கோலான் குன்று தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலி - ஹெஸ்புலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பதிலடி

Prasanth Karthick
ஞாயிறு, 28 ஜூலை 2024 (13:51 IST)

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் குன்றுகள் எனப்படும் பகுதியில் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் 12 குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் கொல்லப்பட்டதாகவும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லெபனான் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் அதிகாரமிக்க ஹெஸ்புல்லா அமைப்பினர் ஏவிய ராக்கெட் ட்ரூஸ் நகரமான மஜ்தல் ஷாம்ஸ் பகுதியில் விழுந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளது. இதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதியாக மறுத்துள்ளது.
 

இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹெஸ்புல்லா அமைப்பு அதிக விலை கொடுக்க நேரிடும்” எனத் தெரிவித்தார்.
 

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக லெபனானில் ஹெஸ்புல்லாவை குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது.
 

“ஹெஸ்புல்லாவின் எல்லைக்குள் ஏழு இலக்குகளைக் குறிவைத்து” ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 

“ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டமைப்புகள்” உள்பட “தீவிரவாத இலக்குகளை” தாக்கியதாக இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது.
 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் - காஸா இடையே சண்டை தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா படைகள் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இச்சம்பவம் இரு தரப்புக்கும் இடையே விரிவான போரைத் தூண்டுவதற்கான சாத்தியம் கொண்டதாக உள்ளது.
 

சனிக்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதல், அக்டோபர் 7ஆம் தேதி முதல் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலின் வட எல்லையில் அதிகமான உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கும் மோசமான தாக்குதலாக உள்ளது.
 

“நம்ப முடியாத அளவுக்கு ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் வகையிலான பரந்த மோதலுக்கான அபாயம் உள்ள நிலையில், அனைத்துத் தரப்பில் இருந்தும் அதிகபட்ச கட்டுப்பாடு முக்கியமானது” என ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இஸ்ரேல் ராக்கெட்டா?


 

ஹெஸ்புல்லா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆஃபிஃப், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத நிலையில், இத்தாக்குதல் இஸ்ரேலின் இன்டர்செப்டர் ராக்கெட்டால் (வெகுதொலைவுக்கு ஏவப்படும் பாலிஸ்டிக் ராக்கெட்டுகளை இடைமறித்துத் தடுக்கும் வகையிலான ராக்கெட்) நிகழ்த்தப்பட்டது என அந்த அமைப்பு ஐநாவிடம் தெரிவித்ததாக வரும் செய்திகளை பிபிசி சரிபார்க்க முயன்று வருகிறது.
 

இத்தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் 10 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், சிலர் மிகவும் சிறுவயதினர் என இஸ்ரேல் ஊடகங்கள் கூறுகின்றன.
 

கால்பந்து மைதானம் ஒன்றில் மக்கள் குழுமியிருப்பதையும், ஆம்புலன்ஸ்களில் ஸ்ட்ரெட்ச்சர்கள் மூலம் காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்படுவதையும் சரிபார்க்கப்பட்ட காணொளிகள் மூலம் பார்க்க முடிகிறது.
 

கோலான் குன்றுகளில் உள்ள நான்கு கிராமங்களுள் ஒன்றான மஜ்தல் ஷாம்ஸ் கிராமத்தில், அரபுமொழி பேசும் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்த சுமார் 25,000 பேர் வாழ்கின்றனர்.
 

இத்தாக்குதலின் பாதிப்புகள் குறித்த செய்திகள் வருவதற்கு முன்னர், ஹெஸ்புல்லா மற்ற நான்கு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது.
 

அதில், இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைக்கு இடையே அமைந்துள்ள ஹெர்மோன் மலைத்தொடரின் சரிவில் அமைந்துள்ள ராணுவ சுற்றுப் பகுதிக்கு அருகே நடைபெற்ற தாக்குதலும் ஒன்று. அதன் அடித்தளம், கால்பந்து மைதானத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 

'முழு அளவிலான போர்'


 

தாக்குதல் நிகழ்ந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “இத்தாக்குதலுக்குத் தாங்கள் பொறுப்பல்ல என ஹெஸ்புல்லா பொய் கூறுவதாக” தெரிவித்தார்.
 

“ஹெஸ்புல்லா அமைப்பினர் பிரத்யேகமாக வைத்திருக்கும்” ஃபலாக்-1 (Falaq-1) எனும் இரானிய தயாரிப்பு ராக்கெட்டால் இத்தாக்குதல் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.
 

“எங்களின் உளவுத்துறை தகவல் தெளிவானது. அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு ஹெஸ்புல்லா அமைப்புதான் பொறுப்பு,” எனத் தெரிவித்த அவர், அதற்காக பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.
 

கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இஸ்ரேல், ஹெஸ்புல்லா மாறி மாறித் தொடுத்த தாக்குதலால் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், தெற்கு லெபனானில் எல்லைப் போர் ஏற்படும் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் தவிர்த்து வருகின்றன.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னதாகவே நாடு திரும்ப உள்ளார்.
 

இஸ்ரேலின் ட்ரூஸ் இனத் தலைவரான ஷேக் மொவாஃபக் டரிஃப் வெளியிட்ட காட்டமான அறிக்கையில், “இந்தப் பயங்கரமான படுகொலை, அனைத்து சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டதாக” தெரிவித்துள்ளார்.
 

“தங்கள் நாட்டு குடிமக்கள் மற்றும் குடியிருப்பவர்களுக்குத் தொடர்ச்சியாகத் தீங்கு ஏற்படுவதை முறையான ஓர் அரசு அனுமதிக்காது. கடந்த ஒன்பது மாதங்களாக வட பகுதியில் வாழும் சமூகத்தினர் எதிர்கொள்ளும் யதார்த்தமாக இத்தாக்குதல் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.
 

வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், “ஒரு முழு அளவிலான போரை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம்,” என சேனல் 12 ஊடகத்திடம் தெரிவித்தார்.
 

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இத்தாக்குதல் “பயங்கரமான மற்றும் அதிர்ச்சிகரமான பேரழிவு சம்பவம்” எனத் தெரிவித்தார். மேலும், “நாட்டு குடிமக்கள் மற்றும் இறையான்மையை இஸ்ரேல் அரசு காக்கும்” என உறுதி தெரிவித்தார்.
 

நாடு திரும்பும் பெஞ்சமின்


 

லெபனான் அரசு வழக்கத்திற்கு மாறாக அரிதாக அறிக்கை ஒன்றை இதுகுறித்து வெளியிட்டுள்ளது. அதில், “பொதுமக்களுக்கு எதிரான எந்தவித வன்முறை மற்றும் மோதல்களையும் கண்டிக்கிறோம். இத்தகைய மோதல்களை நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்."
 

“பொதுமக்களை குறிவைப்பது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும், மேலும் மானுட தத்துவத்திற்கே எதிரானது,” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா தூதுவர் டோர் வென்னஸ்லேண்ட், அனைத்து தரப்பும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
 

“மத்தியக் கிழக்குப் பகுதி ஆபத்தின் விளிம்பில் உள்ளது; மற்றுமொரு வெளிப்படையான மோதலை உலகமும் இந்தப் பிராந்தியமும் தாங்காது,” என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

ட்ரூஸ் சமூகத்தினர் பெரும்பாலானோர் வடக்கு இஸ்ரேல், லெபனான், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். இஸ்ரேலில் அவர்களுக்கு முழு குடியுரிமை உள்ளது. இஸ்ரேலின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ட்ரூஸ் இனத்தினர் 1.5% உள்ளனர்.
 

சிரியாவிடம் இருந்து 1981இல் கோலான் குன்றுகள் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டதில் இருந்து அவர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கப்படுகிறது, ஆனால் அவர்கள் எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
 

இஸ்ரேலில் உள்ள ட்ரூஸ் இனத்தினர் அங்கு படிக்கவும் வேலை செய்யவும் முடியும். ஆனால் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்த ஆண்கள் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும். இஸ்ரேல் ராணுவத்தில் யூதர்கள் அல்லாத மிகப்பெரிய குழுவாக ட்ரூஸ் இனத்தினர் உள்ளனர்.
 

கோலான் குன்றுகளை இஸ்ரேல் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டதை பெரும்பான்மை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்