ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு உதவியாக இருந்த மொழிபெயர்ப்பாளர்கள் ஆபத்தில் இருப்பதால் அவர்களை மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.
இம்மாத இறுதி வாரத்தில் இதற்கான "Operation Allies Refuge" என்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் பல்வேறு முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். பல இடங்களில் முன்னேறி வருகின்றனர்.
மொழிபெயர்ப்பாளர்கள் மீட்கும் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி செய்தியாளர்களிடம் விளக்கினார்.
"அவர்கள் துணிச்சலானவர்கள். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் செய்த மதிப்புமிக்க பணியை அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்" என்றார் அவர்.
இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிகாரி ஒருவர், "முதற்கட்டமாக விசா விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும்வரை, மீட்கப்படும் சுமார் 2,500 பேர் அமெரிக்காவிலோ அல்லது வேறு நாட்டிலோ உள்ள அமெரிக்காவின் படைத்தளத்தில் தங்க வைக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.