காஷ்மீர், முஸ்லிம்கள் பற்றிய விமர்சனத்தால் மலேசியாவுக்கு இந்தியா பதிலடி: இறக்குமதிக்கு கட்டுப்பாடு
வெள்ளி, 10 ஜனவரி 2020 (15:38 IST)
இந்திய அரசு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை சேர்த்துக்கொள்ளாதது ஆகியவற்றை மலேசிய பிரதமர் மகாதீர் மொகமத் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாலமோலின் (திரவ நிலையில் இருக்கும் பாமாயில்) ஆகியவற்றை கட்டுப்பாடுகளின்றி இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் இருந்து கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலுக்கு மாற்றியுள்ளது.
இது மலேசியாவின் விமர்சனங்களுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று இந்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
யாருக்கு லாபம்?
புதிய நடவடிக்கையால் இனி சுத்திகரிக்கப்படாத பாமாயிலை மட்டுமே இந்தியா மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். இந்த நடவடிக்கை சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பால்மோலின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மலேசியாவுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும் என்று தொழில் துறையினர் கூறுவதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
எனினும் சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்தோனீசியாவுக்கு இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தோனீசியா இந்தியாவின் பாமாயில் இறக்குமதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. ஆனால், மலேசியாவின் குறைவான வரிகளால் 2019இல் இந்தோனீசியாவைவிட அதிக அளவிலான பாமயிலை இந்தியா மலேசியாவிடம் இறக்குமதி செய்தது.
மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய வேண்டாம் என்று தொழில் துறையினரிடம் இந்திய அரசு இந்த வாரத் தொடக்கத்தில் கேட்டுக்கொண்டதாக அந்த செய்தி கூறுகிறது.
இந்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.
என்ன சொல்லியிருந்தார் மகாதீர் மொகமத்?
இந்தியாவின் நடவடிக்கை குறித்து பதிலளிக்க மலேசிய தொழில் துறை அமைச்சர் தெரேசா கோக் மறுத்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியா கவலை கொண்டுள்ளது என்றும் டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டின் முடிவில் மலேசிய பிரதமர் கூறியிருந்தார்.
முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்திலும் இதே கருத்தை அவர் கூறியிருந்தார்.
"இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியக் குடிமக்களாக ஆவதில் இருந்து தவிர்க்கப்பட்டால் அது நியாயமல்ல," என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை அவர் விமர்சித்திருந்தார்.