தேவசகாயம்: வத்திக்கான் தேவாலய விழாவில் ஒலித்த 'தமிழ்த்தாய் வாழ்த்து'

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (13:16 IST)
(இன்றைய (மே 15) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

1700களில் பிறந்த தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவசகாயத்துக்கு, வத்திகான் தேவாலயத்தில் புனிதர் பட்டம் வழங்கும் விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.  

தமிழகத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா இன்று ரோம் நகரில் நடைபெறவுள்ளது. முன்னதாக, செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அருட்சகோதரிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "தமிழக மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழக மக்கள் சார்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. அன்பு தான் எல்லாம் என்றிருக்கும் இந்த உலகில் அன்பைப் பரிமாறி கொள்ளத்தான் அன்பு மூலம் உங்களுக்கு நன்றி சொல்ல தான் முதல்-அமைச்சர் எங்களை இங்கு அனுப்பினார்" என்று தெரிவித்தார்.

"கோட்டாகோகம"வுக்கு உதவிகளை வழங்க விசேட குழு

இலங்கையில்  தற்போதைய நிலைமை குறித்து ஞாயிற்றுகிழமையன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக இலங்கை நாளிதழான  'தமிழன்'  செய்தி வெளியிட்டுள்ளது.

இதே வேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள "கோட்டாகோகம" போராட்ட தளத்தை பராமரிப்பதற்காக குழுவொன்றையும் பிரதமர் நியமித்துள்ளதார் 

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, ருவன் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு,ராணுவம் மற்றும் காவல்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரிடம் "கோட்டாகோகம" வளாகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு பிரதமர் பணித்துள்ளார்.

போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், போராட்டத் தளங்கள் மீது ஒடுக்குமுறை முயற்சிகள் நடைபெறாது என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

'செல்போன் பயன்படுத்துவதில் இந்திய  குழந்தைகள் முதலிடம்'

செல்போன் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியக் குழந்தைகள் அதிக முதிர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்வதாக மெக்கபே நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது  என்று  'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர், சிறுமியரின் விகிதம் 83 சதவீதமாகும். இது சர்வதேச அளவான 76%-ஐ விட அதிகமாகும். இதன் காரணமாக ஆன்லைன் மூலமான நிகழும் பாதிப்புகளுக்கு இலக்காகும் அபாயம் அதிகமாக உள்ளது. சைபர் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர், சிறுமியரின் விகிதம் 22 சதவீதமாக உள்ளது. இது சர்வதேச அளவில் 17 சதவீதமாகும்.

சர்வதேச அளவில் தங்கள் குழந்தைகள் ஆன்லைன் பயன்படுத்துவதை கண்காணிப்பது அவசியம் என்பதை 90 சதவீத பெற்றோர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் 56 சதவீத பெற்றோர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் சங்கேத வார்த்தை பயன்படுத்தி, குழந்தைகள் தங்களது ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை தடுத்துள்ளனர். 42 சதவீதம் குழந்தைகளின் ஸ்மார்ட்போனுக்கு பெற்றோர்களே சங்கேத வார்த்தையைப் பயன்படுத்தி பாதுகாத்துள்ளனர். இருப்பினும் ஆன்லைன் சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்க பெற்றோர்களை எதிர்நோக்கும் சிறுவர், சிறுமியரின் எண்ணிக்கை 72%-மாக உள்ளது.

ஆன்லைன் மூலமான பாதக அம்சங்களை எதிர்கொள்வதில் இந்தியக் குழந்தைகளின் விகிதம் மிக அதிகமாகும் என்று மெக்கபே நிறுவன துணைத் தலைவர் சச்சின்புரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்