சௌதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு - மகிழ்ச்சியில் மக்கள்

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (16:27 IST)
சௌதி அரேபியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள டபூக் பிராந்தியத்தில் கடந்த மூன்று நாட்களாக பனி பொழிந்து வருவது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகள் முற்றிலும் பனி படர்ந்து காட்சியளிப்பதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த பிராந்தியத்தில் பூஜ்யத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பனிப்பொழிவு குறித்தும் அதைத்தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்தும் டபூக் பிராந்திய மக்களுக்கு அங்குள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சௌதி அரேபியாவில் பனிப்பொழிவா?

கடுமையான வெயிலுக்கு பெயர்பெற்ற சௌதி அரேபியாவில் எப்படி பனி பொழிகிறது என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது போல் சௌதி அரேபியா முழுவதும் இந்த பனிப்பொழிவு ஏற்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஜோர்டானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள டபூக் பிராந்தின் ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகளில் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு பனிப்பொழிவு நிகழ்வது இயல்பான ஒன்றே என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பிராந்தியத்தில் பனிப்பொழிவு ஆரம்பிப்பது குறித்த செய்தி கிடைத்ததும் சௌதி அரேபியாவின் மற்ற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சுற்றுலாவுக்கு வருகின்றனர். "பனிப்பொழிவுக்கு பின்னர் உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று நம்புகிறோம்" என்று அந்நாட்டு சுற்றுலா துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அஷ்ரக் அல்-அவஷட் செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுலாவுக்கு பெயர்போன இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் உள்ளூர் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,600 மீட்டர்கள் உயரம் கொண்ட ஜபல் அல்-லாஸ் மலையில் அதிக அளவில் பாதாம் கிடைப்பதால் அதை இங்குள்ள மக்கள் 'பாதாம் மலை' என்றே அழைக்கிறார்கள்.

சௌதி அரேபியாவில் இயற்கை அழகு மிகுந்துள்ள பிராந்தியங்களில் ஒன்றாக டபூக் பிராந்தியம் விளங்குகிறது. ஜோர்டானை ஒட்டி அமைந்துள்ள இந்த பிராந்தியத்தில்தான் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் நறுமணத் தாவரங்கள் அதிக அளவில் வளர்கின்றன.

டபூக் பிராந்தியத்தில் ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்று பனிப்பொழிவு ஏற்படுவது இயல்பானது என்றாலும், சமூக ஊடகங்களில் இதுதொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

"உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? இது ரஷ்யா இல்லை; இத்தாலி, நார்வேவும் இல்லை" என்று தெரிவித்து அப்துல் மஜீத் என்பவர் ட்விட்டரில் காணொளி ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள பல்வேறு நாடுகளில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, லெபனான், இரான், பாலத்தீனம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு மக்களை வாட்டி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்