த பிறகே திருப்பி எடுத்துச் செல்ல முடியும். சாதாரண கைபேசிகளைக் கொண்டு வந்தால் அதில் பெயரை எழுதி விடுவோம்" என்கிறார் ஃபாஸ்மி.

காலி முகத்திடலில் அரசுக்கு எதிரான போராட்டம் 23 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. முதலில் குறைந்த அளவு மின்சாரத் தேவைக்காக ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கப்படுவதால் பெருமளவு ஜெனரேட்டர் தேவை குறைந்துவிட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.

"இந்த வசதி மூலம் ஒரு மணிக்கு 2 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கிறோம். அதிகபட்சமாக 6 கிலோ வாட் மின்சாரம் வரை தயாரிக்க முடியும். 8 கிலோவாட் வரை சேமித்து வைக்கும் வசதி இருக்கிறது. 3 ஜெனரேட்டர்களில் டீசல் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த 20 ஆயிரம் ரூபாய் வரையிலான மின்சாரத்தை சேமிக்கிறோம்" என்கிறார் சுஷான்.

இலங்கையில் அந்நியச் செலாவணி குறைந்து, இறக்குமதி பாதிக்கப்பட்டதால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடன் தவணைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அத்தியாவசியப் பொருள்களின் விலை இரண்டு மடங்கு அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசும், அதிபரும் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்களும் எதிர்க்கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நிதியுதவி மூலமாக நாட்டை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்