இலங்கையில் உணவு தட்டுப்பாடு: "அரை வயிறு கஞ்சிதான் சாப்பாடு" - மலையக தமிழர்கள்

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (23:43 IST)
''அரை கொத்து அரிசி பஞ்ச காலத்திலும் எங்க ஐஞ்சு பேரை எங்க அப்பா ஆதரிச்சாரு. எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாரு. ஆனா இன்னைக்கு, அரை வயிறும், கால் வயிறும் கஞ்சை குடிச்சுக்கிட்டு தான் இருக்க வேண்டி இருக்கு" என மலையக பெண்ணான மாரியம்மா தெரிவிக்கின்றார்.
 
இலங்கையில் ஆரம்பித்துள்ள உணவு நெருக்கடியின் தீவிரம் காரணமாக பட்டினியால் மக்கள் தவிக்கிறார்கள். இந்த பாதிப்பை அதிகம் எதிர்கொள்வது மலையக தமிழர்களாக உள்ளனர்.
 
இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரான காலத்தில், பஞ்சம் நிலவியது என்றால், அது முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் இருந்த 1970 - 1977ம் ஆண்டு காலப் பகுதிகள் என வரலாற்றில் இடம்பிடித்திருந்தது.
 
வெளிநாட்டு பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு, உள்நாட்டு விவசாய உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் நடவடிக்கைகள் காரணமாக, குறித்த காலப் பகுதியில் நாட்டில் பஞ்சம் நிலவியதாக வரலாறு கூறுகின்றது.
 
இந்த காலப் பகுதியில் கூப்பம் முறையில் (பங்கீட்டு அட்டை முறை), பொருட்களை கொள்வனவு செய்ய மக்களுக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியிருந்த நிலையில், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசை வரிசையாக நின்றதாக கூறப்படுகின்றது.
 
உணவுப் பஞ்சம்: வீட்டிலேயே விவசாயம் செய்யச் சொல்லும் இலங்கை அமைச்சர்
இலங்கையில் 4 ஆயிரம் பேருக்கு மோசடியாக கருத்தடை செய்ததாக கைதான டாக்டர் ஷாபிக்கு மீண்டும் பணி வாய்ப்பு
அரசாங்கத்தினால் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கூப்பன்களை கொண்டு, பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும், மூடிய பொருளாதார கொள்கை காரணமாக பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு அந்த காலப் பகுதியில் நிலவியுள்ளது.
 
அரிசி, கோதுமை மா, தானிய வகைகள், ஆடைகள் என அனைத்து விதமான பொருட்களுக்கும் 1970ம் ஆண்டு காலப் பகுதியில் பாரிய தட்டுப்பாடு நிலவியதுடன், அந்த காலப் பகுதி பஞ்சம் நிலவிய காலப் பகுதியாகவே வரலாற்றில் பதிவாகியது.
 
1970ம் ஆண்டு காலப் பகுதி 2021ல் மீண்டும் ஆரம்பம்
 
இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பெரும்பான்மை சமூகத்தின் வரவேற்பை பெரிதும் வென்ற ராஜபக்ஷ குடும்பம், மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தன.
 
இவ்வாறு வலுப் பெற்ற கோரிக்கைக்கு அமைவாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டு, தேர்தலில் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.
 
இவ்வாறு ஆட்சி பீடத்தை கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், விவசாய ரீதியில் முக்கிய தீர்மானமொன்றை எடுத்தது.
 
விவசாயத்தில் தன்னிறைவு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், விவசாய கட்டுப்பாடுகளை அரசாங்கம் அறிவித்திருந்தது.
 
குறிப்பாக ஆட்சி பீடம் ஏறிய காலப் பகுதியில் இந்த அரசாங்கம், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மஞ்சள், தானிய வகைகள் ஆகியவற்றுக்கு தடை விதித்து, தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
 
இவ்வாறான நிலையில், மஞ்சள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் விலைகள், அந்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்திருந்தன.
 
இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, இயற்கை விவசாயத்தை நோக்கி நகரும் திட்டத்தை அரசாங்கம் அதிரடியாக அறிவித்திருந்தது.
 
இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செய்கை உரத்திற்கு தடை விதித்து, இயற்கை விவசாயத்தை முன்னெடுக்குமாறு விவசாயிகளுக்கு அரசாங்கம் ஆணை பிறப்பித்தது.
 
திடீரென இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் அறிவிப்பு வெளியான நிலையில், விவசாயிகள் பாரிய பிரச்னைகளை எதிர்நோக்க ஆரம்பித்தனர்.
 
விவசாய உற்பத்திகளை அறுவடை செய்வதற்கான காலம் எட்டிய போதிலும், உரிய வகையில் உரம் கிடைக்காமையினால், விவசாய உற்பத்திகள் உரிய வகையில் அறுவடை செய்யப்படவில்லை.
 
இதையடுத்து, இலங்கையிலுள்ள அனைத்து விவசாயிகளும் வீதிகளில் இறங்கி போட்டங்களை ஆரம்பித்திருந்தனர்.
 
இந்தியாவில் இருந்து இறக்குமதி
பல மாத கால போராட்டம் தொடர்ந்த போதிலும், அரசாங்கம் தனது கொள்கையிலிருந்து பின்வாங்காத நிலையில், இந்தியாவிலிருந்து திரவ உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்கியது.
 
எனினும், அந்த உரத்திலும் திருப்தி கொள்ளாத விவசாயிகள், தொடர்ந்தும் போராட்டத்தை தொடர்ந்திருந்தனர்.
,
சமையல் எரிவாயு வாங்க காத்திருக்கும் நுகர்வோர்
 
இவ்வாறான பின்னணியில், அண்மையில் செய்கை உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய அரசாங்கம், செய்கை உரத்திற்கு மானியம் வழங்கப்படாது எனவும் அறிவித்திருந்தது.
 
பல மாதங்களுக்கு பின்னர், நாட்டிற்கு உரம் இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்த நிலையிலும், டொலர் பற்றாக்குறை காரணமாக உரிய வகையில் இறக்குமதிகளை முன்னெடுக்க முடியாது இறக்குமதியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
 
இந்த நிலையில், தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் சுமார் 1500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட செய்கை உரம் , தற்போது 8000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
 
இலங்கை தட்டுப்பாடு
விவசாயத்தில் ஏற்பட்டுள்ள இவ்வாறான பிரச்னைகளினால், மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், சந்தைக்கு வரும் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
 
மரக்கறி வகைகள் சிலவற்றின் விலைகள் (ஒரு கிலோகிராம்)
பீன்ஸ் (பேஞ்சி) :- 460.00 - 480.00 ரூபா
 
கேரட் :- 420.00 - 460.00 ரூபா
 
லீக்ஸ் :- 260.00 - 280.00 ரூபா
 
கோவா (முட்டைக்கோஸ்) :- 270.00 - 280.00 ரூபா
 
இதேவேளை, ஒரு கிலோகிராம் அரசியின் விலை 105 ரூபா முதல் 215 ரூபா வரை காணப்படுகின்றன.
 
காய்கறிகள்
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை அண்மையில் 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட பின்னணியில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 140 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதேவேளை, நாடு முழுவதும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசை வரிசையாக நிற்பதை காண முடிகின்றது.
 
சமையல் எரிவாயு, மண்ணெண்ணை, பால்மா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசைகளில் நிற்பதை காண முடிகின்றது.
 
அன்று சமையல் எரிவாயு அடுப்புக்களில் சமையல் செய்த மக்கள், இன்று மண்ணெண்யை மற்றும் விறகு அடுப்புக்களில் சமையல் செய்யும் காலம் உருவாகியுள்ளது.
 
பஞ்சத்தில் மக்கள்
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், மக்களின் வாழ்க்கை நிலைமை குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
 
கேகாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை சந்தித்து அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்துக்கொண்டது.
 
தெஹிஓவிட்ட பகுதியைச் சேர்ந்த மாரியம்மா, தனது வறுமையை இவ்வாறு பகிர்ந்துக்கொண்டார்.
 
 
 
''அரை கொத்து அரிசி பஞ்ச காலத்திலும் நாங்க ஐஞ்சு பேர். எங்க ஐஞ்சு பேரையும் எங்க அப்பா ஆதரிச்சாரு. அப்போ எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாரு. அந்த நேரம் உரம் இருந்துச்சு. இந்த நேரத்துல ஒன்னுமே செய்துக்கொள்ள வசதி இல்ல. உரம் இல்ல. இன்னைக்கு, அரை வயிறும், கால் வயிறும் கஞ்சை குடிச்சுக்கிட்டு தான் இருக்க வேண்டி இருக்கு. கடைக்கு சாமா வாங்க போனா கட்டுக்கணக்குல காசு வேண்ணு. எங்க போய்ட்டு களவேடுக்குறது? யாரு கொடுப்பா?. ஏன் இந்த மாதிரி பொருட்கள்ட விலைய ஏத்துறீங்க. பஞ்ச காலத்துல கூட நல்லா இருந்தோம். அப்ப கூட வயிறு நிறைய சாப்பிட்டோம். நல்ல உடை உடுத்துனோம். நாகரிகமா இருந்தோம். இப்போது கேவலமா இருக்கு. யார பார்த்தாலும் சோர்ந்து போய் தான் இருக்காங்க. இவ்வளவு காலமாக இப்படி ஒரு பஞ்சம் தெரியல. இப்ப தெரியுது பஞ்சம்" என மாரியம்மா தெரிவித்தார்.
 
தன்னால் இனி எவ்வாறு வாழ முடியும் என்று தெரியவில்லை என கேகாலை பகுதியைச் சேர்ந்த மோரினா பிபிசி தமிழுக்கு குறிப்பிடுகின்றார்.
 
 
 
''என்ன செய்ய போறோமோ தெரியாது. தோட்டத்துல வேல இருந்தும், வேல இல்லை. எங்களுக்கு 1000 ரூபா சம்பளம் கொடுத்தாலும், அந்த 1000 ரூபாவிற்கு இரண்டு பொருள வாங்க முடியல. ஒரு கொத்து அரிசில எத்தனை நாளுக்கு நாங்க சாப்பிடுவோம். எப்படி தான் பிழைக்க போறமோ, எப்படி தான் வாழ போறோமோ தெரியாது. எங்கட நிலைமைய பார்க்க யாருமே வர மாட்டீங்களா? ஏன் நாளுக்கு நாள் விலைவாசிய இப்படி கூட்டுறாங்க. எப்படி நாங்கள வாழ போறோம்?. எங்க பிள்ளைகள நல்ல நிலைமைக்கு கொண்டு வரனுனு எங்களுக்கும் ஆசை இருக்கு தானே?. உப்பு வாங்கினா, கொச்சிக்காய் (மிளகாய்) வாங்க முடியல, கொச்சிக்காய் வாங்கினா, அரிசி வாங்க முடியல. எல்லாம் விலை. தேங்காய் ஒன்று 100 ரூபானு சொல்லுறாங்க. மா 300 ரூபானு சொல்லுறாங்க. நகர பகுதியில குறைவாக இருக்கு. எங்க தோட்ட பகுதியில விலை அதிகமாக இருக்கு. வாழ முடியல" என கண்ணிருடன், மோரினா தனது துயரங்களை பகிர்ந்துக்கொண்டார்.
 
நகர பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட போதிலும், பினதங்கி பகுதிகளில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகமாகவே விற்பனை செய்யப்படுகின்றன.
 
 
இலங்கையில் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்தப்பட்டமையினால், நாடு முழுவதும் உள்ள கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரையான அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.
 
பின்தங்கிய பகுதிகளிலுள்ள வியாபாரிகள், நகர் பகுதிக்கு வருகைத் தந்து பொருட்களை கொள்வனவு செய்து, அந்த பகுதிக்கு கொண்டு செல்லும் போது, பொருட்களுக்கான விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
 
இலங்கையில் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்தப்பட்டமையினால், நாடு முழுவதும் உள்ள கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரையான அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.
 
எனினும், தமது நாளாந்த சம்பளத்திற்கான இன்றும் போராடி வரும் மலையக மக்கள், இன்று இந்த பிரச்சினை காரணமாக நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளதை கள ஆய்வின் ஊடாக எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
 
 
அரசுக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி போராடும் பொதுமக்கள்
 
நாட்டில் பொருட்களுக்கான விலையேற்றத்தை கண்டித்தும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் தீபந்தம் ஏந்திய போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
கடந்த சில தினங்களாகவே நாளாந்தம் இரவு வேளைகளில் தீ பந்தங்களை ஏந்தி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர்
 
நாட்டில் டொலர் பிரச்னை உக்கிரமடைந்துள்ள நிலையில், அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
 
இந்த பிரச்னை காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்து, தொழில் வாய்ப்புக்கள் இல்லாது போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்;.
 
அத்துடன், மத்திய தர வர்த்தகத்தினர் பாரிய பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளதுடன், விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
 
இவ்வாறான பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு அவசியம் என அவர் கூறுகின்றார்.
 
கோவிட் வைரஸ் தாக்கம் இருந்தாலும், 2021ம் ஆண்டு பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை காண்பித்துள்ளன.
 
தனக்கு கிடைக்கும் தகவல்களுக்கு அமைய, எதிவரும் சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் உணவு பஞ்சம் ஏற்படும் என ரணில் விக்ரமசிங்க எதிர்வு கூறுகின்றார்.
 
''இந்த பிரச்னைகளை தவிர்த்துக்கொள்ள அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்று திட்டத்தை அறிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், தற்போது கோபத்திலுள்ள மக்கள், கிளர்ச்சியில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். அந்த கிளர்ச்சியானது, அரசாங்கத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். கடனுக்கு எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. இந்தியாவுடன் பேசி, அந்த உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுங்கள்" என ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.
 
அரசாங்கத்திற்குள் மாறுப்பட்ட கருத்துக்கள்
இலங்கையில் உணவுக்கான பஞ்சம் ஏற்படாது என்பதனை தான் உறுதியாக கூறுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.
 
 
 
எனினும், அரசாங்கத்தை அங்கம் வகிக்கும் வர்த்தக அமைச்சர் மாறுப்பட்ட கருத்தொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
 
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வீட்டுத் தோட்டங்களை செய்யுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
 
அதேபோன்று, இலங்கையில் உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டதாக, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.
 
நாட்டில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்கள் வகிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
 
அரசாங்கம் உணவுக்காக தட்டுப்பாடு வராது என கூறுகின்ற போதிலும், தாம் இன்றும் ஒரு நேரம் அல்லது இரண்டு நேரம் உணவை உட்கொண்டே வாழ்ந்து வருவதாக பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்