சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

Mahendran

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (17:48 IST)
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை இணைப்பதற்கான திட்டத்திற்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 
 
முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்திலும் பிரதமரிடமும் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒப்படைக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, இந்தத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பதற்கான கொள்கை முடிவுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
இந்த ஒப்புதலின்படி, அடுத்த மூன்று மாதங்களுக்குள் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, பரங்கிமலை - வேளச்சேரி இடையே 5 கி.மீ. தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், 4.5 கி.மீ. தூரத்திற்கான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் இந்த செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும்.
 
இந்த இணைப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு, வேளச்சேரி, திருவான்மியூர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் பரங்கிமலை வழியாக தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் வரை எளிதாக பயணிக்க முடியும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்