டிடி ரிட்டர்ன்ஸ் விமர்சனம்: சந்தானம் பேய் காமெடியில் கம்பேக் கொடுத்தாரா?

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (21:39 IST)
சதீஷின்(சந்தானம்) காதலியான சோஃபியாவை(சுரபி) புதுச்சேரி டானாக இருக்கும் அன்பரசுவின்(ஃபெப்சி விஜயன்) மகன் பென்னிக்கு கட்டாய திருமணம் முடிக்க முடிவு செய்கின்றனர்.
 
இந்தத் திருமணத்திற்காக கைமாற்றப்பட்ட பணத்தை திரும்பக் கொடுத்து தனது காதலியை டான் அன்பரசுவிடம் இருந்து காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதுதான் இன்று (ஜுலை 28) வெளியாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் கதைச் சுருக்கம்.
 
தமிழ் சினிமாவின் சக்சஸ் பார்முலாக்களில் ஒன்றான ஹாரர் காமெடி வகையைத் தேர்வு செய்துள்ளார் இயக்குநர் பிரேம் ஆனந்த். ‘குளு குளு’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ போன்ற சீரியசான படங்களுக்குப் பிறகு மீண்டும் காமெடி படத்துக்குத் திரும்பியிருக்கிறார் நடிகர் சந்தானம்.
 
க்ளிஷேவான காட்சிகளின் மூலம் பார்வையாளர்களை அயர்ச்சியடையச் செய்திருக்கிறார்களா அல்லது காமெடி கேங்ஸ்டர்களை வைத்து கலக்கியுள்ளார்களா?
 
இந்தப் படத்தின் பல்வேறு விமர்சனங்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
 
காட்சிகளுக்கு ஏற்ப டைமிங் காமெடிகளில் ஸ்கோர் செய்துள்ள நடிகர் சந்தானம்
 
சந்தானத்தின் முந்தைய படங்களில் விமர்சனத்திற்கு உள்ளான உருவ கேலி சம்மந்தமான காட்சிகளையும், காமெடிகளையும் இந்தப் படத்தில் தவிர்த்துவிட்டு, காட்சிகளுக்கு ஏற்ப டைமிங் காமெடிகளில் நடிகர் சந்தானம் ஸ்கோர் செய்துள்ளதாகக் கூறியுள்ளது இந்து தமிழ்- திசையின் விமர்சனம்.
 
உருவகேலி தொடர்பான காமெடி காட்சிகளை தவிர்த்தது மட்டுமின்றி, அதை சுயபரிசோனைக்கு உள்ளாக்கி அந்த சுய விமர்சனத்தை காட்சியாகவும் படத்தில் வைத்திருந்தது பாராட்டுக்குரியது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது.
 
நடிகர் சந்தானத்தால் மட்டுமே சீரியசான ஒரு படத்திற்குப் பிறகு இப்படி காமெடியான படத்தையும் கொடுக்க முடியும் என்றும், ‘குளு குளு’ விற்கு பிறகு ஒரு ‘பாரீஸ் ஜெயராஜ்’ படமும், ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்திற்குப் பிறகு ‘தில்லுக்கு துட்டு’ வகையான படமும் நடிகர் சந்தானத்திற்கு மட்டுமே கிடைப்பதாகவும் கூறியுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
 
'படத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரேயொரு பாடலும் இல்லாமல் இருந்திருக்காலம்'
 
படத்தின் முதல் 20 நிமிடங்களில் பல கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இயக்குநர் பிரேம் ஆனந்த், சராசரி ஹாரர் படமாக மாறிவிடுமோ என்ற பார்வையாளர்களின் அச்சத்தை படத்தின் மீதிப் பகுதியில் போக்குயிருக்கிறார் என்று விமர்சித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.
 
படத்தின் முதல் பாதியில் கதைக்கான களத்தை முழுவதுமாக அமைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் அனைத்து கதாப்பாத்திரங்களின் பங்களிப்புடன் படத்திற்கே உரிய ஹாரர் வகைக்குள் நுழைவதாகச் சொல்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.
 
அதேவேளையில் படத்தின் முதல் 20 நிமிடங்களில் மட்டும் ஒரு பாடல் அமைக்கப்பட்டிருந்தது ஆறுதல் என்றும், மீதி இடங்களில் தேவையில்லாத காதல் காட்சிகளோ பாடல் காட்சிகளோ இல்லாமல் இருப்பது படத்திற்குக் கூடுதல் பலம் என்று விமர்சித்துள்ளது இந்து-தமிழ் திசை.
 
ஆனால், படத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த ஒரு பாடலும்கூட இல்லாமல் இருந்திருக்காலம் என்பது இந்தியன் எக்ஸ்பிரஸின் விமர்சனம்.
 
ரசிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ள 'பேய் பங்களா'
பேய் பங்களாவுக்குள் நடக்கும் காட்சிகள் ரசிக்கும்படியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒளிப்பதிவாளர் தீபக்கை பாராட்டியுள்ளது இந்து தமிழ் திசை நாளிதழ்.
 
எப்போதும் ஒரு குறுகிய இடத்திலோ அல்லது வீட்டிலோ ஹாரர் படங்கள் காட்சியாக்கப்பட்டால் ஏற்படும் அயர்ச்சி, இந்தப் படத்தில் ஏற்படாதவாறு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதற்கு கலை இயக்குநர் ஏஆர் மோகனுக்கும் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதிக்கும் முழு மதிப்பெண்களைக் கொடுத்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
 
படத்தின் இரண்டாவது பாதியில், படத்தில் உள்ள துணை நடிகர்களின் பங்கை இந்து தமிழ் திசை மற்றும் தினமணி நாளிதழ்கள் பாராட்டியுள்ளன.
 
“மாறன், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பழைய ஜோக் தங்கதுரை, குறிப்பாக பெப்சி விஜயன், பிபின், தீபா ஆகியோர் நகைச்சுவையில் கவனம் பெறுவதுடன் கதாபாத்திரங்களுடன் பொருந்திப் போகிறார்கள்,” என்று இந்து தமிழ் திசை கூறியுள்ளது.
 
அடுத்த நொடியில் நடக்கும் காட்சிகளை கணிக்கும் வகையில் படம் அமைத்துள்ளது, படத்திற்கான பின்னடைவு எனவும் விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசை.
 
பேய் படமானாலும் ரசிகர்களை சிரிக்க வைக்க எங்களால் முடியும் என்ற வகையில் இருக்கும் டிடி ரிட்டர்ன்ஸ் ரசிகர்கள் விரும்பக் கூடியதாக இருக்கும் என்று தினமணி விமர்சனம் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்