போதைப்பொருள் வர்த்தகம் - இலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2019 (18:13 IST)
இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ அருகே போலீஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.50 அளவில் நடந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
 
அக்குரஸ்ஸ காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஊருமுத்த பகுதியில் கடந்த மே 22ஆம் திகதி சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பொன்றின்போது, சந்தேகநபர் ஒருவரினால் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
 
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் கம்புறுபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரை கைது செய்யும் வகையிலேயே இன்று அதிகாலை ஊருமுத்த பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
 
இதன்போது, சந்தேகநபரினால் போலீசார் நோக்கி மீண்டும் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
 
இதையடுத்து, போலீஸார் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
 
இவ்வாறு காயமடைந்த நபரை போலீஸார் அக்குரஸ்ஸ மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும், அவர் உயிரிழந்திருந்ததாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
 
சம்பவத்தில் ஊருமுத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதான சந்தேகநபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்