துபாய்க்கு இழுத்து வரப்படும் பனிப்பாறைகள்: பாலைவனத்தின் தண்ணீர் பிரச்சனை தீருமா?

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (14:44 IST)
மேகங்களைத் துளையிடும் வானளாவிய கட்டடங்கள் நிறைந்துள்ள பாலைவனம். சாத்தியமே இல்லாதவற்றையும் நிறைவேற்றிக்காட்டும் இடம். அதுதான் துபாய்.
 
பாலைவனப் பகுதியான துபாயின் தண்ணீர் பிரச்சனையைப் பனிப்பாறைகள் தீர்க்க உள்ளன. மாபெரும் பனிப் பாறைகளைக் கடல் வழியாகத் துபாய்க்குக் கொண்டு வந்து அவற்றின் மூலம் தண்ணீரைப் பெறுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
 
கப்பல்களின் மேல் இந்த பனிப்பாறைகளை ஏற்றாமல், கடல் வழியாக மிதக்க வைத்து நகர்த்துவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நுட்பமாகும். இந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றால், ஆஸ்திரேலியா மட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா வழியாகவும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பனிப்பாறைகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், கொண்டு வரும் வழியிலேயே அவை உருகிவிடாதா? "இந்த திட்டத்தை உருவகப்படுத்திப் பார்த்தபோது, கொண்டு செல்லும் வழியில் பனிப்பாறையில் இருந்து 30 சதவீதத்தை இழக்க நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பனிப்பாறைகள் 300 முதல் 500 மில்லியன் கியூபிக் கேலன்கள் அளவிற்கு தண்ணீரை கொண்டுள்ளதால், இழப்பீடு தவிர்த்து மற்றவற்றைக் கொண்டு வந்தாலே அது பெரிய வெற்றிதான்," என்கிறார் அப்துல்லா.
 
"இந்த பனிப்பாறைகள் அண்டார்டிகாவின் பாதுகாக்கப்பட்ட மண்டலத்திலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன. சர்வதேச கடற்பரப்பு சட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் இவற்றை தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் கைப்பற்றி நீர் ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே யார் இதை கொண்டு செல்கிறார்களோ அவர்களுக்கே இது சொந்தம்," எனவும் அவர் கூறுகிறார்.
 
குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கான பாசன ஆதாரமாகவும் இருப்பது மட்டுமன்றி, உலகின் நல்வாழ்வுக்கே இது பங்களிக்கும் என்று நம்புகின்றனர். பனிப்பாறைகள் மூலம் கிடைக்கும் தண்ணீரால் தங்களது பாலைவனத்தைப் பசுமையாக மாற்ற முடியும் என துபாய் நம்புகிறது.
 
வியப்பளிக்கும் விதமாக இதற்கு முன்னர் பலரும் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க இந்த திட்டம் கைகொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்