அமெரிக்கா - இரான் இடையே போர் வெடித்தால் இந்தியா எப்படி பாதிக்கப்படும்?
செவ்வாய், 7 ஜனவரி 2020 (15:46 IST)
இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், இரானின் மிக சக்திவாய்ந்த ராணுவத் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ, வெள்ளிக்கிழமையன்று இறந்தார். இதனையடுத்து, இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்கா எடுத்த இந்த நடவடிக்கையின் பொருள் என்ன? இந்த விவகாரம் எந்த திசையில் செல்கிறது? மத்திய கிழக்கில் யுத்தம் நெருங்கி வருகிறதா? பதற்றம் அதிகரித்து, எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு இருக்கும்?
இந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் தெரிந்துக் கொள்ளும் விதமாக, மத்திய கிழக்கு விவகாரங்களின் நிபுணர் ஆஃப்தாப் கமல் பாஷாவுடன் பேசினார் பிபிசி நிருபர் ஆதர்ஷ் ரத்தோர். அவருடைய பார்வையில் நிலைமை என்ன என்பது தொகுப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை என்ன?
கடந்த மூன்று மாதங்களில் வளைகுடா நாடுகளில் நிறைய நடந்துவிட்டன. அமெரிக்க எண்ணெய் டேங்கர்கள் மற்றும் ட்ரோன்கள் தாக்கப்பட்டன. இவற்றையெல்லாம் மீறி, இரானுக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கும் அமெரிக்க கொள்கை எதுவும் பெரிதும் பலனளிக்கவில்லை.
இராக்கில் இரானின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்கா இரண்டாம்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதைச் சுற்றி நிறைய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அனைத்து முயற்சிகளாலும், சிரியாவில் இருந்து பஷீர் அல் அசாத்தை அதிகாரத்திலிருந்து நீக்க முடியவில்லை.
அமெரிக்காவிற்கு எதிரான இரானின் செல்வாக்கு, லெபனான் மற்றும் இராக்கில் சீராக அதிகரித்து வந்தது. அங்குள்ள அரசியல்வாதிகளையும் அனைத்து சமூகங்களையும் இரான் தனது எல்லைக்குள் கொண்டு சென்றது. அமெரிக்காவிற்கு இதைப் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ளன.
என்ன நிரூபிக்க விரும்புகிறது அமெரிக்கா?
இரான் மீதான பொருளாதாரத் தடைகள் மட்டுமல்லாமல், பிற பொருளாதாரத் தடைகளும் படிப்படியாக அகற்றப்படும் என்ற செளதி அரேபியாவின் விருப்பமே தனது நோக்கமும் என்று நிரூபிக்க விரும்புகிறது அமெரிக்கா.
இஸ்ரேலும், அபுதாபியும் இதை விரும்புகின்றன, ஏனெனில் பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தம் காரணமாக, அரபு நாடுகளின் விஷயத்தில் தலையிடவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ இரானின் தலைமை தயாராக இல்லை. அதே நேரத்தில், ரஷ்யா மற்றும் துருக்கியின் ஆதரவுடன், இரான் தனது வலிமையை அதிகரிப்பதைக் காண முடிகிறது.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தாலும், அமெரிக்கா நேரடியாக இரானைத் தாக்குவதைத் தவிர்த்து வருகிறது. வளைகுடாவில் இருக்கும் இராக் முதல் ஓமன் வரையிலான அரபு நாடுகளில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இரானிடம் உள்ள ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், அது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அமெரிக்க துறைமுகங்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கும் துறைமுகங்களுக்கும் சேதங்கள் ஏற்படும்.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நேரடி யுத்தம் ஏற்பட்டால், தங்களுக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று செளதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் பயப்படுகின்றன. அங்கு குடியேறிய தொழிலாளர்களும் மற்றவர்களும் வெளியேறினால், அவர்களின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். இதனால்தான் அமெரிக்காவும் போரை தவிர்க்கிறது.
ஆனால், அமெரிக்காவின் பேச்சுவார்த்தைகளும், முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தையை நடத்த ஓமன் முயன்றது, ஆனால் முதலில் தடையை நீக்கவேண்டும் அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை நடக்கும் என்று என்று இரான் கூறுகிறது.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு இருக்கும்?
அமெரிக்கா மற்றும் இரானிடையேயான பதற்றத்தினால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இந்தியாவின் பொருளாதார நிலைமையிலும், அந்நிய செலாவணியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்நிய செலாவணி பற்றாக்குறை அதிகரித்தால், மந்தநிலை அதிகரிக்கும் என்பதோடு, உணவு, பானம் முதல் போக்குவரத்து, ரயில்வே, தனியார் போக்குவரத்து போன்றவையும் மோசமான பாதிப்பை சந்திக்கும். அதுமட்டுல்ல, வேலையின்மையும் அதிகரிக்கும்.
இவை அனைத்தும் நடந்தால், இந்தியாவின் பொருளாதார நிலை மோசமடைந்து 1973ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் மக்கள் வீதிகளில் இறங்கியதைப் போன்ற நிலைமை மீண்டும் வரும். அந்த கலகட்டத்தில் இந்தியாவின் பட்ஜெட் சீரற்றுப்போனது. கச்சா எண்ணெய் விலை ஒன்றரை டாலரிலிருந்து எட்டு டாலராக உயர்ந்தது, இது இந்தியாவின் முழு திட்டத்தையும் சிதைத்துவிட்டது.
இந்திரா காந்தியிடம் அந்நிய செலாவணி இருப்பு வெகுவாகக் குறைந்து போனது. இதே நிலைமை சந்திரசேகர் மற்றும் வி.பி.சிங் அரசாங்கத்தில் இரண்டாவது முறையாக நடந்தது.
இரான் மீது தாக்குதல் நடைபெற்று, மூன்றாவது முறையாக எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தால், இந்தியாவிற்கும் இந்தியாவின் கனவான ஐந்து டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரத்திற்கும் சிக்கல் ஏற்படும்.
இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் ஓமனைப் போல, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தன்னால் முயன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்தியா இதுபோன்ற நாடுகளுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமெரிக்காவுடன் பேச வேண்டும். அதோடு, இரானுடனும் சமாதானம் பேச முயற்சி செய்யவேண்டும்.
வளைகுடாவில் 80 லட்சம் இந்தியர்கள் வேலை செய்வது மட்டுமல்லாது, தனது உள்நாட்டுத் தேவையில் 80 சதவீத எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது, அதிக அளவு எரிவாயுவை இந்தியா வாங்குகிறது. வளைகுடா நாடுகளுடன் 100 பில்லியனுக்கும் அதிகமான வர்த்தகம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, முதலீடுகளும் முக்கியமானவை. எனவே, இராக் அல்லது லெபனான் தொடர்பாக போர் ஏற்பட்டாலும், அது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
விளைவு என்னவாக இருக்கும்?
இரானுடன் விரோதப் போக்கை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால் செளதி அரேபியா, இஸ்ரேல் அல்லது ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் அழுத்தத்தால், அமெரிக்கா ட்ரோன் மற்றும் பிற வழிகளில் தாக்குதல்களை முன்னெடுக்கிறது. இவற்றில் பொது மக்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படி பல்வேறு காரணங்களால் பதற்றம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த தீ எப்போது வேண்டுமானாலும் கோர வடிவை எடுக்கும்.
இரானுடனான போரை விரும்பவில்லை என்றாலும், இந்த நெருப்பின் தாக்கமானது, அமெரிக்காவின் மீது மோசமான விளைவை ஏற்படுத்தும். முடிவுகளும் மோசமாகவே இருக்கும்.
இரானின் அதிகாரத்தை மாற்றியமைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக இரானின் தலைமை முடிவு செய்தால், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனது சக்தியை காட்ட முயலும். 40 ஆண்டுகளுக்கு முன்பு டெஹ்ரானில் நடந்ததைப் போல, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்படலாம்.
தனது முகவர்கள் அல்லது நட்பு நாடுகளைப் பயன்படுத்தி அமெரிக்கா மீது அதிக அழுத்தத்தை கொடுக்கும் சக்தி இரானுக்கு உண்டு. இராக்கில் உள்ள தூதரகம் மட்டுமல்ல, ஐ.எஸ்.எல்-ஐ தோற்கடிக்க வடக்கில் அமெரிக்கா கட்டிய தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த முடியும். சிரியாவில் உள்ள அவரது நண்பர்கள் எண்ணெய் இருப்புகளையும் தாக்கலாம் என்பதால் அனைவரிடமும் பதற்றம் அதிகரித்து வருகிறது,
அமெரிக்கா போரை விரும்புகிறதா?
அமெரிக்கா போரை விரும்பவும் இல்லை, இரானும் தன்னை போருக்குள் தள்ளிக்கொள்ள விரும்பவில்லை என்று நான் நம்புகிறேன். இருவரும் 'நீ செய்வதையே நானும் செய்வேன்' என்ற கொள்கையை பின்பற்றுகிறார்கள்.
நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், எங்களை அச்சுறுத்தி, எங்கள் நலனுக்கு தீங்கு விளைவிக்க முடியாது என்று இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்தி தருகிறார்கள். இராக் மற்றும் லெபனானில் போலியான போர் நடந்து வருகிறது.
இரான் மற்றும் செளதி அரேபியாவின் பனிப்போரினால், யேமனுக்கு ஏற்பட்ட பேரழிவை அனைவரும் கண்டோம். சிரியாவிலும், லிபியாவிலும் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையை தெளிவாக பார்க்க முடிகிறது.
இந்த மூன்று நாடுகளில் பிராந்திய யுத்தம் நடந்து வருகிறது. இஸ்ரேல், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் துருக்கி ஆகியவை இரான் மற்றும் சிரியாவில் கடுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவும் படிப்படியாக அவர்களுடன் இணைவதையும் பார்க்க முடிகிறது.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையில் போர் ஏற்படாது என்றும், இந்த விவகாரம் ஒரு குறிப்பிட்ட தீர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். ஆனால் சிறிது பதற்றம் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
அமெரிக்கா வெடிகுண்டு வீசும், அதற்கு இரான் பதிலளிக்கும் என்பது போன்ற சில சூழ்நிலைகளும் ஏற்படலாம். அது, உறுதியற்ற தன்மை மற்றும் பாதுகாப்பின்மை நிலைமையை அதிகரிக்கலாம்.