சேலத்தில் புத்தகத் திருவிழா சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், ஆறாவது நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், புத்தகத் திருவிழாவுக்காக எலக்ட்ரீசியன் வேலை செய்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த கலீம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், புத்தகத் திருவிழா நடக்கும் அரங்கின் பின்புறம் அவர் சென்றதாகவும், அப்போது கீழே கிடந்த வயரை தெரியாமல் மிதித்ததால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் கூறியபோது, மழையின் காரணமாக மின்சார பழுது பார்க்கச் சென்றபோது தான் இந்த சம்பவம் ஏற்பட்டதாகவும், மின்சாரம் செல்லக்கூடிய பகுதிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.